சமூகவலைத்தளம் ஊடகப்பரப்பாக வளர்ச்சி பெற்றுள்ள பின்னணியில் செய்திகளை இலகுவாக மற்றும் துரிதமாக பெறக்கூடியதாக உள்ளது. எனினும் சமூகவலைத்தள பாவனையாளர்கள் அனைவருமே ஊடகவியலாளர்களாக காணப்படுகின்றமையால் செய்தியின் மீதான நம்பத்தன்மை முழுமையாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
இவ்வாறான களத்திலேயே கடந்தவாரம் வன்னி நிலப்பரப்பில் தொழில்புரியும் பெண் மருத்துவர் மீதான அச்சுறுத்தல் என்பது சமூகவலைத்தளத்தினூடாக பெரும் பூதாகாரமாகியது. பாராளுமன்றம் வரை பேசுபொருளாக்க கூடிய சூழலை உருவாக்கியது. சமூகவலைத்தளத்தில் உருவாக்கப்பட்ட செய்தி ஒரு வார காலத்தினுள்ளேயே முழு ஊடகங்களையும் நிரப்பி இருந்தது. ஊடகங்களும் அதிகம் பிரதியிடலாகவே கடந்து சென்றுள்ளது.
அதேநேரம் குறித்த மருத்துவர் தொழில் புரியும் பிரதேசத்தில் பாடசாலையொன்றில் கண் பரிசோதனை சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்தித்தாளொன்று புலன்விசாரணை கட்டுரை வெளியிட்டுள்ளது.
இச்செய்தியின் பின்பே பலரும் மெய்ப்பொருளை தேட முற்பட்டார்கள். பொதுவெளியில் பகிரப்பட்ட பெண் வைத்தியரின் தொலைபேசிக்குரல்களில் உள்ள முரண்நகைகளை தேடிக்கண்டறிந்தார்கள். ஒருவாரங்கள் முன் Stand with Hashtag(#) போட்டவர்களெல்லாம் வசை பாட தொடங்கினார்கள். சிலர் அமைதி கொண்டார்கள். எனினும் இங்கு இன்னும் மெய்ப்பொருள் அறியப்படவில்லை என்பதுவே நிதர்சனம்.
சமூகத்தின் பலவீனமான அம்சங்களை கொண்டு பலரும் தம் பிழைகளை மூடி மறைத்து செல்லவே முயற்சி செய்கிறார்கள். அதற்கான களங்களையும் நாமே திறந்து விடுகிறோம். எதிலும் யாவற்றிலும் “மெய்ப்பொருள் காண்பதே அறிவு.”
1 comment