இதழ் 44

பாட்டும் நானே பாவமும் நானே!

மனிதனின் ரசனையின் உச்ச பரிணாமம் இசை.

இறைவனின் மொழி, இயற்கையின் மொழி என்று உயர் அந்தஸ்த்தில் வைத்து போற்றப்படும் அதே இசைக்கும் மனிதன் பிரிவினை வர்ணம் பூசியேயிருக்கிறான். அந்த நிலையில் இசை புரட்சியின் மொழியாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும்”

தமிழிசை என்றால் தேவாரங்கள் என்று தொடங்கி, பின்னர் அரசவை புலவர்கள் எழுதும் பாடல்கள் என்று தொடர்ந்து பல கவிஞர்கள், பாணர்கள், இசை வித்துவான்கள் கடந்து திரையிசையாக மலர்ந்தது. திரையிசையான போது தான் இசை வெகுஜன சொத்தானது. அந்த திரையிசையில் ஒருவன்,

//மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது//

1970 களின் இறுதியில் திரையிசையின் அத்தனை கட்டுக்களையும் உடைத்துக்கொண்டு தமிழர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பெரு வெள்ளமென்று பாய்ந்தான் ஒருவன். அவன் தான் ராசையா என்ற இளையராஜா.

//சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே//

பின்நாளில், தமிழிசையின் சக்கரவர்த்தியாக வாழ்ந்த ராஜாவை பெற்றவளின் பெயரை ‘சின்னத்தாய்’ என்று வாலி பதிவு செய்து வைக்கிறார்.

//ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை//

என்று ஒட்டு மொத்த திரையுலகமுமே உச்சுகொட்டிக் கொண்டாடிய ராசையா, ஆரம்ப நாட்களில் இசையில் மேல் கொண்ட காதலால் மேடைகளில் ஆர்மோனியம் வாசித்து வாழ்வை தொடங்குகிறார். எளிய மக்களின் பிரதிநிதியாக களத்துக்கு வந்தவனை பலரும் கொண்டாடும் நிலைக்கு உயர்த்தியது அவன் இசை.

//காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்//

அவன் கொடுத்த இசை – தமிழிசைக்கே கடவுள் கொடுத்த வரமென்ற போது, அவன் மெட்டுக்கள் அத்தனை நெஞ்சங்களையும் கட்டிப்போட்டது. அவன் இசை சாம்ராஜ்ஜியத்தின் பேரரசனாக கர்வத்தோடு ஆட்சி செய்த காலங்களில் பக்தர்கள் போல ரசிகர்கள் அவனை கொண்டாடினார்கள்.

//இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்…..
எனக்கே தான்//

எத்தனையோ ஆயிரம் பாடல்களுக்கு இசை அமைத்து கோடானு கோடி மனிதர்களின் கண்ணீர் துடைத்து, வாழ்வில் மகிழ்ச்சி நிரப்பி இவர்களுக்குள் காதலையும் பிறக்க செய்தான் ராஜா.

‘ காதல் கசக்குதையா…’ என்ற பாட்டில் ராஜா இப்படி பாடுவார்,

//இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு//

இப்படியாக, ஒரு காலத்தில் காதலிக்கும் இளையவர்களுக்காக இசைத்தவனின் திரையிசைக் காலம் மாறியது. ஆனால் அவன் மீட்டிய இசை இந்த மனிதர்களுக்குள் அப்படியே அதிர்ந்து கொண்டிருந்தது.

**

அவன் இசையை தாய்பால் குடிக்கும் காலத்திலிருந்தே கேட்டு வளர்த்தவர்களில் ஒருவன், ராஜா ரசிகனாகி பின்னாளில் கவிஞனாகும் போது இசையால் ராஜா மேல் கொண்ட காதலை தான் எழுதும் காதல் கவிதைகளில் உவமையாக்கி மகிழ்கிறான்.

அவர் தான் கவிஞர் யுகபாரதி.

காதலின் அத்தனை கொண்டாட்டத்துக்கும் ராஜாவின் மெட்டுக்கள் கொடுத்த சந்தோஷத்தை இணைக்கிறார்.

அதாகப்பட்டது மகா ஜனங்களே! படத்தில் ‘ஏனடி நீ என்ன இப்படி ஆக்கினாய்…’ பாட்டில ஒரு வரி,

//மெட்டில் இசைஞானி என்றும் அழகாக
செய்கின்ற மாயம் போல
என்னில் பல நூறு இன்பம் தர நீயும்
வந்தாயே கூடி வாழ//

ராஜா இசையில் செய்த புதுமைகளும் பரீட்சார்த்த முயற்சிகளும் அவன் செய்த ஜாலங்களும் காதலில் கிடைக்கும் உம்மத்தத்துக்கு சமன் என மெச்சுகிறான் காதலன்.

சீமராஜா படத்தில் ‘மச்சக்கண்ணி கொஞ்சம் கேட்டு பாரேன்….’ பாட்டில ஒரு வரி,

//மூச்சில விஷ ஊசி போட்டு
போற நீ இசைஞானி பாட்டு//

இசையை கேட்பது காதுகள் தானே! இதென்ன மூச்சில விஷ ஊசியும் இளையராஜா பாட்டும்?

இசைஞானி பாடலில் வரும் போதை – அது கொடுக்கும் சந்தோஷ பெரு வெள்ளத்தில் திக்கித்தவிக்கும் அதே நிலை தான் காதலியை காணும் போதும். நெஞ்சு படபடப்பு, மூச்சு எடுக்க சிரமம் போன்ற பரிவு நரம்புத்தொகுதியின் ஆட்கொள்ளலில் சந்தோஷ சிலிர்ப்பு இது. காதலெனும் விஷமும் இசை எனும் போதையும் ஒன்றாய் சுகித்த ரசிகனின் அனுபவம்.

“பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்”

காதலினால் உள்ளூறும் சிலிர்ப்பு, காதலியை பார்க்கும் போது வரும் மனவெழுச்சி இரண்டையும் ராஜாவோடு இணைத்து மகிழ்ந்தவன், காதலியின் தொடுகையையும் ராஜாவின் மெட்டுக்கள் கொடுக்கும் தொடுகையோடு சங்கீதமாக்குகிறான்.

குக்கூ படத்தில் ‘பொட்டபுள்ள தொட்டதுமே…’ பாடலில ஒரு வரி

//எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா எனை தொட்டது போல் தொட்டுவிட்டாள் அழகு ரோஜா//

தொடுகை – விரல்களில் உள்ள நரம்பு முடிவிடங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது பாயும் சிறிய மின்சாரம். விஞ்ஞானத்தனமாக சொன்னால், தொடுகையின் போதானா மின்சார கிளர்ச்சியை விட, மூளை எனும் சிக்கலான மின் சுற்றில் பல மடங்கு வோல்ற்றளவை தூண்டக்கூடியது இசை. இவளின் தொடுகையும் முன்னர் என்னை மயங்க செய்த ராஜாவின் இசையை மீட்டுகிறது என்றால், காதலும் அவன் இசையும் ஒரே மீடிறன். பரிவு நடக்கிறது.

“அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே”

மெகந்தி சேர்கஸ் படத்தில் ‘கோடி அருவி கொட்டுதே..’ என்றொரு பாட்டு. அதில ஒரு லைன்.

//நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்டா பொங்கி வழிஞ்ச//

காதல் ஊடல் தாண்டி கூடலுக்கு ஒத்திகை பார்க்கும் போதும், நிலவு நீந்தும் நள்ளிரவில் இன்னொரு நிலவாய் இவள். அவன் இளமையை உசுப்பிவிட்டு கூட இருக்கும் போது ‘இரவில் கேட்கும் இனிமையான இளையராஜா பாடல்களால்’ செய்த ஆலாபனையாகவே காதலி தெரிகிறாள்.

“தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி
நாத்து
அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு”

**

உண்மையை சொன்னால், ராஜாவின் சம காலத்தில் அவன் நிகழ்த்திய இசை சாகசங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அன்று தொழில்நுட்பம் வளர்ந்திருக்கவில்லை. இன்றைய எலக்ரோனிக் தலைமுறை தான் அவன் தந்த இசையின் பல்வேறு பரிமாணங்களையும் தேடி தேடி ரசித்து வியக்கிறது.

இன்னும் காலங்கள் போனாலும் தமிழ் இசை என்றால் அது இளையராஜா எனும் கொண்டாட்டம் நீளும்.

// நேற்று இல்லே நாளை இல்லே
அட எப்பவும் நான் இராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்ல
அப்பவும் நான் ராஜா
ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா//

Related posts

பெண்மைக்கு கிடைத்த கௌரவம் வானவன் மாதேவி ஈச்சரம்

Thumi202122

வினோத உலகம் – 10

Thumi202122

ஈழச்சூழலியல் 30

Thumi202122

Leave a Comment