வெப்பத்தினால் நீர் மாசடைதல்
சில தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகளை குளிரூட்டும் உபரகரணங்களுக்கு உட்படுத்திய போதிலும் கூட இறுதியில் அவை உயர் வெப்பநிலையையே கொண்டுள்ளன. அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகளில் இவ்வாறான மாசுக்கள் பொதுவாகக் காணப்படும். அறை வெப்பநிலையை விட இவற்றின் வெப்பநிலை 6 தொடக்கம் 16 பாகை செல்சியஸ் அதிகமானதாக இருக்கும்.
சில நீர் உயிரினங்கள் தமது வசிப்பிடத்தைத் தெரிவுசெய்வதில் வெப்பநிலை ஆனது முக்கிய இடத்தினை வகிக்கின்றது.உதாரணமாக விஞ்சிறால் மீன்கள் குளிரான வெப்பநிலையை விரும்புகின்றமையை குறிப்பிடலாம். அத்துடன் அறை வெப்பநிலையை விட அதிகளவான வெப்பநிலை உள்ள இடங்களில் இவை இனப்பெருக்கம் அடைவதில்லை. குறைந்தளவில் விரும்பப்படும் கார்ப் (Carp) போன்ற மீன்கள் வெப்பத்தினால் மாசடைந்த நீரில் அதிகரித்து காணப்படுகின்றன. கழிவு நீரின் வெப்பநிலை 37 பாகை செல்சியஸ் ஐ விட அதிகமாகும் போது சேதன கழிவுகளை படியிறக்கமடையச் செய்யும் நுண்ணுயிர்களின் தொழிற்பாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும்.
கடந்த இரு தசாப்தங்களில் உலகளாவிய ரீதியல் கடல் மட்டம் 11 மில்லி மீற்றர் உயர்ந்துள்ளதாக நாசாவையும் (NASA) ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தையும் (European Space Agency) சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது உலகம் வெப்பமடைவதால் துருவ பனி உருகுவதால் ஏற்பட்டது.
துருவக்கரடியின் முக்கிய உணவு கடல்நாய்(Sea Dog) ஆகும். துருவக் கரடி 10 தொடக்கம் 15 மைல்கள் வரை நிலத்திலுள்ள பனிப் பாறை மீது வெடிப்புகளைத் தேடி தினமும் நடக்கிறது. இந்த வெடிப்புகளினூடாக பனிக்கட்டியின் கீழே உள்ள நீரில் நீந்திச் செல்லும் கடல் நாய்களை அணுக வழிவகுக்கிறது. ஒரு மைலுக்கு அப்பால் உள்ள கடல் நாயை மோப்பம் பிடிக்கும் சக்தி துருவக் கரடிக்கு உள்ளது என கூறப்படுகிறது. அண்மைக் காலங்களில் ஏற்பட்ட துருவங்கள் வெப்பமடைவதன் காரணமாக பனி உருகத் தொடங்கியதனால் தொடர்ச்சியான பனிப்பாறைகள் வெகு அரிதாகவே காணப்பட்டது. இதனால் உணவு தேடி, கரடிகள் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கு நீந்திச் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. பல துருவ கரடிகள் நீண்ட தூரத்திற்கு நீந்திச் செல்வதால் அவை களைப்புற்று நீரில் அமிழ்ந்து இறந்தன என அறிக்கைகள் கூறுகின்றன. 2060 ஆம் ஆண்டளவில் துருவக் கரடிகள் அழிந்து போகுமென உலக கானக விலங்குகள் நிதியம் (World Wild Life Fund) 2022 ம் ஆண்டில் எச்சரிக்கை விடுத்துள்ளது.பனி உருகுதல் இந்த அபாய எச்சரிக்கை விடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
உள்ளூர் நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவதற்கான நியமங்கள்
அபிவிருத்தியடைந்துள்ள நாடு களிலுள்ள பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், ஏனைய நீர் நிலைகள் என்பன தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளினால் மாசடைந்துள்ளன. தற்போது இந்தியாவும், சீனாவும் இதே பிரச்சி னைகளை எதிர்நோக்குகின்றன. இதன் விளைவாக பல நாடுகள் தமது நீர் நிலைகளை மாசுக்களிலிருந்து பாதுகாப்பதற்கு கடுமையான தர நியமங்களை உருவாக்கியுள்ளன. இலங்கையும் 1980ம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது 1990ம் ஆண்டின் 1ம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் என அழைக்கப்படுகின்றது. இவை 1990 பெப்ரவரி 02 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் உள்ளடக்கப் பட்டுள்ளது. உள்ளூர் நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான பொதுவான நியமங்களை வலியுறுத்தும் ஒழுங்கு விதிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர இறப்பர், புடவைக் கைத்தொழில், தோல் தொழிற்சாலைகள் என்பனவற்றி லிருந்து வெளியேறும் திரவக் கழிவுகள் சம்பந்தமான நியமங்கள் மேற்குறிப்பிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்கு விதிகளில் தரப்பட்டு ள்ளன. இந்த நியமங்களில் பொசுபரசு சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விதிகளை மீறுவோரிற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 1980ம் ஆண்டின் 47ம் இலக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீறுவோரிடமிருந்து தண்டப் பணத்தை அறவிடலாம் அல்லது தொழிற்சாலையை அல்லது வர்த்தக நிலையத்தை அல்லது கடையை மூடிவிடலாம்.
எப்போதும் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தற்போது காணப்படும் தொழிற்சாலைகளும் தமது உற்பத்திச் செயற்பாடுகளை தொடர்ந்தும் மாற்றிக் கொண்டேயிருக்கின்றன. இதனால் தொழிற்சாலையின் திரவக் கழிவுகளில் புதிய பொருட்கள் சேரலாம். இவை நீர்நிலைகளிற்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம். இதனால், நீர் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்கள் எப்போதும் விழிப்பாக இருத்தல் வேண்டும். அத்துடன் காலத்திற்கேற்ப தேவைக்கமைய தொழிற்சாலை கழிவுகளின் நியமங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். புவியில் நீர் நிலைகள் மாசடைவது அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதற்கு மானிடர்களின் பொறுப்புணர்வை நாம் ஓரளவு அறிந்துள்ளோம். இதனை நாம் மேற்கொள்ளாத போது உலகில் பெரும்பாலான பாகங்களில் உயிரின வாழ்க்கைக்கு பெரும் ஆபத்துக்கள் ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நற்போசணையாக்கம்
தாவரப் போசணைச்சத்துக்களினால் நீர்நிலைகள் வளமூட்டப்படுவதை நற்போசணை என வரைவிலக்கணம் செய்யலாம். உயர்ந்தளவில் தாவரப் போசணைச்சத்துக்கள் காணப்படும் போது நீர்நிலையொன்றில் அளவிற்கதிகமான தாவர வளர்ச்சி ஏற்படும். இவ்வாறான நிலையில் நீர்நிலையின் பெரும் பகுதி அல்காக்களினால் மூடப்பட்டிருக்கும். இது அல்காக்களின் மலர்ச்சி எனக் குறிப்பிடப்படும். 1960 களில் வடஅமெரிக்காவில் நுசநை குளத்தில் பாரிய அல்கா மலர்ச்சி; ஏற்பட்டமை சர்வதேச விஞ்ஞான சாட்சியென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வடமத்திய மகாணத்தில் உள்ள அநேகமான நீர்த்தேக்கங்களில் அதிகளவு பொசுபரசு காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. காலத்துக்குக்காலம் பல பாரிய நீர்த்தேக்கங்களில் அல்கா மலர்ச்சி ஏற்பட்டள்ளது. சில அல்கா இனங்கள் மிக நச்சுத் தன்மையானவை ஆகும். இலங்கையில் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் குடிநீர் மூலங்களாக இருப்பதால் இது நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டியதொரு அம்சமாகும். இரசாயனப் பசளைகள் மற்றும் விலங்குப் பசளைகளின் அதிகரித்த பாவனை, கூடிய மழைச்செறிவு, மண்ணரிப்பு என்பன பொசுபரசை நீர்நிலைக்குச் சேர்க்கும் வழிகளாகவும், அதிபோசனையை ஏற்படுத்தும் பிரதான காரணிகளாகவும் இனங் காணப்பட்டுள்ளன. நற்போசணை அடைந்த நீர்நிலையொன்றை பழைய நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் எடுப்பதோடு, மிகவும் செலவு ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும்.
ஆராய்வோம்……..