இதழ் 45

சிங்ககிரித்தலைவன்-40

புதிய மழை

உலகம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செயலிலும் தான் உலகம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சுழல்கின்றது. ஒவ்வொரு செயல்களுக்கும் இடையில் ஏதோ ஓர் பிணைப்பு இருந்து கொண்டே இருக்கின்றது. அது ஒரு கோர்வையாக அல்லது சங்கிலித் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பல்வேறு செயல்கள் நடந்தேறக் காரணமாய் அமைகின்றது. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு இலை உதிர்கின்றது என்றால், அது உலகின் மறுமூலையில் ஒரு மலை உடைவதற்கு காரணமாகின்றது என்கிறார்கள். இதையே பட்டாம்பூச்சி விளைவு என்கிறது நவீன உலகம்.

இப்படியான ஒரு தொடர் நிகழ்வு ஒன்றின் இணைப்பு நிகழ்வாக அன்று பெய்த மழை அமைந்தது என்பதை நாம் பின்னர் தான் அறிந்து கொள்வோம். முகலனும், மகாநாமரும் அந்த ஆடல் குழுவின் கூடாரத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். இருவரின் தோற்றமும், அரச வம்சத்தவரின் சாயலோடு இருந்ததால், அந்த குழுவினர் இயல்பான ஒரு மரியாதையை இருவருக்கும் வழங்கினர். தங்களுடன் வந்தவர்களும் மழையில் தம்மை நனைத்துக் கொள்ளா வண்ணம் இன்னுமொரு கூடாரமும் வேக வேகமாக அமைக்கப்பட்டாயிற்று.

‘மிக்க நன்றியுடையோம், தஞ்சை செல்லும் வழியில் இந்த மழை எம்மை நோய்களுக்கு ஆளாக்கி யிருக்கும். ஆனால் உங்கள் உதவியால் நனையாது பிழைத்துக் கொண்டோம்.”

என்றுதன் இனிய முகத்தை ஈரம் துடைத்து மகாநாமர் அந்த கூட்டத்தின் தலைவனிடத்தில் அன்புபாராட்டினார்.

“என் பெயர் காலிங்கராயன் இதோ இவர்கள் என் நடனக் குழுவின் அங்கத்தவர்கள்… கோயில் திருவிழாக்களில் இறைவன் புகழைப்பாடி ஆடுவதும், பக்தர்களுக்கு அருள் பெருகும் கதைகளை நாடகம் மூலம் காட்டுவதும் எம் பணி. தங்களைப் பற்றியும் அறியவிரும்புகின்றோம்!”

அந்தக் கூட்டத்தின் தலைவன் தன் யாழின் ஒரு முனையை பிடித்து தந்திகளை இளக்கியவாறு வினவினான்!

‘காலிங்கராயரே உம்மை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி… நான் மகாநாமன்… இதோ இவன் என் பேரன் முகலன்… இவர்கள் என்னோடு தேச யாத்திரை செய்யும் தோழர்கள். எங்கெல்லாம் புதிய தேசங்களும், மக்களும் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று பழகி அனுபவித்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதி ஆவணப்படுத்துவது என் பணி!
கலை உங்கள் பணி, அது எப்படி இருந்தது என்று அடுத்த தலைமுறைக்குசொல்லிக்கொடுப்பது என்பணி!”

‘ஆகா..ஆகா.. வாழ்க உம் பணி கலையைக் காப்பவர்கள் நாமாக இருந்தாலும் அதன் வடிவங்களை கடத்துபவர்கள் நாமாக இருந்தாலும்… எங்கெங்கே எப்படி எப்படியான கலைகள் இருந்தன என்பதை ஆண்டுகள் கடந்தும் வரலாற்றைப் பேணிக் கடத்துவது மகத்தான பணிதான்! அது சரி நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்!”

‘நாம் இலங்கைத் தீவில் இருந்து வருகின்றோம்”

மகாநாமர் கூறி முடிப்பதற்குள் காலிங்கராயனின் முகம் கறுத்துப் போனது… ஆனால் அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு,

‘தேவகி… இவர்களுக்கு உண்பதற்கு ஏதும் உடனே தயார் செய்! “

என்று கூறவே, அவரின் அருகே நின்றிருந்த அழகி ஒருத்தி

‘அப்படியே ஆகட்டும் ஆசானே..” என்றவாறு தாம் கொண்டு வந்த பொட்டலம் ஒன்றை அவிழ்த்து ஏதோ உணவு தயாரிக்க ஏற்பாடானாள்.

‘இவள் தேவகி… எனது பிரதான மாணவி… மிகச் சிறந்த ஆடலரசி! உணவு தயாரிப்பதிலும் இவளே கை தேர்ந்தவள்!”

என்று தேவகியை சுட்டிக்காட்டவே அவள் சற்று வெட்கத்துடன் மகாநாமருக்கு வணக்கம் சொன்னாள்! தேவகியின் சமையல் திறத்தை காலிங்கராயர் சொன்னதும், முகலனின் சிந்தனை குழலியிடம் சென்று ஒட்டிக் கொண்டது! பெய்கின்ற இந்தக் கனமழையில் குழலியுடன் சேர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் என்று அவன் சிந்தித்திருக்க வேண்டும்… கூடாரத்தின் வாசலருகே வந்து கொட்டும் மழையை ஏக்கத்துடன்பார்த்தான்…

மகாநாமர் குழலியிடம் இருந்து தன்னை நீண்ட தொலைவு பிரித்து கூட்டி வந்து விட்டார் என்று எண்ணிய போது அவர் மீது சட்டென ஒரு வெறுப்பு தோன்றினாலும்… அனைத்தும் தன் நன்மைக்காகவே என்பதை எண்ணி சாந்தமடைந்தான். எப்படியாவது குழலியை மீண்டும் சந்தித்து விடுவேன் என்ற ஒரு நம்பிக்கை முகலனிடத்தில் முகிழ்த்தது.

‘இந்தாருங்கள் தம்பி இதனை உண்ணுங்கள்…” என்று தேவகி முகலனின் எண்ண நீட்சிக்கு எல்லை போட்டாள். திடுக்குற்று திரும்பிய முகலன் சிரித்து சமாளித்தவாறே, தேவகி கொடுத்த உழுத்தம் உருண்டையை வாங்கிக் கொண்டான்.

அதுவே அனைவருக்கும் பரிமாறப்பட்டது. வெல்லமும், உழுத்தம் மாவும் கலந்து பசு நெய்யும் சேர்த்து உருட்டப்பட்ட அந்த உருண்டை எல்லோருக்கும் தேவாமிர்தமாக இருந்தது. நீண்ட பயணத்தின் களைப்பும், அசதியும், அந்த உழுத்தம் உருண்டையால் தீர்ந்தது.

தஞ்சை நோக்கிச் செல்லும் காலிங்கராயர் தம்மோடு இணைந்து பயணிக்குமாறு மகாநாமரைக் கேட்டுக்கொண்டார். மகாநாமரிடம் அவர் அறிய வேண்டிய சில செய்திகள் இருந்தது. இலங்கையில் இருந்து மகாநாமர் வருவதாகச்சொன்னதும் அவரின் முகம் கறுத்ததுக்கு ஏதோஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும் என்பதை மகாநாமர் கணித்துவிட்டார். என்னதான் காலிங்கராயர் தன் முகத்தை மாற்ற நினைத்தாலும் அந்த இடைவெளியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கூட மகாநாமரின் கழுகுப்பார்வை கண்டுவிட்டது. பொறுமையாக அதை அறிந்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அவர் அறியாமலும் இல்லை.

வெளியே பெய்தமழை சற்று ஓய்ந்திருந்தது. காலிங்கராயருக்கும் மகாநாமருக்கும் உள்ளுக்குள்ளே ஒரு மழை கருக்கட்டத் தொடங்கியது.

மழை பொழியும்….

Related posts

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 04

Thumi202122

ஈழச்சூழலியல் 31

Thumi202122

வினோத உலகம் – 11

Thumi202122

Leave a Comment