இதழ் 45

சிவராத்திரி விரத மகிமை – 02

பாரத கண்டத்தில் சாகபுர தேத்துக்கு அண்மித்த காட்டில் அங்குலன் என்ற வேடன் வேட்டையாடி தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். ஓர் மகாசிவராத்திரி தினத்தில் எந்தவொரு இரையையும் அவனால் கைப்பற்ற முடியவில்லை. வெறுங்கையோடு திரும்பிச் செல்ல மனமில்லாதவனாய் அருகிலிருந்த நீர்நிலைக்கு இரவினில் நீரருந்த வரும் விலங்கை மறைந்திருந்து அம்பெய்து கொன்று இரையாக்கலாம் என்று முடிவெடுத்தான். இதற்காக, குறித்த நீர்நிலைக்கு அருகிலிருந்த ஓர் வில்வ விருட்சத்தில் ஏறி காத்திருந்தான். அந்த வில்வ விருட்சத்தின் அடியில் பலகாலத்துக்கு முன்பு ஓர் முனிவன் ஸ்தாபித்து பூஜித்த சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனை அவ்வேடன் அறிந்திருக்கவில்லை.

சிவராத்திரி விரதத்தின் முதற்சாம வேளையில் ஓர் பெண்மான் நீரருந்த குளத்தடிக்கு வந்தது. அதற்கு குறிவைக்க அசைந்த போது அவனது தோற்பையில் இருந்த நீர் மரத்தடியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தில் சொரிந்தது. மேலும், வில்முனை பட்டு சில வில்வ தளைகள் அச்சிவலிங்கத்தின் மீது வீழ்ந்தது. அவன் அறியாது செய்திருந்தாலுங்கூட சிவராத்திரி புண்ணிய காலத்தில் சிவலிங்கத்துக்கு நீர் இறைத்து, வில்வ தளத்தை சிவலிங்கம் மீது போட்டதால் சிவபூஜைப் பலனைப் பெற்றான். இச்சலனத்தால் குளத்தடிக்கு நீரருந்த வந்த மான், மரத்தை உற்றுநோக்கி அங்குலனிடம் தன்னைக் கொல்ல முனைவது ஏனோ என விறவிற்று. அவனும் தன் குடும்பத்தின் பசியாற்றவே என்று உண்மையை உரைத்தான்.

அந்தப் பெண்மானோ பெருமகிழ்ச்சி கொண்டதாய் உயிர்களுக்கு பசியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததை ஏற்றது. ஆனால், தனது குட்டிகள் தன்னை எதிர்பார்த்திருப்பதாகக் கூறி அங்குலனிடம் மீண்டும் வருவதாக சத்தியம் செய்து தன் குட்டிகளை தனது சகோதரியிடம் ஒப்படைத்து வரச் சென்றது.

காலஞ்சென்று சிவராத்திரியின் முதலாம் சாமம் முடிந்து இர‌ண்டாம் சாமம் ஆரம்பித்தது. குளத்தடிக்குச் சென்ற தன் உடன்பிறந்த மானைத்தேடி இளைய பெண் மான் வந்தது. அம்மானுக்கு அங்குலன் குறி வைத்த சமயம், முன்பு போல நீரும், வில்வ இலையும் சிவலிங்கம் மீது வீழ்ந்தது; சிவபூஜைப் பலன் கிட்டியது. மூத்த பெண் மானைப் போலவே இளைய பெண்மானும் மகிழ்ச்சியுற்று, தன் கடமைகளை முடித்து வருவதாக கூறிச் சத்தியம் செய்து சென்றது.

அங்குலனும் காத்திருக்கையில் இரண்டாம் சாமம் நிறைவுபெற்று மூன்றாம் சாமம் உதித்தது. அச்சமயத்தில் தனது துணை மான்களைக் காணாது ஆண்மான் குளத்தடிக்கு வந்தது. முன்பு போலவே வேடன் குறிவைத்தான்; நீரும் வில்வமும் சிவலிங்கம் மீது வீழ்ந்தது; சிவபூஜைப் பலன் கிட்டியது. ஆண்மானும் வேடனின் குடும்பத்தின் பசி நீக்குவதற்கு தானே வருவதாயும், அதற்கு முன்பு தன் குட்டிகளை தன் கூட்டத்தில் சேர்த்து விட்டு மீண்டும் வருவதாக கூறி சத்தியமியற்றிச் சென்றது.

பெண் மான்கள் இரண்டும், ஆண் மானும் தம் இருப்பிடத்தில் ஒன்றையொன்று சந்தித்து நடந்தவற்றைப் பற்றிக் கதைத்தன. பின்பு மூன்று மான்களும் தாம் வேடனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற தமது குட்டிகளை தமது கூட்டத்தில் சேரப்பித்து விட்டு குளத்தடிக்குத் திரும்பின. குட்டிகளோ தாமும் பெற்றோரின்றி வாழ்வதிலும் வேடனுக்கு இரையாகலாம் என்று எண்ணி பெற்றோரைத் தொடர்ந்து சென்றன. அது மூன்றாம் சாமம் நிறைவேறி நான்காம் சாமம் புலர்ந்த நேரம்.

இப்படியாக ஒரு மான்கூட்டமே தானிருக்கும் இடத்தை நோக்கி வருவதைக் கண்ட அங்குலன் மரத்திலிருந்து கவனமாக இறங்கினான். அப்போது கீழிருந்ந சிவலிங்கம் மீது நீரும், வில்வ பாத்திரங்களும் வீழ்ந்தன் சிவபூஜைப் பலன் பெற்றான் வேடன். இவ்வாறு மகாசிவராத்திரியின் நான்கு சாமங்களிலும் சிவலிங்க பூசை இயற்றியதால் சிவானுக்கிரஹத்துடன் ஞானமும் கிடைக்கப் பெற்றான் அங்குலன். தன்னை நோக்கி வந்த மான் கூட்டத்தை எண்ணி ‘ஐந்தறிவு மிக்க விலங்குகளே சத்தியத்தைக் காப்பாற்றி தர்மவழியில் நடக்கும் போது. ஆறறிவு படைத்த தான் மட்டும் கொலைகாரனாக இருப்பது எங்ஙனம் தகும்” என்று சிந்தித்தான். இவ்வாறாக பொழுதும் புலர்ந்தது.

சிவபுண்ணியத்தால் ஞானம் கைவரப் பெற்ற அங்குலனுக்கும், சத்தியத்தைக் காப்பாற்றிய மான்கூட்டத்திற்கும் முன்பு பரமபதியான சிவபெருமான் பிரத்யக்ஷமானார். சத்தியவான்களான மான்களுக்கு சிவலோக சித்தியை உவந்தளித்தார் பரமன். என்தானாயினும் முன்பு உயிர்வதை செய்த அங்குலனுக்கு உயர்ந்த மானுடப் பிறப்பை மறுபிறப்பிற்கு வழங்கியருளினார் எம்பிரான். கங்கா நதிக்கரையில் வேடர் குலத்தலவனாக குகன் என்ற நாமத்தோடு அவதரித்து, சிவபக்தராகத் திகழந்த ஸ்ரீராமருக்கு பட்கோட்டியாயும், உற்ற தோழனாயும் இருந்து ஈற்றில் சிவகதி வாய்க்கப் பெற்றார்.

இவ்வாறாக சிவமஹா புராணத்தில் மகாசிவராத்திரி விரதத்தின் தாற்பரியம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மேன்மைதங்கிய சிவராத்திரி விரதத்தை அங்குலன் மட்டுமின்றி சுகுமாரன், சவுமினி, கன்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோரும் விதிப்படி நோற்று சிவானுக்கிரஹமும் ஏனைய வரங்களும் பெற்றுய்தனர்.

‘மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
திருச்சிற்றம்பலம்

Related posts

கனவுகள்

Thumi202122

வினோத உலகம் – 11

Thumi202122

என்ன நடக்கிறது நாட்டில்?

Thumi202122

1 comment

Leave a Comment