1947ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் ஜவகர்லால் நேரு தொடக்கம் தற்காலத்தில் அரசியலில் நுழைந்துள்ள பிரியங்கா காந்தி வரை என இந்திய அரசியலில் நேரு பரம்பரையானது செல்வாக்கு செலுத்தி வருகின்றார்கள். இவர்கள் இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல் போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்கியவர்களாக காணப்படுகின்றார்கள். இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு தேசியக் கட்சிகளில் நேரு பரம்பரையின் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது. நேரு பரம்பரையினரில் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் தனித்தன்மையுடைய ஆற்றல் இந்தியாவுக்கு புதிய வடிவத்தையும் வண்ணத்தையும் கொடுத்துள்ளது. வெளியுறவுக் கொள்கையின் தன்மையும் திண்மையும் பிரதமர்களின் ஆளுமை ஆற்றலால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது
முடிவுரை
நேரு பரம்பரை என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல தென்னாசியப் பிராந்தியத்திலே செல்வாக்கிற்குரிய பரம்பரையாகக் காணப்படுகின்றது. இப் பரம்பரை அதிக மாற்றங்களை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலகில் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டியான இரண்டு விரோதமான முகாம்களாக இயங்கிய காலப்பகுதியில் புதிதாக சுதந்திரமடைந்த மூன்றாம் உலக நாடுகள் நேட்டோ மற்றும் வோர்சோ ஆகிய இரு அணிகளில் எதிலும் சேராமல் அவை தனித்துவமாக செயற்பட முயற்சித்தன. இவ்வாறு சர்வதேச அரங்கில் இரு முகாம்களிலும் சேராது தனித்துவமாக செயற்பட்ட நாடுகள் அணிசேரா நாடுகள் ஆகும். அணிசேரா இயக்கத்தின் தோற்றம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக காணப்படுகிறது. இத்தகைய அணிசேராக் கொள்கையை நேரு உலகத்திற்கு அளித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக இந்தியா மத்தியஸ்தமாகச் செயற்பட்டது. இங்கு ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இப் போரின் முடிவில் வங்கதேசம் என்ற நாடு உருவாகியது. இவ்வாறு பாகிஸ்தான் விவகாரத்தில் பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கி அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இந்திராகாந்தி ஈடுபட்டார். அந்த வகையில் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா தீர்மானம் எடுக்கும் சக்தியாக திகழ்வதற்கு நேரு பரம்பரையின் அரசியல் பங்களிப்புகள் அடிப்படையாக அமைந்துள்ளன எனும் இவ்வாய்வின் கருதுகோள் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இவ் ஆய்வின் நோக்கமும் அடையப்பட்டுள்ளது. இத்தகைய நேரு பரம்பரையின் அரசியல் செல்வாக்கானது உலக அரங்கில் அவர்களது சிறப்பிடம், சட்ட ஆக்கச் செயற்பாடுகள், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றில் நேரு பரம்ரையின் வகிபங்கு, தலைமைத்துவ ஆற்றல் மற்றும் மக்களுடைய ஆதரவு போன்றவற்றால் நேரு பரம்பரையானது இன்று வரை இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
உசாத்துணைகள்
கிருஸ்ணா அனந்த். வி., (2012), இந்திய அரசியல் வரலாறு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
சுமங்கலி.கே.இ,(2018), ‘இலங்கை இந்திய உறவும் கச்சதீவின் முக்கியத்துவமும்”, அரசறிவியல் ஒன்றியம்.
தமிழ்வாணன். எம். ஏ., (1985), “காங்கிரசின் தோற்றமும் வளர்ச்சியும்” மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
பிரியா. ரா., (2020.10.11), ‘ப்ரியங்கா இன்னொரு இந்திரா”, தினக்குரல் வார வெளியீடு.
Abbas. K. A., (1966), Indira Gandhi, popular prakashan.
Jayakar. P., (1995), Indira Gandhi a biography, Penguin group.
Nugent N., (1990), Rajiv Gandhi son of a dynasty, Bbc books – London.
Pawan sikka., (2008), Rajiv Gandhi his vision of the 21 st centry –science technology and national development, kalpaz publications –delhi.