1970களிற்கு பின்னர் 50ஆண்டு கால இடைவெளியில் மீளவும் இலங்கைத்தீவில் மக்கள் வரிசைகளுக்குள் நகர தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் தொடர்ச்சியான உறுதிமொழிகளுக்கு மத்தியிலும், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களும் பொருளாதார வல்லுனர்களும் இலங்கை பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நாளுக்கு நாள், சாத்தியமான இயல்புநிலை பற்றிய எச்சரிக்கை அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
வீதிகள் யாவற்றிலும் வாகனங்களும் மக்களும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பதிவுகளே இலங்கையின் காட்சியாக காணப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்கின்றது என்பதற்கு அப்பால் உணவுப்பொருட்களை வாங்கிக்கொள்வது பெரும் சிரமமாக உள்ளது.
மக்களின் கைகளை மீறிய நிலையாகவே இலங்கையின் பொருளாதார பிரச்சினை காணப்படுகிறது. இலங்கை பெருமளவு இறக்குமதி சார்ந்த நாடாகவே காணப்படுகிறது. எனினும் 2022இல் இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு நாணய கையிருப்பு $1 பில்லியனுக்கும் கீழே சரிந்துள்ளதால், இலங்கை இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக பல பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆக இலங்கை பொருளாதாரம் மீழ்ச்சி பெற வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதே ஆரோக்கியமானதாகும். உண்மையில், சர்வதேச நாணய நிதிய ஸ்தாபனத்திற்கான காரணம், அந்நிய செலாவணி நெருக்கடிகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவுவதாகும். ஆயினும்கூட, இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறவோ அல்லது கடனை மறுசீரமைக்கவோ பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதன் விளைவுகளை சுமப்போர் இலங்கை மக்களேயாகும்.
சமூகவலைத்தளங்களில் பலரும் சோமாலியாவின் வறுமை நிலவரங்களை இலங்கையுடன் ஒப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இப்பொருளாதார நெருக்கடி தொடரின் வறுமை பட்டிணிச்சாவு இயல்பாகும். அத்துடன் சமூகச்சீரழிவும் வந்துசேரும். வறுமையின் உச்சம் மனிதம் கருவறுக்கப்படும். தன் வயிற்றுப்பசியை போக்க இன்னோர் உயிரை மாய்க்க மனமும் புத்தியும் பணிக்கும்.
பொருளாதார நெருக்கடி பொருட்களை மாத்திரமின்றி மனிதத்தை தொலைதூரத்துக்கு நகர்த்திவிடக்கூடியது. பாதுகாப்பாய் இருங்கள் என்பதை தாண்டி வேறுவழியை சிந்திக்க இயலாத நிர்க்கதியிலேயே பயணிக்கிறோம்.
1 comment