இதழ் 45

சித்திராங்கதா – 44

சூட்சுமம்

ஈழத்தின் மகா துரோகியாக தனக்கு இதுவரை அறியவந்த வன்னியத் தேவனைப் பற்றி அதே ஈழத்தின் ஆடற்கலையின் அற்புதப்பெண் ஒருத்தி ‘அவர் உங்களிற்கு அப்படி என்ன துரோகம் செய்தார்?” என்று கேட்டால் வருணகுலத்தானால் என்ன பதில் கூறமுடியும்?

‘இது என்ன புது விந்தை? கடந்த நாட்களில் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிட்டதா என்ன ?” என்று அவனிற்குள் கேள்விகள் எழுந்தன. சித்திராங்கதாவின் அந்தக்கேள்விக்கு பதில் கூறுவதை விட்டு நிகழ்ந்திருக்கக்கூடிய சம்பவத்தை அறிவதிலேயே வருண குலத்தானின் சிந்தை இருந்தது.

‘தேவி! தாம் எங்ஙனம் வன்னியத்தேவன் கருத்தை அறிந்தீர்கள்?”

‘வன்னி வேந்தர் என்னை சந்திக்க அழைத்திருந்தார்.”

‘எதற்காக தங்களை சந்திக்க அழைத்திருந்தார்?”
அவன் முகத்தில் தெரிந்த கேள்விக்குறி அத்தனை பெரிதாய் இருந்தது.

நளினமும் புன்னகையும் மாறாத முகத்தோடு அவள் பதற்றமில்லாமல் பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

‘தங்களை சந்திப்பதற்காக என்னை சந்திக்க வந்தார். தங்களை சந்திக்க எதற்காக என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுவிடாதீர்கள். அதற்கு பதில் எனக்கு தெரியாது. அந்த பதிலை தாங்கள் வன்னியத்தேவரிடம் தான் கேட்க வேண்டும்.” எனக்கூறி நளினத்தோடு நகைத்தாள் சித்திராங்கதா.

அவள் கூறியது கேட்டு குளிர்வதா? இல்லை கூறியதற்குள் இருந்த குதர்க்கத்தை எண்ணி குழம்புவதா? என்று தெரியாமல் வருணகுலத்தானும் அவளுடைய இராகத்திலே சிரிக்கத் தொடங்கினான்.

அந்தச் சிரிப்பு சத்தம் குறையத் தொடங்கும் போது சித்திராங்கதா பேசத் தொடங்கினாள்.

‘ஆனால் வன்னியத்தேவர் எதற்காக தங்களை சந்திக்க விரும்புகிறார் என்பதை நான் அறிவேன்.”
‘எதற்காக?”

‘தங்கள் புத்தி சாதுர்யமும், விவேகம் மிக்க வீரமும் வீணாகி விடக்கூடாது என்பதற்காக என்று வைத்துக் கொள்ளலாம்.”

‘என் விடயத்தில் வன்னியத்தேவருக்கு அப்படி என்ன அக்கறை?” என்று வருணகுலத்தான் கேட்ட தொனி கொஞ்சம் கடுமையாகவே இருந்தது.

‘தஞ்சைப் படைத்தளபதி ஆவேசங் கொள்ளாமல் கேட்டால் அதற்கான காரணத்தை நான் மேலுங் கூறுகிறேன்.” என்றாள் சித்திராங்கதா.

‘சரி கூறுங்கள்.” என்றான் பொறுமையாக

‘பறங்கியர் படை கரைபுரண்டு வருகிறது. நிலமை இவ்வேளை அரசர்க்கு சாதகமாக இல்லையாம். சாதகமாக்கிக் கொள்ளும் சாணக்கியமும் அரசினர்க்கு தற்சமயம் இல்லை. வீண் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வீரனான தாங்கள் தோல்வியை தழுவ நேரிட்டால் தஞ்சைக்கு பெருங் களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாய் ஆகி விடும் என்றே வன்னியத் தேவர் கருதுகிறார்.”

கூறுகின்ற செய்தி தன் கொடுவாளிற்கு இரையாக வேண்டிய செய்தி என்றாலும் கூறுபவள் சித்திராங்கதா என்பதால் வருணகுலத்தானின் பொறுமை எல்லை காத்தது.

வன்னியத்தேவன் உண்மையில் எத்தனை பெரிய நயவஞ்சகன் என்பதை சித்திராங்கதாவிடம் இருந்து தெறித்த அவனுடைய வார்த்தைகள் மூலம் இப்போதே வருணகுலத்தான் முழுமையாக உணர்ந்து கொண்டான்.

‘ஆனால் தேவி! வன்னியத்தேவர் கருத்தை தாம் ஆதரிக்கின்றீரா?”

‘என் கருத்திற்கு என்ன அவசியம் தளபதியாரே. அரசியலில் நடப்பவை பற்றி நான் எங்ஙனம் அறிவேன்? வன்னியத்தேவர் கூறியதை தம்மிடம் சொன்னேன். ஆனால்…தங்களிடம் இதைச் சொல்ல வேண்டியது கட்டாயம் என்று என் உள்ளத்தில் தோன்றியது என்னவோ உண்மைதான்!”

‘தேவி , ஒரு நாட்டில் போரோ குழப்பமோ நிலவும் போது அந்நாட்டு மகளிர்க்கு அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் போரிடுகின்ற வீரர்களிற்கு வெற்றியை பெற்றுத்தருவது என்பது அந்நாட்டு மங்கைகள் வீரர்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் சாட்சியாகவே. அந்த நம்பிக்கை அற்றுப்போவதே போரின் முதற் தோல்வியாகிறது. நாடு சஞ்சலத்தில் இருக்கும் இந்த சமயத்தில் ஈழத்தின் ஆடலரசி தாங்கள் இப்படி நம்பிக்கையிழந்து பேசுவது எந்த வகையில் சரியாகும்?”

என்று கேட்டான் வருணகுலத்தான்.

‘தங்கள் மீதான என் நம்பிக்கை எப்போதும் அற்றுப்போய்விடாது தளபதி. ஆனால் மங்கையரின் நம்பிக்கையை மட்டும் நம்புவதை விட்டு மங்கையரின் மதிநுட்பத்தையும் கொஞ்சம் நம்பத் தொடங்கினால் வெற்றிகள் பெருகுவதை மேலும் கண்டு கொள்ளலாமல்லவா? இப்போதும் கூறுகிறேன். தன்னந்தனியாகவே தாங்கள் போர்க்களத்தில் தலைநிமிர்ந்து முன்னேறினால் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்! அவர்கள் யாராக இருந்தாலும் சரி. எத்தனை பெரிய ஆயுதங்கள் தாங்கி வந்தாலும் சரி”
என்று திடமாக கூறினாள் சித்திராங்கதா.

‘தங்கள் நம்பிக்கையே என் பலம் தேவி. பிறகு எந்த அவநம்பிக்கையில் வன்னிவேந்தர் கருத்தை நம்பத் தொடங்கினீர்கள்?”

‘அவநம்பிக்கை தங்கள் மேல் அல்ல தளபதி. சங்கிலிய மகாராஜா தலைமையிலான இந்த அரசு மேல். எதுவாயிருந்தாலும் இந்த அரசின் ஆணைக்கு அடிபணிவதே உங்கள் கடமை என்கிறீர்கள். அவ்வாறே இந்த அரசின் தோல்வி மாவீரனான தங்களையும் சேர்ந்து விடுமோ என்கிற கேள்விதான் வன்னியத்தேவர் கூற்றில் ஏதோ உண்மை இருப்பதாய் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. தாங்கள் இருக்கும் பக்கம் வெற்றி நிச்சயம்! வெற்றியின் பக்கம் தாங்கள் நிற்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.”

‘தேவி.. வெற்றியின் பக்கம் என்பது மாமன்னர் சங்கிலிய மகாராஜாவின் பக்கம் என்பதிலே சந்தேகம் தேவையில்லை. நாடு சஞ்சலத்தில் இருக்கும் நேரம் மன்னர் புகழையும், பெருமைகளையும் குறைக்க யார் வேண்டுமானாலும் எத்தனை கட்டுக்கதைகளையும் கட்டிவிடலாம். அதற்காக உண்மைகளை சிந்திக்காமல் இருக்கமுடியுமா தேவி?

என் தாய் நாட்டிலே தமிழாண்ட முதுபெரும் அரச வம்சங்கள் யாவும் முற்றாய் அழிந்து போன பின்னரும் ஈழத்தில் இந்த தமிழ் மன்னர் பரம்பரையே முடிபுனைந்து அரசோச்சி வந்திருக்கிறது. முந்நூறு ஆண்டுகளாய் நாட்டை ஆண்ட இந்த வீர பரம்பரையின் வேந்தர் சங்கிலிய மகாராஜா தோற்றுவிட்டால் கல், மண் தோன்றாக் காலத்தில் இருந்து தளைத்தோங்கிய இந்த தமிழ் நாட்டு வேந்தர் பரம்பரையின் கடைசி வேந்தனும் அழிந்துவிட்டான் என்றல்லவா ஆகிவிடும்?

அந்நிலை காணவா நான் இங்கு புறப்பட்டு வந்தேன்?

என் வேந்தர் தஞ்சை இரகுநாத நாயக்கர் எனக்கு இட்டு அனுப்பிய கட்டளை ஈழத் தமிழ் வேந்தர் தலைமுறை செழிக்க வைக்க வேண்டும் என்பதே! அதற்காகவே என் மூச்சினை அர்ப்பணிப்பதாய் ஆணை தாங்கி ஈழம் வந்தேன். ஈழ வேந்தர் தோல்வியுற என் மூச்சிருக்கும் வரை சாத்தியமில்லை தேவி.. சாத்தியமே இல்லை!

இது இரணியனை கொன்றுவிட்டதாய் கர்வத்தில் மிதந்த அந்த நரசிம்மனின் எலும்பை கதையாகவும் தோலை சட்டையாகவும் அணிந்து கொண்ட இந்த ருத்ரசிவன் சட்டநாதர் மேல் ஆணை…!”

ஒரு வீரனின் சபதமாய் வருணகுலத்தான் கூறிய வார்த்தைகளின் வீரியம் சித்திராங்கதாவையும் சிலகணம் சிலையாக்கி வைத்தது.

‘ஈழம் தமிழ் ஆண்ட தேசம் தளபதியாரே.. இங்கு வேறு எவரும் எக்காலமும் ஆளமுடியாது. ஆனால், இப்போது வந்திருக்கும் அபாயம் முன்னொரு காலத்திலும் வராதது. பறங்கியனது யுத்த கலங்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருக்கின்றதாம். போர் என்பது எல்லை தாண்டி விட்டால் – எதிர்பாராத அந்த அபாயம் நேர்ந்து விட்டால்- பிறகு ஈழத்தில் ஆள்வதற்கு தமிழர் இல்லாது போய்விட்டால் முடிவு என்பது அடியோடு முடிந்துவிடுமல்லவா? ஈழத்தில் இந்த நல்லையில் தமிழாட்சி நிலைக்க வேண்டுமென்றால் தற்சமயம் மதிநுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியது அவசியமல்லவா? இந்த கொடும் போரை நாம் வெல்லவில்லை என்றால் எதிர்கால ஈழம் எங்கள் காலத்தவரை அல்லவா குற்றம் சுமத்தும்.

போரில் வெற்றி – தோல்வி இரு நிலைகள் குறித்தும் எம் எதிர்காலம் சிதைந்து விடாமல் இருப்பதும் பற்றியல்லவா சிந்திக்கவேண்டும்? அதற்கு தகுந்தவர் தாங்கள் என்பதால் தான் தங்களை சந்திப்பது சாலச்சிறந்தது என்று வன்னியத்தேவர் விரும்புகிறார். அதற்காக வன்னி மாளிகையில் நாளை மறுதினம் காத்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

தாங்கள் வருவதற்கு சம்மதமில்லை என்றால் நல்லை இராசதானி நன்மைக்காக ஆடலரசியாவது அங்கு அவசியம் வரவேண்டும் என்றார். என் மனமும் வன்னி மாளிகைச் சந்திப்புக்கு செல்வதே அவசியம் என்றுரைக்கிறது. இராஜகுலத்தவர்களது அறிவிழந்த செயலால் எம் தேசம் கைவிட்டுப் போவதை தடுக்க என்னால் ஆனதை நானும் செய்யத் துணிவேன்..”

சித்திராங்கதாவின் கூற்று வருணகுலத்தானது கருத்தை எதிர்பாராது தன்னிச்சையாக இருந்தது. வன்னி வேந்தரின் சதிச் செயலாலே சித்திரங்கதா இங்ஙனம் பேசுகிறாளா? இவள் கூற்றில் – நம்பிக்கையில் – இத்தனை குழப்பங்கள் தோன்ற காரணந்தான் என்ன? என்று புரியாமல் வருணகுலத்தான் திகைத்துக்கொண்டிருந்தான்.

வன்னிவேந்தரின் நயவஞ்சக அழைப்பை நம்பி வன்னி மாளிகை வரை செல்வது அரச ஆணைக்கு தான் செய்கிற பாதகமாக கருதிய வருணகுலத்தான் அதற்கு எக்காரணம் கொண்டும் சம்மதிக்க தயாராக இல்லை. ஆனால் சித்திராங்கதா தன்னந்தனியாக அங்கு செல்வதையும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

‘தேவி! தாங்கள் தனியாக அவ்வளவு தூரம் செல்வது எந்த வகையில் சரி என்று நினைக்கின்றீர்கள்.. தம் தந்தையார் இதற்கு எங்ஙனம் அனுமதிப்பார்?”

‘நான் தனியாகத்தான் செல்ல வேண்டும் என்றால் செல்வதில் எனக்கு தயக்கமில்லை தளபதி, என் பெருவிழாவை கெடுத்து நிகழ்ந்த அந்த வன்னியர் விழாவிற்காய் கோட்டைக்கு வந்த என் தந்தை இன்னும் வீடு வரவில்லை. திறைப்பொருட்கள் ஏராளம் என்பதால் வருவதற்கு ஐந்தாறு நாட்கள் ஆகும் என்ற செய்தி மட்டுந்தான் வந்தது. நான் செல்வதை என் தந்தை அறிந்தால் கூட என்னை தடுக்கமுடியாது. தங்கள் முடிவு என்ன என்பதையே நான் தெரிந்து கொள்ள எண்ணுகிறேன். தங்களிடம் என் கோரிக்கை நிராகரிக்கப்படாது என்று வன்னியத்தேவர் நம்புகிறார்! நானும் நம்புகிறேன்…”

என்று எங்கோ பார்த்தபடி கூறியவள் விழிகளை சடுதியாக திருப்பி வருணகுலத்தானை நோக்கினாள்.

அந்த ஆடலரசியின் நாட்டிய விழிகள் வருணகுலத்தானில் குத்தி நின்றன. அந்த இருவிழிகளோடு சேர்த்து இத்தனை நேரமும் இந்த உரையாடலை மரத்தின் உச்சியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த உக்கிரசேனனும் வருணகுலத்தான் பதிலிற்காய் காத்திருந்தான்.

ஆண்களின் சூட்சுமம் செயற்கை. பெண்களின் சூட்சுமம் இயற்கை.
இயற்கை மீது யாருக்குத்தான் சந்தேகம் வரும்.

காத்திருங்கள்…

Related posts

யார் இந்த ஜெலன்ஸ்கி ?

Thumi202122

ஆதலால் காதல் செய் …!

Thumi202122

சிங்ககிரித்தலைவன்-40

Thumi202122

Leave a Comment