இதழ் 19

சட்டத்தின் சாரல்

ஓர் அறிமுகம் – 02

சிட்ஜ்விக் கருத்துப்படி “அரசு என்பது, அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் மீது அவர்கள் ஒன்றிணைவது தங்களை அரசியல் ரீதியாக அமைத்துக் கொள்வது அரசு ஆகும்”.

“அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும். அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்ப்படிதலை அரசுக்குச் செலுத்துகிறார்கள்” என கார்னர் விளக்குகிறார்.

பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒரு நிலப்பரப்புக்கு உட்பட்ட சமுதாயமானது அரசாங்கம் என்றும், குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவுமுறை அரசினுடைய நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.”

அரசின் கூறுகள்

அரசின் கூறுகளாக பின்வருவன காணப்படுகின்றன.

1.மக்கள் தொகை
2.நிலப்பகுதி
3.அரசாங்கம்
4.இறையாண்மை

கடந்த இதழில் முதல் இரண்டு கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்திருந்தோம்.

அரசாங்கம்:

அரசாங்கம் அரசின் மூன்றாவது கூறாகும். அரசாங்கம் இல்லாமல் அரசு கிடையாது. அரசாங்கம், அரசின் ஆக்கக் கூறுகளில் ஒன்று. அரசு என்னும் கப்பலை ஓட்டிச் செல்லும் மாலுமியாக அரசாங்கம் விளங்குகின்றது.

இறையாண்மை :

இறையாண்மை அரசின் நான்காவது கூறாகும். இறையாண்மை என்பது உயர்ந்த மற்றும் தலையாய அதிகாரம் ஆகும். அரசின் இறையாண்மை அதிகாரம், சட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகிறது.

நவீன அரசுகள் தோன்றும்போது அதனுடன் இறையாண்மைக் கருத்தும் உருவாக்கப்பட்டது. இறையாண்மை என்ற சொல் (Sovereignty) லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருள்.

இறையாண்மை தன்மை என்பது:-

  1. உள் இறையாண்மை
  2. வெளி இறையாண்மை

என இரண்டு வகைப்படும்.

உள் இறையாண்மை என்பதற்கு அரசு தனது எல்லைக்குள் உள்ள குடிமக்கள் மற்றும் சங்கங்கள் மேல் தலைமையான அதிகாரத்தை செலுத்தவல்ல அதிகாரமுடையதென பொருள்.

வெளி இறையாண்மை என்பது தன் அதிகார எல்லைக்கு வெளியேயுள்ள யாரும் தன்னை கட்டுப்படுத்த முடியாத சுதந்திரமுடையது என பொருள்.

ஹெரால்ட் லாஸ்கி கருத்துப்படி, அரசு இறையாண்மை உடையதாய் இருப்பதால்தான் மற்ற சமுதாய அதிகாரம் மற்றும் மனித சங்கங்களிலிருந்து வேறுபடுகிறது.

Image result for government

அரசு மற்றும் சமுதாயம்

சமுதாயம் என்பது தன்னுள், தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அரசியல் சிந்தனையாளர்கள் அரசு மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றனர். அரசு என்பது சமுதாயத்தின் பகுதி யாகும் எனினும் அது சமுதாயத்தின் உருவமாகி விடாது.

அரசுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள வேறுபாடுகள்:

  1. சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு உருவானது. சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது.
  2. அரசின் எல்லை வரையறைக்குட்பட்டது. சமுதாயத்தின் வரையறை பெரியது.
  3. அரசினுடைய நிலப்பரப்பு இறுதியானது. சமுதாயத்திற்கு எல்லைப்பரப்பு இல்லை.
  4. அரசு என்பது அரசியல் நிறுவனமாகும். சமுதாயம் என்பது ஒரு சமூக நிறுவனமாகும்.
  5. அரசுக்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளது. சமுதாயத்திற்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை.

பேராசிரியர் பார்க்கர் “சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படைகள்” என்ற நூலில் அரசு, மற்றும் சமுதாயம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடுகளை பின்வரும் மூன்று அடிப்படைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அவை,

  1. நோக்கம் அல்லது பணி
  2. நிறுவனம் மற்றும் கட்டமைப்பு
  3. வழிமுறை

நோக்கம் என்ற அடிப்படையில் அரசு என்பது சட்டரீதியான ஒரு சங்கமாகும். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கு தரமான ஒரு அமைப்பை உருவாக்கி அதனை செயல்படுத்துவதே அரசின் ஒரே நோக்கமாகும்.

ஆனால் சமுதாயம் என்பது பலவகைப்பட்ட சங்கங்களை உள்ளடக்கியது ஆகும். பல்வேறு சட்டம் சாராத நோக்கங்களையும் கொண்டதாகும்.

சமுதாயத்தின் பல்வேறு நோக்கங்கள் பின்வருவன ஆகும்.

  1. அறிவு சார்ந்தது
  2. நெறிமுறை சார்ந்தது
  3. சமயம் சார்ந்தது
  4. பொருளாதாரம் சார்ந்தது
  5. நுண்கலை சார்ந்தது
  6. பொழுது போக்கு சார்ந்தது.

அரசு மற்றும் சமுதாயத்தின் உறுப்பினர் தன்மை ஒன்றேயாகும். ஆனால் நோக்கங்களில் இரண்டும் மாறுபடுகின்றன. அரசு என்பது மிகப் பெரிய ஆனால் ஒரே ஒரு நோக்கத்திற்காக உள்ளது. சமுதாயம் என்பதோ சில பெரிய நோக்கங்களுக்காகவும், சில சிறிய நோக்கங்களுக்காகவும் உள்ளது. சமுதாயத்தின் நோக்கங்கள் ஆழமானதாகவும், பரந்ததாகவும் காணப்படுகின்றன.

அமைப்பு ரீதியாக பார்க்கும்போது அரசு என்பது சட்டம் சார்ந்த ஒற்றை அமைப்பாகும். ஆனால் சமுதாயம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியது. நிறுவனம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது அரசிற்கு கட்டாய கீழ்ப்படிதலை பெறும் அதிகாரம் உள்ளது. கட்டாயப் படுத்துவதற்கும், நிர்பந்திப்பதற்கும் அரசிற்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் சமுதாயம் மனமுவந்த கீழ்படிதலையே முறையாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தின் பல்வேறு நோக்கங்கள், ஊக்கமளித்து, இசைவை பெறுவதற்கு வகை செய்கிறது. சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால் ஒரு அமைப்பிலிருந்து விடுபட்டு, வேறு அமைப்பினுள் இணைவதற்கு வாய்ப்புள்ளது.

அரசு மற்றும் தேசம்

ஆங்கிலத்தில் ‘Nation’ என்ற சொல் நேஷியோ (Natio) என்ற லத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் பிறப்பு அல்லது இனம் ஆகும். தேசம் என்பதும் அரசு என்பதும் ஒரே பொருளில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அவை இரண்டும் வெவ்வேறானவை ஆகும். லீக்காக் என்னும் அறிஞரின் கருத்துப்படி ஒரே வம்சம் மற்றும் மொழி சார்ந்த மக்கள் ஒன்றிணையது ஒரு அமைப்பை உருவாக்குவது தேசம் ஆகும்.

தேசம் மற்றும் அரசிற்கு இடையிலான வேறுபாடுகளை பின்வருமாறு அறியலாம்.

  1. அரசு என்பது பண்டைய காலத்திலேயே இருந்ததாகும். ஆனால் தேசம் என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாகும்.
  2. அரசானது சட்டம் மற்றும் அரசியல் தன்மை உடையதாகும் ஆனால் தேசம் என்பது இனம் மற்றும் கலாசாரம் சார்ந்ததாகும்.
  3. வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் மக்களால் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்டதாகும்.

மக்கள் உளரீதியாக இணைந்து ஒன்றாக வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

  1. அரசு இறைமை உடையதாக இருக்க வேண்டும்

இறைமை இல்லை என்றாலும் மக்கள் ஒரே தேசத்தை சார்ந்தவர்களாக தொடர்ந்து வாழ்கின்றனர்.

  1. அரசில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் ஆனால் தேசம் என்பது ஒரே வகைப்பட்ட மக்களை கொண்டதாகும். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு (1939-1945) ஒரு தேசம், ஒரு அரசு என்ற கோட்பாடு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிய அரசுகள் தோன்றும்போது தேச அரசுகளாக உருவாகின்றன. சுய அரசாங்கம் கொண்ட ஒரு தேசம் விடுதலை அடையும் போது ஒரு தேச அரசாக தோன்றுகிறது.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த அரசின் கூறுகள் கட்டுரையினை தழுவி இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

ரசிக்கும் சீமானே

Thumi2021

மந்திர மெஸ்ஸி – 5

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

Leave a Comment