ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 02ஆம் தேதி உலகளாவிய ரீதியில் உலக ஈரநில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பெப்ரவரி மாதம் 02ந்தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின்; ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் துணைநிறுவனமான யுனோஸ்கோ அமைப்பானது பெப்ரவரி 02 ஈரநில தினம் என்று அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறுபட்ட தொனிப்பொருட்களின் கீழ் ஈரநில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடம் ‘ஈரநிலங்களும் நீரும்” ( “றுநவடயனௌ யனெ றுயவநச” ) என்பதன் கீழ் ஈரநில தினம் கடைப்பிடிக்கப்படகின்றது.
ஈரநிலம் என்றால் என்ன?
ஈரநிலச் சூழல் தொகுதியானது உயிர்ப் பல்வகைமையைப் பொறுத்தவகையில் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. உலகில் பரந்து காணப்படும் ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு
பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த்தேக்கங்கள் என்பவையெல்லாம் ஈரநிலப்பட்டியலில் உள்ளடங்குகின்றது. ஈரநிலங்கள் உயிரினங்களின் பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருப்பதனால் ‘நகரங்களின் பச்சை நுரையீரல்கள்” என அழைக்கப்படுகின்றன.
சேற்றுநிலம் என்றும் சகதி என்றும் மக்களால் அசௌகரியமாக அழைக்கப்பட்டுக் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக மாறிக்கொண்டிருக்கின்ற இடங்களுக்கு ஈரநிலங்கள் என்று பெயர் அதாவது குட்டை, குளம், ஏரி, போன்றவையே.
ஈரநிலங்கள் எனப்படுவது நிலமேற்பரப்பு நீரால் நிரம்பிய நிலையில் இருத்தலை குறிக்கும். ஈரநிலங்களாக சதுப்புநிலம் அல்லது முற்றா நிலக்கரி விளைந்த நிலம் என அழைக்கப்படுகின்றது. நீர் தேங்கியுள்ள நிலமானது இயற்கையாகவோ செயற்கையாகவோ நீரினால் நிரம்பியிருப்பதுடன் அந்நீரானது ஓரிடத்தில் தங்கியிருப்பதுடன் ஓடும்நீர், நன்னீர் என்பவற்றுடன் கடல்நீரையும் உள்ளடக்கி இருக்கும் பகுதி எனவும் கூறப்படுகிறது.
இவை வற்றுப்பெருக்குக் காலத்தில் 6மீட்டரினை விட அதிகரிக்காத ஆழத்தை கொண்டவையாக காணப்படுகின்றன. இவ் ஈரநிலங்கள் இன்று முக்கியம் பெற்றதொன்றாகக் காணப்படுகின்றது. ஏனெனில் இவ் ஈரநிலங்கள் உயிரினங்கள் வாழும் ஒரு சூழலாகவும் காணப்படுகின்றது.
பொதுவாக ஈரநிலங்கள் இருவகைப்படும். அவையாவன,
- உப்புநீர் சதுப்புநிலம்
அதிக ஆழமில்லா நிலப்பகுதிகளில் கடல்நீர் புகுந்த சேற்றுநிலம், கடலோர சதுப்புநிலம் எனப்படும். - நன்னீர் சதுப்பு நிலம்
ஆற்றங்கரைகள் அல்லது ஆற்றின் முகத்துவாரம் அல்லது ஏரிநீர் வடிநில வண்டல் பகுதி நிலம் நன்னீர் சதுப்புநிலம் எனப்படும்.
ஈரநிலங்களில் வளரும் தாவரங்களினையும் அவற்றின் தன்மைகளும் ஏற்ப அவை மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன
- உள்நாட்டு நன்னீர் ஈரநிலம்- ஆறுகள், சேற்றுநிலம், கண்டால் தாவரங்கள், வில்லுக்கள்
- உவர்நீர் நிலம்- ஆற்றுமுகம், கடனீரேரி, கடற்கரை, முருகைக்கல்
- மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலம்- குளம், நீர்த்தேக்கம், உப்பளம்
ஈரநிலங்களில் காணப்படும் நீரானது சூரியஒளி உட்புகுவதற்கு ஏற்றவாறு குறைந்த ஆழமுடையவாறு காணப்படுகின்றது. இதனால் தாவரங்களின் ஒளித்தொகுப்புக்கு தேவையான சூரியஒளி கிடைக்கிறது. இதன் காரணமாக அங்கிகள் தமக்கு தேவையான உணவினை தாமே தயாரித்து கொள்கின்றன. இது மட்டுமன்றி ஈரநிலங்களைச் சுற்றியுள்ள உயர்நிலைப் பகுதிகளை விட உற்பத்தி மற்றும் உயிர்ப்பல்வகைமை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் உயிரினங்கள் இனப்பெருக்கத்தினை மேற்கொள்ளவும் வாழ்விடங்களை அமைக்கவும் இடப்பெயர்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அத்துடன் ஈரநிலங்கள் உயர்போசணை பொருட்களின் செறிவையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இங்கு பறவையினங்கள், மீனினங்கள், நீரத்;தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், ஆமைகள், பாம்புகள், முலையூட்டிகள் போன்றன வாழ்கின்றன.
உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் ஈரநிலங்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. பல்லுயிரி வளம், நிலத்தடி நீர்வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்கூறிய எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது. 2004இல் சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்புநிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம்சார் காலநிலை, நுண்காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதிசெய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன. உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கியிருக்கும் பகுதியாக ஈரநிலங்கள் உருவாகின.
பூமியின் மொத்தப் பரப்பில் 6மூ பகுதி சதுப்புநிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. ஈரநிலக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
பிரத்தியேகக் குணங்கள் கொண்ட புல் செடிகள், அரியவகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சிலவகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன. எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான ஈரநிலங்கள் பாழாகி வருகின்றன. ஈரநிலமானது சூழல் கலாசார அடிப்படையிலும் பொருளாதாரத் துறையிலும் முக்கியத்துவமாகின்றது. இந்நிலத்தோடு தொடர்புடைய வரலாறு மனித நாகரிகத்தின் ஆரம்பத்தோடு பிணைந்துள்ளதெனலாம்.
ஈரநிலங்களில் நத்தைகள், சேற்று நண்டு, கடல் நண்டு, கடலேரி நண்டு, ஒற்றைக் கவ்வி நண்டு, சிங்கி இறால், பால் இறால், கண்டற்சிப்பி, ரெலஸ் கோபியம் சிப்பி, லிற்றோரிச் சிப்பி, கண்டல் நீலச் சிப்பி, ஊரி, நீர்ப்பல்லி. கண்டற்கொக்கு, வெண்கொக்கு, கடற்புள், ஆக்காட்டிக் கருவி, மீனினங்கள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் சஞ்சாரம் செய்கின்றன.