சமகால உலகில் மனிதன் எத்தனை புதுமைகளோடும், மாற்றங்களோடும், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடும் வாழ்வியலைக் கடத்திச் சென்றாலும், இன்றைய சந்ததியினர் தமது அடியினைத் தேடிப் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இச் செயற்பாடு ஒரு காலக்கட்டாயமான தோற்றப்பாடாகும். இத்தோற்றப்பாடு விவசாயத்திற்கும் விதிவிலக்கான ஒன்றல்ல. இன்றைய விவசாயிகளும் அலகுப்பரப்பில் அதி உச்ச விளைச்சலைப் பெற என அனைத்து வகையான இரசாயன வளமாக்கிகள், பீடை நாசினிகள், களைநாசினிகள் எனப் பாவனைக்குட்படுத்தி மண்வளமும், நீர்வளமும் பெரிதளவில் மாசாகியுள்ளதை உணர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகக் கணிசமானளவு விவசாயிகள், எமது பாரம்பரிய செய்கை முறையான “இயற்கைவழி விவசாயத்தினை” மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சாதாரணமாக இரசாயனங்களைப் பாவித்துச் செய்யப்படும் விவசாயத்தோடு ஒப்பிடுகையில், இயற்கைவழி விவசாயமானது நூற்றுக்கு நூறுவீதம் சூழல் நேயமானது ஆகும்.
இன்று ஈழச்சூழலியலில் இயற்கை வேளாண்மை உற்பத்திப் பொருட்களின் சந்தை விலைகளினை அவதானிப்பீர்களாக இருந்தால் அவை இரசாயன உரப்பாவனையால் உருவான விளைபொருட்களைவிட, கணிசமானளவு விலைஉயர்வானதாகக் காணப்படும். அதற்கான காரணம் இயற்கைவழி விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்படாமையே ஆகும். தற்பொழுது ஏற்பட்டுள்ள இயற்கைவழி விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு எதிர்காலத்தில் இயற்கை விவசாய உற்பத்தியினைப் பன்மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. காலவோட்டத்தில் இயற்கை விவசாய உற்பத்திகளுக்கான விலை குறைவடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் இரசாயன விவசாய செசய்முறையினூடு ஒப்பிடுகையில் இயற்கைவழி விவசாயத்தில் உள்ளீடுகளின் செலவீனம் குறைவானதாகும். இரசாயன உரங்களுக்கும், பீடைநாசினிகளுக்கும், களைநாசினிகளுக்கும், மீதிறன் விதைகளுக்கு-மெனச் செலவளிக்க வேண்டிய தேவை இருக்காது. மாறாக இயற்கை விவசாயத்தில் இயற்கை உரங்களையும், இயற்கை வழியான நாசினிகளையும் நாம் தயாரித்தும் அல்லது மிகக் குறைந்த விலையில் உள்;ர் வட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான கட்டமைப்புக் காணப்படும். இவ்வாறாக விவசாயிகளுக்குச் செலவீனம் குறைகின்ற பட்சத்தில், உள்ளீட்டுப் பொருட்களுக்கான செலவீனம் குறைந்து பொருட்களை ஒப்பீட்டளவில் குறைவான விலையில் சந்தைப்படுத்த முடியும். தற்காலத்தில் இயற்கைவழி வேளாண்மையினால் பாரியளவிலான உற்பத்தி வகிபாகத்தை வழங்கமுடியாமல் இருக்கின்றமை, இயற்கைவழி விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகளுக்கு இல்லாமை, போதியளவான சந்தைப்படுத்தல் வாய்ப்புக்கள் இன்மை, போன்ற சவால்களால் இயற்கைவழி விவசாய உற்பத்திப் பொருட்கள் சாதாரண விவசாய விளைபொருட்களுடன் ஒப்பிடுகையில் கணிசமானளவு உயர்விலை கொண்டு அமைந்துள்ளது. இதன்காரணமாக மேல்நாட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தமது பொருளாதார இயலுமைகளுக்கு ஏற்றவகையிலும், நஞ்சற்ற உணவுப் பொருட்களை உணவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதிகளவாகக் கொள்வனவு செய்கின்றனர். மேற்கூறிய சந்தைவாய்ப்பு, விழிப்புணர்வு என்பவற்றை இயற்கைவழி விவசாயத்திற்கு ஏற்றதாக வாய்ப்புக்களை ஏற்படுத்தி சீர்செய்கின்ற பட்சத்தில் நிச்சயமாக இயற்கைவழி விவசாய உற்பத்திப் பொருட்கள் மிக மலிவான விலையிலும், அனைத்துத் தர மக்களுக்கும், அனைத்து பிரதேசங்களிலும் கிடைக்கக்கூடியவையாகிவிடும்.
தற்போதுகூடப் பெரும்நகர்ப்பகுதிகளில் காணப்படுகின்ற பல் அங்காடிகளில் இந்த சேதனவழி அல்லது இயற்கைவழி விவசாய உற்பத்திப் பொருட்களுக்கென தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டு காணப்படுகின்றன, வழங்கலுக்கு மேலதிகமான கேள்வியும் அப் பகுதிகளில் காணப்படுகின்றன.
விவசாயத்தில் பெருமளவு உயயோகிக்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள், ஹார்மோன்கள் போன்ற செயற்கை இடுபொருட்களைத் தவிர்த்து பயிர்ச்சுழற்சி, பயிர்க்கழிவுகள், கால்நடைகளின் எருக்கள், கனிமச் சேர்க்கைகள், உயிரியல்ரீதியான பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து முறைகளைப் பெருமளவு பயன்படுத்துவதனால் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகவும், நஞ்சற்றதாகவும் கிடைக்கப் பெறுகின்றது. இதனால் பல்வேறு உணவுரீதியாக ஏற்படுகின்ற நோய்த்தாக்கங்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். அத்தோடு சூழல் சமநிலை, அங்கிகளின் வாழ்க்கை வட்டம் என்பன மேம்படுவதோடு, ஏற்றுமதியிலும் பெரும்பாலான கேள்வி சேதன ஃ இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இருப்பதால் நாட்டுக்கு இலாபமீட்டும் முயற்சியாகவும், இயற்கைவழி விவசாயம் காணப்படுகின்றது. இயற்கைவழி விவசாயத்தை மேம்படுத்துவதற்கென பல தன்னார்வ அமைப்புக்கள் வௌ;வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போதிலும், இரசாயன முறைகளுக்கு பழக்கப்பட்ட விவசாயிகள் அதன் அதி வினைத்திறனுக்கு பழக்கப்பட்ட விவசாயிகள், அதனைவிட்டு வெளியே வரவும், இயற்கைவழி தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்வதிலும் தயக்கம் காட்டுகின்றமை வருந்தத்தக்கதாகும்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் மிக அதிகளவில் வெடிமருந்தாகப் பயன்படுத்தப்பட்ட அமோனியா நைட்ரேட் உப்பை என்ன செய்வதென்று தெரியாமல் அதனை ஆராய்ச்சி செய்தபோது நைட்ரேட் போட்ட இடத்தில் பயிர் நன்றாக வளர்வதைப் பார்த்து அதை வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு விற்று அதிக இலாபம் பெறலாம் எனம் நோக்கில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உயர் விளைச்சல் இரகங்களை அறிமுகப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு நைட்ரேட் உபயோகப்படுத்தவென அறிமுகம் செய்யப்படும். பசுமைப்புரட்சி என்ற பெயரிலேயெதான் இவ் இரசாயப்பாவனை விவசாயத்திற்குள் ஊடுற்றது. “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானைகட்டி போரடித்த” எனும் பெரும் சொற்களை உரித்தாக்கிய நம் பாரம்பரிய விவசாயம் உயர்விளைச்சல் ரகங்கள் என்ற பெயரில் மண்ணையும், மனிதனையும் மலடாக்கும் பணிகள் செயற்படுத்தப் பட்டது. பாரிய சூழலியல் சவால்களைத் தன்னகத்தே கொண்டுள்ள விவசாயம் பல புதுமாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளபோதிலும், உலகச் சனத்தொகைப் பெருக்கம் வர்க்கப் பெருக்கங்களாக (2×2=4×4=16) என்றவாறு அபரிதமாக அதிகரித்து வருகையில் விவசாய உற்பத்தியானது வெறுமனேயே எண்கூட்டல் தொகையாக (2+2=4+2=6+2=8) என்றவாறாக அமைவதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து இரண்டாம் பசுமைப்புரட்சி நடக்க வேண்டும் என்ற எடுகோள் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது முதலாவது பசுமைப்புரட்சியுடன் ஒப்பிடுகையில் சனத்தொகை அதிகரித்திருப்பதாலும், விவசாயத்தைத் தொழிலாகச் செய்து வருபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாலும், விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறுகின்ற அபாயசூழல் ஏற்படுவதாலும், மக்கள் தொகைக்கேற்றவாறான உணவை உற்பத்தி செய்ய வேண்டுமானால், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டியதன் அவசியத்தை இன்னொரு பசுமைப்புரட்சி ஏற்பட வேண்டியிருக்கிறது. இதற்கென இரசாயன உரப்பாவனை மட்டுமல்லாது, உயிரியல் தொழில்நுட்பங்கள், நனோ தொழில்நுட்பங்கள் என்பன பயன்படுத்தப்பட்டு உயர் விளைச்சல் பெறப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியான விவசாயத்துறையின் அடுத்தகட்ட நகர்வென்பதை சூழலியல் சார்ந்த கரிசனையுடன் அணுக வேண்டியதும் காலப் பொறுப்பாகும். நிச்சயமாக முதல் பசுமைப்புரட்சியினால் எமது சூழலியல் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது மறுக்கமுடியாதது. எனவே இன்னொரு பசுமைப்புரட்சியினை அதேயளவான சூழல்தாக்கங்களுடன் செயற்படுத்துவதென்பது “தன்கையால் தானே மண் அள்ளிப்-போடல்” போன்றவாறாக அமைவதான செயற்பாடாகிவிடும். எனவே நிச்சயமாக விவசாயத்துறையின் அடுத்தகட்ட பரிமாண நகர்வென்பது சூழலுடன் நட்புரிமையான ஒன்றாகவே காணப்பட வேண்டும். நிச்சயமாக தற்போது உணவுத் தொழில்நுட்பத்தில் பயன்பட ஆரம்பித்திருக்கும் உயிர் தொழில்நுட்பம், நனோ தொழில்நுட்பம் என்பன சூழலுக்கு மிகவும் நேயமானவையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனது நாடும் நேர்ச்சிந்தனையோடு இத்தொழில்நுட்பங்களை விவசாயத்தினுள் பயன்படுத்திப் பார்க்க முடியும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் காலம் தவறிய மழை, வெள்ளம், பயிர் நோய்கள் ஆகியவை விவசாயிகளை முடங்கச் செய்கின்றன. அடிக்கடி ஏற்படும் வரட்சியும் காலம் தவறிப் பெய்கின்ற மழைகளும், பெரும் அழிவை ஏற்படுத்துகின்றவை. சில விவசாயக் கோட்பாளர்கள் இறக்குமதியை ஓர் தீர்வுத்திட்டமாக முன்மொழிகின்றமை-யானது விவசாயத்தில் தங்கியுள்ள பெரும்பாலான மக்கள் தொகையைப் பாதிப்படையச் செய்யும். விவசாய அபிவிருத்திக்கென தொலைநோக்கான பார்வை அவசியமான தொன்றாகும். அத்தோடு அரசாங்கத்தின் விவசாயத்துறை சார்ந்த முதலீடுகள் போதியவை இன்மையும், எமது பகுதி விவசாயிகள் பாதிப்புறுவதற்கு ஓர் பிரதான காரணமாகும். 1960கள், 1970களில் யாழ்ப்பாணம், மிளகாய் மற்றும் வெங்காயம் உட்பட காசுப்பயிர்கள் செழிப்பை அனுபவித்து தனது வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழப்பியதாக கூறப்படுகின்றது. இக்கூற்றைச் சில விவசாயக் கோட்பாளர்கள் அக்காலப்பகுதியில் காணப்பட்ட விவசாயக் கொள்கைகளின் விளைவு எனக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அக்காலத்தில் காணப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் இறக்குமதிகளை தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அத்தோற்றப்பாடு ஏன் யாழ்ப்பாண விவசாயிகளின் பொருளாதார எழுச்சிக்கு மட்டும் வழிகோலியது?
ஆராய்வோம்…