சைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:
சிவபெருமானின் மீது சைவக் குருமார் நால்வரும் நான்கு விதமாகப் பக்தி செலுத்தினார்கள். சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார். பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய் தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார். தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கி அழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது எனலாம்.
சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார். அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான்தோழர் என்ற தனிச் சிறப்பையும் பெற்றார். மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின் மீது எடுத்துக்கொண்டிருக்கும் உரிமையை நன்கு எடுத்துவிளக்குகின்றன.
நீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான். பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களில் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அப்பர் பெருமான். இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,” என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.
இருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது. அன்பிற் சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். சிவபுராணத்தில், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே,” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.
இவ்வண்ணம், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள வேண்டியது சைவர்களின் கடமைமயாகும்.
சிவனின் கருணையைப் பெறும் வழி:
தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை பாடி வழிபடுகிறோம். இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா? வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோருமேத்தப் பணிந்து. — சிவபுராணம்: 93-95
சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல மூடநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன. கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து.
எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார். எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.
அவரின் அறிவியல் திறன்:
எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம். பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ஜவுhந வாநழசல ழக நஎழடரவழைஸெ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே நாம் அறிந்திருக்கின்றோம். இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்
-சிவபுராணம்– 26-31
டார்வின் உயிரினங்கள் மனிதராவது வரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார். ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார். அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம் வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது. இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்? என்ற கேள்வி நம்முள் பலருள் தோன்றக் கூடும். உண்மையில் உலகுக்கு பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முதலில் வழங்கியது மாணிக்கவாசகர் என்பது நமக்கு கிடைத்த கௌரவமாகும்.
மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி ஜபுயடடைநழ புயடடைநஸை என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்
சிறியவாகப் பெரியோன்; — 1-6
இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம். பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும் போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.