இதழ்-24

சித்திராங்கதா – 24

பேரச்சம்

மானிடர் எல்லோருக்கும் உள்ள ஒருபெரிய நோய் பயம். எந்தக்கோணத்தில் நின்று பார்த்தாலும் அதுவே வாழ்வை பயங்கரமானதாக காட்சியளிக்கவைக்கிறது. பயத்தை எதிர்கொள்ளவே மனிதன் அதிகம் பயப்படுகிறான். எத்தனை தைரியமாக அவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் பயம் அவன் உள்ளத்தில் மூடுபனியாய் படர்ந்து கிடப்பதிலிருந்து அவனால் மீளமுடியவில்லை.

அந்தசமயத்தில் தான் அவன் தனக்கு ஏதாவது ஒரு அடைக்கலத்தை நாடுகிறான். தைரியம் தரக்கூடிய புகலிடத்தை தேடி ஓடுகிறான். சக மனிதர்களோ எதையும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவதூறு பேசுகிறார்கள். கேலி செய்கிறார்கள். ஆகவே அவன் தெய்வத்தைச் சரணடைகிறான். அந்தத் தெய்வம் அவன் பயத்தை போக்குகிறதோ இல்லையோ காட்சியிலேயே தைரியத்தை தருகிறது. மனதில் நிம்மதியை உண்டாக்குகிறது.

சித்திராங்கதா உள்ளம் முழுதும் இப்போது பயத்தால் படர்ந்து கிடக்கிறது. யார் என்ன சமாதானம் சொன்னாலும் அவளால் நிம்மதியடைய இயலவில்லை. ஆதலாலே அன்னை வீரமாகாளியின் சந்நிதானத்தை நோக்கி ஓடுகிறாள்.

ஆலய கோபுரத்தைக் கண்டதுமே அவள் விழிகளில் நீர் பாயத் தொடங்கிவிட்டது. தானாய் இரு கரங்களும் தலைமேல் குவிந்தன. வள்ளல் வீட்டுப்படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறும் பசி தாங்காத ஏழையைப்போல் அன்னையின் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள். மந்திரம் ஓதப்பட்டு அங்கே அன்னைக்கு தீபாராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்ணீரருவியாய்ப் பொழிய அவள் அன்னையிடம் பேசத் தொடங்கினாள்.

‘அம்மா, தாயே….
நான் இங்ஙனம் உன்னை அழைப்பது வெற்று வார்த்தை விழிப்பன்று தாயே, என் தாயுமானவளே நீயம்மா, தரணியில் என் பெருந்துணையே நின் கருணைதானம்மா, உன்மகள் இப்போது பேரச்சம் கொண்டு அவதியுறுகிறேன். உன் நல்லருளாலே நாட்டியம் பயின்றேன். என் உயிரிற்கு இணையாய் என்கலையினைக் காதலித்தேன். என் கலைமீது கர்வம் கொண்டேன். கொள்கிறேன். என் கலையே என் உலகமானது . அந்த உலகத்தில் நானே ராணி. நாட்டிய கலாராணியாய் நான் முடிசூடும் நாளாய் அரங்கேற்ற நாளினை என் உள்ளத்தில் பதித்து வைத்துக் காத்திருக்கிறேன்.

என்ன நேர்ந்தாலும் எனக்கு என் அரங்கேற்றம் தடைப்பட்டுவிடக்கூடாது என்றே உள்ளத்தில் தோன்றுகிறது. நல்லது தீயது நானறியேன் தாயே, என் நாட்டிய அரங்கேற்றம் எத்தடையுமன்றி நடந்தேறிட தாயே நின் மகளிற்கு நீயே கருணை காட்டிட வேண்டுமம்மா. என் உள்ளத்தில் உதித்த வீணான சந்தேகங்களையும் நீயே களைந்துவிடவேண்டும் தாயே’ என்று வீரமாகாளியிடம் மன்றாடினாள் சித்திராங்கதா.

எச்சதத்தர் சித்திராங்கதாவை அமைதியடையும் படி ஆறுதல்படுத்திக்கொண்டிருந்தார்.

அந்நேரம் ‘வணக்கங்கள்…’ என்ற குரல் பின்னாலிருந்து அழைப்பதைக் கேட்டு எச்சதத்தர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.

‘என்ன உக்கிரசேனா,,
இங்கே எப்படி நீ?
என்னிடம் என்ன வேண்டும் உனக்கு?’ கோபமாகவே பேசினார். வன்னியத்தேவனின் இரகசிய ஒற்றனான உக்கிரசேனனின் இல்லமும் கோப்பாயிலே இருப்பதனால் உக்கிரசேனனையும் அவன் ஆற்றிவரும் விசம காரியங்கள் பற்றியும் எச்சதத்தரும் சித்திராங்கதாவும் நன்கறிவார்கள்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம் வணிகரே, சித்திராங்கதாவின் முகம்தான் வாட்டமாக இருப்பதைக்கண்டேன்’

‘அதில் உனக்கென்ன சந்தோசம் உக்கிரசேனா?’ என்று குரலை உயர்த்திக் கேட்டாள் சித்திராங்கதா.

‘அப்படி இல்லை தேவி, அபிநயம் கொழிக்கும் ஆடலரசியின் முகம் என்றுமில்லாதவாறு வாட்டமாக இருந்ததால் அக்கறையோடு கேட்க வந்தேன். தவறிருந்தால் மன்னித்து விடுங்கள். நான் புறப்படுகிறேன். எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. வன்னியத்தேவரிடம் அவசரமாக ஒரு செய்தியை சொல்லியாக வேண்டும்’

‘ஓகோ, யாருக்கு குழிபறிக்கும் செய்தி அது உக்கிரசேனா? உனக்கும் உன் மன்னருக்கும் அதுதானே கலை’ என்றார் எச்சதத்தர்.

‘எனக்கென்ன குழபறிக்கும் கலை தெரியும் வணிகரே,ஆணையிடும் அரச கருமங்களை தானே ஆற்றி வருகிறேன். இப்போது கூட அவசரமாக வன்னியர் விழாவை நிகழ்த்தப்போகிறாராம் யாழ்வேந்தர். அதுவும் இந்தச் சித்திரை முழுநிலவு நாளிலாம். நான் வன்னியத்தேவருக்கு விரைந்து தகவல் சொல்லியாக வேண்டும். அதைத்தான் அவசரப்பணி என்று சொன்னேன் பெருவணிகரே, மற்றும்படி குழிபறிக்கும் வேலை எல்லாம் நானறியேன்…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பொறுமையிழந்து இடையில் ஊடறுத்துக்கேட்டாள் சித்திராங்கதா
‘ என்ன நாளில் சித்திரை பௌர்ணமி தினத்திலா?’

‘ஆம் தேவி, அவ்வளவு அவசரமாக நிகழ்த்தப்போகிறார்களாம்’ என்றவாறு சிறிது யோசிப்பது போல் பாவனை செய்துகொண்டே
‘அன்றைய தினந்தானே சித்திராங்கதாவின் அரங்கேற்றம் நிகழப்போவதாய் கேள்வியுற்றேன். அப்படியென்றால்….. ‘ என்று இழுத்தான் உக்கிரசேனன்.

எச்சதத்தர் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றார். சித்திராங்கதாவும் சிலைதான்.

உக்கிரசேனன் தொடர்ந்தான்.
‘என்ன செய்வது? இப்போதெல்லாம் திடீர் திடீரென திட்டமிடுகிறார்கள். யார் யாரோ எல்லாம் எங்கிருந்தோ எல்லாம் வருகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அபாயம் மிகுந்த நேரத்திலும் அரசர்க்கு திறை மேல் தான் எண்ணம் போல. அவசரமாக வன்னியர் விழாவை இப்போதே நடாத்தியாக வேண்டுமாம். ஏதும் சொல்வதற்கில்லை. எங்கு சென்று முடியுமோ இதெல்லாம்?’

‘போதும் நிறுத்து உக்கிரசேனா, நீ போய் உன் அவசர காரியங்களைக் கவனி. எம்மிடம் உன்னுடன் வீணாய் உரையாட நேரமில்லை.. ம்.. புறப்படு’ என்றார் எச்சதத்தர்.

‘சரி சரி . நான் வருகிறேன்… அரங்கேற்றம் எப்போது நிகழும் என்று நானுந்தான் காத்திருந்தேன். அந்த ஏக்கத்தில் ஏதேதோ கூறிவிட்டேன். சரி.. நான் விடை பெறுகிறேன்’ விடைபெற்றான்.

சித்திராங்கதா எச்சதத்தரை நோக்கினாள்.
‘மகளே, இவனின் கதையை வீணாய் நம்பலாமா? குழப்பமடையாதே அம்மா, நானே அரசரிடம் சென்று விசாரித்து வருகிறேன். நீ நிதானமாயிரு’

அத்தருணத்தில் எச்சதத்தரைத் தேடிக்கொண்டு சேனாதிபதி மகிழாந்தகன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

‘வணக்கங்கள் எச்சதத்தரே, தங்களைத்தேடி கோப்பாய் சென்றிருந்தேன். நீங்கள் இவ்விடம் வந்ததாய் அறிந்து வந்தேன்’

‘வாருங்கள் சேனாதிபதி! என்னைத் தேடி ஏன் வந்தீர்கள். சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே, ஏதாவது அவசர காரியமா?’

‘ஆம் பெருவணிகரே, மன்னர்தான் பணிவோடு ஒரு செய்தியை கூறிவரச்சொன்னார். தங்கள் புதல்வியாரின் நடன அரங்கேற்றம் இப்போது நடைபெற வேண்டாமாம். அதற்கான சுபதருணம் அமைகின்ற போது நிச்சயம் நிகழ்த்தலாம் என்று என்னை நேரில் சென்று எடுத்துரைத்து வருமாறு அனுப்பி வைத்தார்’

‘இல்லை…. இல்லை….’ சித்திராங்கதாவின் செவிகளில் ஏற்றப்பட்ட ஆணியாய் அச்செய்தி அவளை கொடுமைப்படுத்தியது. மனதின் பேரச்சம் பலித்துவிட்டது.

‘இதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ளேன். இப்போது இல்லாவிட்டால் அப்படியொரு சுபதருணம் இனி வாய்க்கும் என்று நம்புவதற்கு நான் தயாரில்லை’ என்று சத்தமாக கதறினாள் சித்திராங்கதா.

‘அப்பா..அப்பா தாங்கள் இப்போதே மன்னரைச் சந்தித்து குறித்த தினத்தில்- இந்தச் சித்திரை முழுநிலவன்றே என் நாட்டிய அரங்கேற்றம் நிகழ ஆவன செய்துவாருங்கள்’ என்று தந்தையிடம் கெஞ்சினாள்.

எச்சதத்தரின் மௌனம் அவளது இறுதி நம்பிக்கைக் கதவுகளையும் அடைப்பது போல் இருந்தது.

‘அப்பா… ஏன் அமைதியாக நிற்கிறீர்கள்? இப்போதே செல்லுங்கள். நீங்கள் தானே சொன்னீர்கள் – மன்னர் பெரும் கலாரசிகர். என் அரங்கேற்ற நாளிற்காய் பேரார்வத்தோடு காத்திருப்பதாய்- இப்போது ஏதோ அவசரமதியில் கருமமாற்றுகிறார் போல் தெரிகிறது. நீங்கள் சென்று எடுத்துரைத்தால் நிச்சயம் புரிந்து கொள்வார். விரையுங்கள் அப்பா..’ என்றி அவள் மன்றாடுகிற காட்சியை காண இயலாதவராய் அதேவேளை மன்னரின் ஆணையை எதிர்த்து பேசமுடியாதவராய் கண்களை மூடி நின்றார் எச்சதத்தர்.

மகிழாந்தகன் கூட அந்த சூழ்நிலையில் என்ன கூறுவதென்றறியாதவனாய் அமைதியாக நின்றான். சித்திராங்கதாவின் நிலையைக் காணுகையில் அரசர் கூட ஏன் அவசரப்பட்டார் என்றே மகிழாந்தகனிற்கும் தோன்றியது.

‘அப்பா.. நீங்கள் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா? இன்னும் ஏனப்பா சிலையாகவே நிற்கிறீர்கள்?’ என்று கண்ணீர் ததும்ப கேட்டவள் அடுத்த கணமே கண்களைத் துடைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.
‘வேண்டாமப்பா .. உங்களால் முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். நானே சென்று மன்னரைச் சந்தித்துக் கேட்கிறேன். குறிக்கப்பட்டுவிட்ட நாளில் அரங்கேற்றம் நிகழாமல் தடுக்கும் உரிமை அரசாளும் மன்னருக்குக் கூட கிடையாது. அன்னை வீரமாகாளி ஆசி என்னுடன் உறையும் வரை இச்சித்திரை பௌர்ணமியில் நான் மேடையேறுவதை எவராலும் தடுக்கமுடியாது. நானே போகிறேன். மன்னரிடம் இப்போதே கேட்கிறேன்’ என்று அவள் ஆவேசமாக புறப்படத் தயாராகையில்

‘என்ன கேட்கப்போகிறாய் மகளே என்னிடம்’

எனும் குரல் எங்கிருந்தோ கேட்டதும் கொஞ்சம் திடுக்கிட்டாள். குரலில் நடுக்கத்துடனே ‘யார் மன்னரா?’ என்றாள்.

‘ஆம் மன்னன் தான்’.

கேள்விகள் தொடரும்…

Related posts

திரைத்தமிழ் – வேலைக்காரன்

Thumi2021

மேயுங்கள்….! மேய விடுங்கள்….!

Thumi2021

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் – 01

Thumi2021

Leave a Comment