கவி வன்மை:
திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதை அமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.
அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன. இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!
பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார். இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. திருவாசகம் முழுவதுமாக அறுபத்தேழு இடங்களிலே தன்னை நாயோடு தொடர்புபடுத்தி ஆடலழகனிடம் அருள் வேண்டி இறைஞ்சியிருக்கிறார் மாணிக்க வாசகர் (சிவபுராணம் (60 வது அடி) நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே) இவ்வாறாகத் தன்னுடைய கவியடக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மணிவாசகர் என்பது நோக்குதற்குரியது. சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.
கீர்த்தித் திருஅகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப் பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார். அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு. இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.
திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தை விடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.
மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.
மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம். தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்க வேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின்நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமை பெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக் கவிதைகளில் மாறிவிடுகிறார்.
இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமை மூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியெழுச்சியில் மாறுகிறார். கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் அடியார்களைப் பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப் பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார். நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.
ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப் பெற்று, சிவபெருமானைத் துதிக்க வேண்டும். இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!!
போற்றி!!! போற்றி!!!