இதழ்-28

அட கலக்குது பார் இவ ஸ்டைலு!…

//அக்கடன்னு நாங்க உட போட்டா

துக்கடான்னு நீங்க எட போட்டா

தடா உனக்கு தடா//

அக்கட என்றால் என்ன? துக்கடா என்றால் என்ன? எழுதியது வாலி. எங்கே கற்பனை   தமிழில் அவரே சிஷ்டித்த வார்த்தைகளில் ஒன்றோ!

“முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா

முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா”

முக்காலா, முக்காபுலாவை கற்பனைத்தமிழ் என்று கடந்த வாலி இங்கேயும்,

//முக்கி முக்கி முத்தெடுத்தேன்  முக்காலா

முட்டு மூல முடுக்கெல்லாம்  முக்காபுல்லா//

என்று அதே கற்பனையை இசை சந்தத்தில் கலந்திருக்கும் போது, ‘அக்கட’ என்ன?, என்ற  சந்தேகத்தோடு தேடினேன்.

“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது

வாசலில் நின்றது வாழவா என்றது”

எது தந்தது?  இணையம்.

இணையத்தில் நாஞ்சில் நாடனின் கட்டுரை ஒன்று இப்படி பதில் தந்தது.

 ‘அக்கட’ என்பது வியப்பை வெளிப்படுத்தும் கன்னட மூலச்சொல். ஆனால் கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்திலேயே கம்பன் ‘அக்கட’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறானாம்.

“திக்கயம் வலி இல, தேவர் மெல்லியர்,

முக்கணன் கயிலையும் முரண் இன்றாயது;

மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,

அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!”

இராவணனின் படைத்தளபதிகளில் ஒருவன், ராமனும் அவனது வானர படைகளும் பெரும் வலிமையுடன் போரிட வருகின்றன என்று  இன்னொரு படைத்தளபதியிடம் கூற, அவர்கள் வலியவர்கள் என்றால் இராவணன்  மட்டும் சளைத்தவனா என்று மற்றைய படைத்தளபதி இராவணன் பெருமை  கூறுவது போல அமைந்த பாட்டு இது. இதில் ‘அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!’ என்பதில் வரும் ‘அக்கட’ என்பது இராவணனின் வலிமை மேல், ஆச்சரியத்தை குறித்து வருகிறது.

ஆகவே ‘அக்கட’ என்பது தமிழ்ச்சொல்.

//அக்கடன்னு நாங்க உடை போட்டா//

ஆச்சரியப்படும் வகையில் உடை அணிந்தால், Wow! She is marvellous in this costume!

இதே ஒலியில் இன்னொரு சொல் இருக்கிறது. அது ‘அக்கடா’.

இது ஒரு தெலுங்கு சொல். அங்கே என்று பொருள். ‘அக்கடானு கிட’ என்ற தமிழ்நாட்டு வழக்கு ‘அங்கனேக்கே கிட’  என்ற யாழ்ப்பாண வழக்கின் அதே ஒலிப்பு. ரஜினி படங்களில் ‘அக்கடா சூடு’ என்ற பஞ்ச் அதிகம் வரும். அக்கடா சூடு என்றால் அங்கே பார்.

‘துக்கடா’ என்பது ஹிந்தி மொழியில் உள்ள ‘துக்கரா’ என்பதன் திரிபடைந்த தமிழ்நாட்டு வடிவம். துக்கடா எண்டால் துண்டு. Piece.

//துக்கடான்னு நீங்க எட போட்டா//

ஆண்களுக்கு இடையிலான சம்பாசனையில் அழகான பெண்ணுக்கு  ‘நல்ல துண்டு’ என்ற வழக்கு இருக்கிறது. Nice piece.

பெண்கள் நாங்கள் உங்கள் கண்களை கவர்ந்து ஆச்சரியப்படும் வகையில் உடை அணிந்தால், நீங்கள் இவளொரு செம பிகர்! என்று கணித்தால்,

//தடா உனக்கு தடா//

தடா என்பது இந்திய பயங்கரவாத தடைச் சட்டத்தின் பெயர். Terrorist and Disruptive Activities (Prevention) Act -TADA. தடா சட்டம் . இந்தச்சட்டம் பின்னர்  மறுசீரமைக்கப்பட்டு பொடா( POTA) என்று மாற்றப்பட்டது.

அழகாய் நாங்கள் ஆடை அணிந்தால் ஆண்கள் நீங்கள் நல்ல பிகர் என்று ஜொள்ளு விட்டால் பயங்கரவாத தடைச் சட்டம் உங்கள் மேல் பாயும்.

//நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல

மடிசாரும் சுடிதாரும்  போயாச்சே

ஹாலிவுட்டும் பாலிவுட்டும்  போயே போச்சே

அத்தபோட்டு இத்தபோட்டு  ஓஞ்சாச்சே

ஆகமொத்தம் பஞ்சகச்சம்  ஒன்சே போச்சே//

மடிசார் என்பது ஐயர், ஐயங்கார் போன்ற தமிழ் பிராமண பெண்கள் சேலை அணியும் ஒரு முறை. இதனை கொசவம் என்றும் சொல்வார்கள். இதில் இரு வகை முறைகள் இருக்கிறது. வைணவ மதத்தினரான ஐயங்கார்கள் புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினரான ஐயர்கள் மேல் தலைப்பை வலது பக்கமாகவும் மடித்து அணிவார்களாம்.

“மாமி சின்ன மாமி மடிசார்

அழகி வாடி சிவகாமி”

என்று கொஞ்சி பின்னர் பெண்கள் சுடிதாருக்கு மாறினார்கள்.

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே

என் மீது காதல் வந்தது

எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா”

என்று ஒரு காதலன் அப்பொழுதும் பின்னால் துரத்தினான்.

அது இது என்று பல வகை உடை எல்லாம் போட்டு ஓய்ந்து இப்பொழுது அவள் பிகினியை தெரிவு செய்திருக்கிறாள். இப்பொழுதும் பஞ்சகச்சம் கட்டி கட்டுப்பெட்டியாக இரு என்றால்!

பஞ்சகச்சம் என்பது வேட்டியை ஐந்து இடங்களில் மடித்து கட்டும் ஆடை. இது பொதுவாக ஆண்கள் ஆடை அணியும் முறை. இதன் பெண் வடிவம் தான் மடிசார் என்று சொல்லலாம்.

//அடமெண்டா நாங்க நட போட்டா

தட போட நீங்க கவுர்மெண்டா

தடா உனக்கு தடா//

Adamant நடை – திமிர் நடை. மிடுக்காக நடந்தால் எங்களுக்கு தடை போட நீங்கள் என்ன Government ஆ?

“நடையா இது நடையா

ஒரு நாடகமன்றோ நடக்குது”

என்று பெண்களில் இடை வளைந்து நெளிந்து நடமாடும் கொடியாக சந்தத் துடிப்போடு நடமாடும் கலை நயம் என்று புகழ்ந்த ஆண் கவிஞனுக்கெல்லாம் இவளது இறுமாப்பு நடை கலகத்தை தர, ஆண் என்ற அகங்காரம் அவள் மேல் அதிகாரம் செய்கிறது. குனிந்த தலை நிமிராது, மண் பார்த்து நடப்பது தானே பெண்ணின் இயல்பு! என்ற கலாசார கொக்கரிப்பு இனியும் செய்தால், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது தான் வழி!

//மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்//

1995 களில் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அரசில் பிரச்சார மேடைகள் களைகட்டிய காலம்.ஜெயலலிதாவை உதாரணமாக எடுத்து, மேடை ஏறிடும் பெண் நாட்டில் Sensation.

//ஜாடை பேசிடும் கண் தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்//

பெண்ணின் கண்கள் பேசும் கவிதைகளினால் தானே காவியங்களும் காப்பியங்களும் காதல் இதிகாசங்களும் பிறந்தது! Temptation.

“உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே”

காதலர்கள் மொழியில்,

//நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்//

ஆண்களில் இதய பலூனில் ஓட்டை போடும் ஊசி – Needle அவள் கண்கள். வேலெறியும் கூர்விழிகள்.

//திரும்பிய திசையில  எங்கேயும் கிளாமர் தான்

அரும்பிய வயசுல  எங்கேயும் ஹியுமர் தான்

நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல//

பருவமடைந்த மங்கைகள் கூடினால் அங்கே காதல், காமம், உடல், செக்ஸ் என்பன பற்றிய பேச்சுக்கள் திருவிழா காணும்.  கிளுகிளுப்புக் கதைகளும் கிசுகிசு அலசல்களும் 18+ ஜோக்குகளும் நிரம்பியிருக்கும் கூடலில் உலவும் ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்லை!

அவள் 13 வயதில் பருவமடைந்த போது ஹார்மோன்களின் தாண்டவத்தில் தத்தளித்த பெண்மை பற்றி சொல்கிறாள்,

“தர்டீன் வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை   பருவத்தில்

போர்ட்டீன் வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்

ஃபிப்டீன் வந்தது மலர்கள் பூத்தன எந்தன்  தேகத்தில்

மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை  நேரத்தில்

சிக்ஸ்டீன் வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்

பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளி  கூடத்தில்”

பருவமடைவதை சடங்காகவும் தீண்டத்தகாத துடக்காகவும் பார்த்த சமூகத்தில் அது உடலில் இயல்பாக நடக்கும் இரசாயண மாற்றமே என்று விஞ்ஞானம் அறிந்த இவள் தன்னுடைய பருவ மாற்றங்களை பட்டியலிடுகிறாள்.

“மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே”

பருவமடைந்ததும் அழகாய் மின்னும் தன் முன் வந்த பெண்கள் எல்லாம், குழந்தை பிறந்ததும் ஏற்படும் ஓமோன் மாற்றங்களால் பருமனாகி விடுகிறார்கள்.

“இடையா இது இடையா

அது இல்லாதது போல் இருக்குது”

ஆண்கள் சைஸ் ஜீரோவை விரும்பினாலும் நடைமுறையில் இல்லாது போன’ இல்லாத இடையோடு’ தன்னை சிலிம்மாக்கி Noodle இடை பேணுகிறாள் இந்தக்காலத்துப் பெண்.

//இடுப்பில டயர் இல்ல

சிலிம் இடை நூடுல் தான்//

இப்படியான பெண்ணின சுதந்திரம் , ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் எதுவும், எந்த செய்திச்சனலிலும் வந்ததில்லை. இவளோ, தன்னுடைய அடுத்த தலைமுறைக்காக இப்போது பேசிக்கொண்டிருக்கிறாள். 

//இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல

என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல//

1922 ஆண்டு நிறுவப்பட்டு உலகில் பழம்பெரும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனமான BBC – British Broadcasting Cooperation கூட சொல்லாத தகவல்கள் இவை. MTV என்றால் அமெரிக்காவில் பிரபல Musical Television, அதில் வரும் பாடல்களில் உள்ள அழகிகளுக்கெல்லாம் தானே அரசி என்கிறாள்.

“அழகின் அழகே நீ யாரடி

ஆண்களின் எதிரி நீ தானடி”

அவளுக்கு இந்த சமுகம் சொல்லும் சாத்திரங்கள், சம்பிரதாயங்களில் அக்கறை இல்லை. அவளின் வெளியில் அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் அவளது சந்தோஷம்.

//சொன்னதுல குத்தமுண்டா  கோபாலா

குத்தமுன்னா ஊத்தி தாரேன்  கோக-கோலா//

நான் இதுவரை சொன்னதில் பிழை இருந்தால் சொல்லுங்கள்! பிழை இருந்தாலும் பரவாயில்லை, Cheers! Take it easy, Be cool என்றபடியே Coco cola  குடிக்க அழைக்கிறாள்,

“குலுக்கி வச்ச கொக்கோ கோலா போல

சாய்ங்கால வேள பொங்கி வந்தாளே”

என்று ஆண்கள் வழியும் அதிரசம்!

“ஹே மேனியே மேக்னெட் தாங்கோ

வார்த்தையில் சாக்லேட் தாங்கோ

நான் ஒரு மின்சாரங்கோ

தள்ளி நின்னுகோங்கோ

ரெட் ஒயின் பாட்டில் நான்

காஷ்மீர் ஆப்பிள் நான்

கோல்டன் ஏஞ்சல் நானே”

ரெட்வைன் போதை வேண்டுமென்றால் ரெட் வைன் சுவைக்கும் தகுதியோடு வா! இல்லை இன்னும் பழைய கள்ளு தான் வேண்டுமென்றால் நான் உனக்கானவள் இல்லை என்று ஓரம் கட்டுகிறாள்  ரஷ்யாவின் வொட்கா.

//ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்

தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்//

அவள் இப்படித்தான் உடுக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற பழைய பஞ்சாங்கத்தை இப்பொழுதும் ஓதினால், உங்களை அவள்  ஓரங்கட்டிவிடுவாள்! அதனால் சுதந்திரமாய் மிடுக்கோடு சீறும் பெண்களுக்கு கை தூக்கி Salute அடிக்க சொல்கிறான் வாலி.

Related posts

சிங்ககிரித்தலைவன் – 27

Thumi2021

வெள்ளைக் காதல் – 03

Thumi2021

களிப்பூட்டும் கிரிக்கெட்

Thumi2021

Leave a Comment