பசிக்கிறது
சேர்த்துவைத்த பணக்கட்டுகள் பசியாற்றவில்லை
பணமிருந்தும் கையேந்துகிறேன்
என்னிடம் எந்தவொரு அறுவடையுமில்லை
எம் ஆடம்பரங்கள் மெல்லச் செத்துப்போவதை
நீங்கள் கவனித்தீர்களா அன்பர்களே?
என் மதமும் கல்வியும் புகட்டிய எளிமையை
எனக்கு பயிற்ச்சியாய் கற்றுத்தரும் காலமிதுவோ?
அன்போடு அனைத்து உறவாடிய
என் தோழமைகள் எங்கே?
கடைசியாய் அவர்களைச் சந்தித்த போது
இறுதியாய் ஒருமுறை கட்டியணைத்து
அன்பைப் பறிமாற்றிக் கொள்ள
ஏன் என் நெஞ்சம் மறந்தது?
நாலா பக்கமும் பற்றியெரியும் ஒரு காட்டில்
சிக்கிய அனுபவமுண்டா தோழா?
பற்றியெரியும் காட்டில்தான் இப்போது
நீயும் நானும் நிற்கின்றோம்
நெருங்கிவர அவகாசம் தந்திருந்த
என் காதல் எங்கே?
கையிருப்பிலிருந்த கால அவகாசங்கள்
காலவதியாகிற்று – தள்ளியே இருப்போம்.
சேர்ந்தே இருத்தல் நேசமென்றிருந்த காலம்
எங்கே போய் மறைந்தது?
பிரிந்தே இருத்தல் நலம் என்கின்றனரே!
வீடுகளிலே முடங்கிப் போனோம்
என வருந்துகிறீர்கள்- இல்லை இது மற்றொரு வாய்ப்பு
குடும்பத்தோடு அன்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
பைய நம்மை வந்துசேரப்போகிறது
நம் அந்திமக்காலம்
சேயைத்தாய் விட்டுவிடும் காலமும்
தாயைவிட்டு சேய் ஓடும் காலமும் இதுவே
உறவுகளைக்கண்டு விரண்டோடும் ஊழியும் அதுவே
கூட்டமாய் புற்றீசலாய் செத்துமடியும்
அந்திமக்காலமும் இதுவே
சூன்யமாய் நம்மைச் சூழ்ந்த துன்பம்
ஓர் நாள் விட்டுவிலகும்
அதுவரை
அன்பாய்,
அன்போடு,
தூரங்களால் தொலைவாகி,
நெஞ்சங்களால் நெருங்கி,
வாழ்வோம்.
ருஸ்னா நவாஸ் (மாவனல்லை)