மண்ணில் உயிர்ப்பல்வகைமையை மனித நகர்வுகள் பாதித்ததை போன்று நிச்சயமாக மண்வளத்தையும் பாதித்திருக்கின்றமை நிதர்சனம். ஆனால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் நாம் விவசாயிகளின் மேல் போட்டுவிடமுடியாது.
மிகச் சிறிய தீவான இலங்கையைப் பொறுத்தவரையிலே மற்றைய நாடுகள் போல் அங்கு காணப்படும் அதிகரித்த சனத்தொகை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் அதிகரித்த நிலைப்பாவனையும் அதன் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைந்த காடுகளை அதிகளவில் அழிவுக்குள்ளாக்குகின்றன. இதனால் பல தாவர, விலங்கினங்கள் அழிவுக்குள்ளாகி, அங்குள்ள உயிரினப்பல்வகைத்தன்மை அருகிவருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய நிறுவனத்தகவல்களின்படி 1990 இலே 2 .4 மில்லியன் ஹெக்டராகக் காணப்பட்ட காடுகளின் பரப்பளவு 2010 இலே 1.9 மில்லியன் ஹெக்டராகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
‘விவசாய பசுமைப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன்பு வடகிழக்கில் விவசாயிகள் இயற்க்கையோடொன்றித்த விவசாயத்தை மேற்கொண்டனர். காலங்காலமாக சுதேசமாகப் பெருக்கிக் காத்துவந்த விதையினங்கள் பயிர்களாயின, அத்தோடு விலங்குகள், தாவரங்களிலிருந்து பெறப்பட்ட கழிவுகளும் தாவரங்களுக்கு உரமாயின. வடகிழக்கில் மிக அதிகளவான ஒருங்கிணைந்த பண்ணைமுறைமைகள் பழைய காலங்களிலே புழக்கத்திலிருந்தன. சூழலோடொன்றிணைந்த, நட்பியல் விவசாயமுறைமைகள் கைக்கொள்ளப்பட்டன. பசுமைப்புரட்சியின்பின்னர் அசேதன இரசாயனங்கள் உரங்களாகவும், கிருமிநாசினிகளாகவும் விவசாயத்திலே பயன்படத்தொடங்கின.
விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்தது. ஆனால் விவசாய நிலங்கள் தமது இயற்க்கையை, கருவளத்தை இழந்தன. நிலங்கள் அசேதன இரசாயனங்களை மட்டுமே பதிலளிக்கத் தொடங்கின. பாரம்பரிய விதையினங்கள் பாவனையிலிருந்து அருகின. புதிய புதிய கலப்பினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவைகளில் பூச்சி, பீடைகள் தாக்கம் அதிகரிக்கவே பூச்சி, பீடை நாசினிகளின் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரிக்கத் தொடங்கியது.
அதிகரித்த அசேதன இரசாயனங்களின் பாவனையால் விவசாயம் செய்கின்ற மண்ணிலே உள்ள நுண்ணங்கிகள், பூச்சியினங்கள், மண்புழுக்கள், நத்தைகள் மற்றும் ஊரும் விலங்குகள் அழிவடையத் தொடங்கின. இதனால் சேதனப்பொருட்கள் மண்ணிலே உக்குவது இல்லாதொழிக்கப்பட்டது. அத்தோடு அதிகரித்த பீடை நாசினிப்பாவனையால் நன்மைதரும் பூச்சியினங்களான தும்பிகள், லேடிபேட் வண்டுகள், மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமான தேனீக்கள் என்பன பாரிய அழிவைச் சந்தித்தன. ஆக மொத்தத்தில் இயற்கை விவசாயச் சூழற்றொகுதி முற்றாகக் குழப்பமடைந்துவிட்டது.இதைவிட இவ் அசேதன இரசாயனங்கள் குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற நன்னீர்நிலைகளுடன் கலப்பதால் அது மனிதனுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் மிகப்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக வட இலங்கையிலே அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள புற்றுநோய்கள், சிறுநீரக நோய்கள், வேளாண் விலங்குகளின் அதிகரித்த இறப்புக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சில விவசாயிகள் தமது சுயநலம் ஒன்றை மட்டுமே கருதிக்கொண்டு பின்வரும் வழிகளிலே தாம் வாழும் சமூகங்களுக்குத் துரோகமிழைக்கின்றார்கள். மரக்கறிகளுக்கு பீடைநாசினிகள் தெளித்தபின் அப்பீடைநாசினிகள் முற்றாக்கச் செயலிழக்கும் காலம் மட்டும் பொறுத்திருக்காது உடனேயே மரக்கறிகளை சந்தைப்படுத்துகிறார்கள். சில விவசாயிகள் சந்தைப்படுத்தலுக்கு வசதியாகத் தங்கள் விளைபொருட்களுக்கு நேரடியாக இரசாயனத்தைப் பிரயோகிக்கிறார்கள். உதாரணமாக சில விவசாயிகள் வாழைக்குலைகள் மரத்திலிருக்கும்போதே அவற்றிக்கு யூரியா கட்டிவிடல், மாங்காய்களை, வாழைக்காய்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காக செயற்கை இரசாயனங்களை ஊசி மூலம் ஏற்றுதல் என்பன.இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. ஆனால் அசேதன விவசாயம் சார்ந்து விவசாயிகளின் தரப்பிலும் நாம் நின்று சிந்திக்க வேண்டும்.
விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் (Farm Machine) அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்தலில் நாம் பாரம்பரிய கிராமங்களை விட்டுவிட்டோம். பாரம்பரிய விவசாய பழக்கத்தை மறந்துவிட்டோம். நம்முடைய சுகத்திற்கு, எளிமையான வாழ்க்கை முறைக்கு, தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை நாடுகின்ற நாம், ஏன் விவசாயத்தில் மட்டும் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்?
முன்பு ஒரு விவசாயியின் குடும்பத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்கள் விவசாயத்தை கவனித்து வந்தார்கள். ஒரு வீட்டில் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் குப்பைத் தொட்டியில் போட்டு மக்கிய உரம் அந்த வருடத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கிடைக்கும். வயல்வெளிகளைச் சுற்றி நிறைய மரங்கள் இருக்கும். புங்கம், வேப்பம் போன்ற மரங்களின் தழைகள் நெல் பயிரிடப்படும் சேற்றில் மிதித்து நெல் நடவு செய்வார்கள். இந்த நிலையைத் தற்போதைய விவசாய வல்லுனர்கள் இயற்கை விவசாயம், அங்கக விவசாயம் (Organic Agriculture) என்று பல முறைகளாகக் கூறி வருகிறார்கள். தற்போது இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமானால், எத்தனை விவசாயிகளிடம் உழவு மாடுகள் உள்ளது. அப்படி மாடுகள் இருந்தால் எத்தனை பேர் மாடுகளை வைத்து ஏர் ஓட்டுகிறார்கள். அப்படியே இருந்தாலும் அத்தனை மாடுகளுக்கும் தேவையான தீவனங்கள் கிடைக்கிறதா? எத்தனை விவசாயிகள் ஏர் ஓட்டுவதற்குத் தயாராக உள்ளார்கள்? மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றாவிட்டால், விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக மாறிவிடும். விவசாயத் தொழில் லாபகரமாக இல்லாமல் போய்விடும். ஒரு காலத்தில் விவசாயம் செய்ய ஆட்களைத் தேட வேண்டிய நிலைக்கு நிச்சயம் செல்ல நேரிடும்.
இயற்கை வேளாண்மையைத் தவறு என்று சொல்லவில்லை. மேல் சொன்னவாறு விவசாயத்திற்கு மாடுகள், தேவையான அங்கக உரங்கள் இருந்தால் அப்படி விளைவிக்கும் பொருட்களுக்கு உண்மையில் கட்டுபடியான விலை கிடைத்தால், கண்டிப்பாக அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மையைச் செய்து அனைத்து பொருட்களுக்கும் செயற்கை உரம் போடாமல், பூச்சி மருந்து அடிக்காமல் கொடுத்திருப்பார்கள்.ஆனால் அனைத்துத் துறையிலும் நாம் உபயோகிக்கும் பொருட்களில் மாற்றங்களை சந்தித்துவிட்டு, விவசாயத்தில் மட்டும் இன்னும் பழைய முறையில் செய்யப்படும் உணவுகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும் என்ற வினா எழுகின்றது. மனிதர்களாகிய நாம் அத்தனை மாற்றங்களையும் செய்துவிட்டு நான் இன்னும் பழமையை மட்டுமே விரும்புவேன் என்பதில் எந்த பலனும் இல்லை.சிந்தனை மாற்றம் என்பது செயல் மாற்றமாக்கப்பட வேண்டியது விவசாயிகளுக்கு மாத்திரமின்றி மனிதர்களாகிய நாம் அனைவரினதும் கூட்டுப்பொறுப்பாகும்.
ஆராய்வோம்…..
த.விதுர்ஷன்,
மாணவன், கொழும்பு பல்கலைக்கழகம்.