இதிகாசங்களும் இலக்கியங்களும் காரணத்தோடுதான் காலம் கடந்தும் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாதா பிதா குரு தெய்வம் என்கிற அடிப்படையில் எம் வணக்கத்துக்கிரியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இவர்களுக்கான முக்கியத்துவமும் முன்னுரிமையும் மாறாதா? இவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கலாமா? தண்டனை இல்லையா?
அனைவரிலும் முதன்மையானவளாக அன்னை பார்க்கப்படுகிறாள். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்கிறார்கள். அப்படிப்பட்ட தாய் தர்மத்தில் இருந்து விலகி நடந்தால் என்ன செய்வது? தாயை பழிக்கக் கூடாது என்று குற்றத்தை பொறுப்பதா? ஒருபோதும் அவ்வாறு எமது முன்னோர்கள் சொல்லவில்லை. கற்பு நெறி தவறிய தாயின் சிரத்தை தந்தையின் ஆணைப்படி வெட்டி வீழ்த்திய பரசுராமனின் கதை மூலம் தாயே ஆனாலும் குற்றம் செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல் மக்களுக்கு பல கொடுமைகளை செய்த இரணியனுக்கு மகன் பிரகலாதன் ஊடாகவே பாடம் புகட்டி நரசிம்ம மூர்த்தி வதம் செய்த கதை மூலம் தந்தையே ஆனாலும் தர்ம நெறி தவறினால் தண்டனைக்குரியவராகிறார் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்.
திரௌபதி எனும் பெண் அரசவையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், மேலும் பல சந்தர்ப்பங்களில் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தால் அநீதிகள் நடந்த போதும் அமைதி காத்த துரோணரை அவரது தலைமைச் சீடன் அர்ச்சுனன் அவரிடம் கற்ற வில் வித்தை மூலமே வீழ்த்திய கதையும் இதையே சொல்கிறது.
எல்லோருக்கும் அப்பாற்பட்ட சக்தியாக பார்க்கப்படும் இறைவனே ஆனாலும் குற்றம் செய்தால் குற்றமே என்று நக்கீரன் கதை மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனையே எதிர்த்து நின்ற நக்கீரர் எமக்கெல்லாம் நல்ல உதாரணம்.
எனவே கர்த்தாவுக்கு ஏற்ப குற்றத்தின் அளவு குறைவதில்லை. தர்மம் எல்லோருக்கும் பொதுவானது.பெற்ற அன்னையாக இருந்தாலும், வளர்த்த தந்தையானாலும், கற்பித்த குருவானாலும், அந்த கடவுளே ஆனாலும் அவர்கள் குற்றம் செய்தால் எதிர்ப்பது தவறாகாது. எதிர்க்காமல் விடுவது தான் தவறு. ஒப்பற்ற அன்பினால் வழங்கப்படும் மதிப்பையும் மரியாதையையும் துஷ்பிரயோகம் செய்வது மகாபாவம் என்பதை யாவரும் உணர வேண்டும்.
தர்மமே வெல்ல வேண்டும்!