வேகம் என்பது நேரத்தோடு சம்பந்தப்பட்டது என்கிறது விஞ்ஞானம். ஆனால் அது உண்மையில் பார்வையோடு சம்பந்தப்பட்டது. இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டதே என்று ஏங்குபவர்கள் வாழும் அதே பூமியில்த்தான் அதே நாள் ஏன் இன்னும் முடியவில்லை என்று வருந்துபவர்களும் வாழ்கிறார்கள். நாள் நகரும் வேகம் ஒன்றுதான் என்றாலும் அந்த நாளை அனுபவிப்பவர்களின் பார்வை அந்த நாளின் வேகத்தை தீர்மானிக்கிறது.
வேகமாக நடக்கும் சம்பவங்கள் மீதும் வேகமாக வளர்ச்சியடையும் மனிதர்கள் மீதும் தான் எமது கவனம் எப்போதும் இருக்கும். சில மனிதர்கள் மிக மெதுவாகவே சாதிப்பார்கள். அவர்களின் வளர்ச்சி அவர்களோடு இருப்பவர்களுக்கு தெரியாது. எப்படியென்று கேட்கிறீர்களா? இந்த நத்தை போல. இங்கே அட்டையை அலங்கரித்த அந்த நத்தை காலையில்த்தான் அந்த மரத்தில் ஏறத் தொடங்கியது. இதர பல உயிரினங்கள் பல முறை அந்த மரத்தில் ஏறி இறங்கி இருக்கும். நீங்கள் பார்க்கும் போதெல்லாம் அந்த நத்தை அந்த மரத்தில் எதோ ஒரு பகுதியில் அசையாமல் இருப்பதாகத்தான் தெரியும். ஆனால் மாலையில் அது மரத்தின் உச்சியை அடைந்திருக்கும். உற்றுப் பார்ப்பவர்களுக்கே அந்த உண்மை விளங்கும்.
அவதானத்தை பெறாமல் சாதிக்க நினைப்பவர்களுக்கு நத்தை நல்ல உதாரணம். அப்படியென்றால் அமைதியும் பொறுமையும் நல்லதா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே! ஆம் அமைதியும் நஞ்சுதான்! சாதிக்க பாடம் சொன்ன நத்தையிடம் அந்தப்பாடத்தையும் கற்கலாம். எப்படி?
நத்தை பலருக்கு உணவாவதால் நத்தை வளர்ப்பும் ஒரு வியாபாரம். ஆனால் பலரின் உணவான நெல் தான் நத்தைகளுக்கும் உணவு. வாயும் வயிறும் கால்களும் அடிப்பாகத்தில் கொண்ட அந்த சின்ன உயிரினம் ஊர்ந்து செல்லும் பரப்பையே உணவாக்கிக் கொள்கிறது. நெல் வயல்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும் இந்த நத்தைகள் பயிர் பலன் தருவதை பலவாறு தடுக்கிறது. தண்டுகள், இலைகள், கதிர்கள் என அனைத்தையும் தின்றுவிடுகின்றன. இந்த செயற்படும் அமைதியாகக் தான் நடக்கிறது. ஆனால் ஒரு பெரிய வயற்பரப்பே இந்த செயற்பாடு சர்வ நாசமாக்கி விடுகிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் ஆய்விற்காக கொண்டுவரப்பட்ட ஓர் உயிரினமான கிழக்கு ஆப்பிரிக்க நத்தை இந்தியாவின் கொடிய ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறிய கதை தெரியுமா?
அதற்கு முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலத்தைச் சேராத உயிரினம், வேறு நிலப்பகுதியிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருந்து, இந்த நிலத்திலிருக்கும் மற்ற உயிரினங்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் அதன் இனப்பெருக்க விகிதமும் உணவுமுறையும் இருந்தால், அதன் காரணமாக, அது பரவியுள்ள நிலத்தில் வாழும் மற்ற உயிரினங்களை ஆபத்துக்குள் தள்ளினால், அதுவே ஆக்கிரமிப்பு உயிரினம் எனப்படுகிறது.
19-ம் நூற்றாண்டில், வில்லியம் ஹென்ரி பென்சன் (றுடைடயைஅ ர்நசெல டீநளெழn) என்ற ஆங்கிலேயே நத்தையினவியல் ஆய்வாளர் (டீசவைiளா அயடயஉழடழபளைவ), இந்தியாவிற்கு கிழக்கு ஆப்பிரிக்க நத்தையின் ஒரு ஜோடியை மொரீஷியஸிலிருந்து கொண்டு வந்தார். இந்தியாவிலிருந்து அவர் திரும்பிச் செல்லும்போது அவற்றை இந்திய நண்பர் ஒருவரிடம் கொடுத்து விடவே, அவரும் கொல்கத்தாவிலிருந்த தன்னுடைய தோட்டத்தில் அவற்றைத் திறந்து விட்டுள்ளார். அதற்குப் பிறகு, 1858-ம் ஆண்டு மீண்டும் இந்தியா வந்த பென்சன், கொல்கத்தாவில் அவை நன்கு பெருகி பரவியிருந்ததாகப் பதிவு செய்துள்ளார். 20-ம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியா முழுக்க பெருகின. பழத்தோட்டங்கள், விவசாயப் பயிர்கள் அனைத்திலும் இவை பல பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வகையைச் சேர்ந்த நத்தைகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. குறைந்தபட்சமாகப் பார்த்தாலும், ஒரு நத்தை ஓராண்டில் சுமார் 1,000 நத்தைகள் பிறக்கக் காரணமாக இருக்கிறது. நத்தை தானே என எவரும் பொருட்படுத்தாமல் விட்டதால் அது உலக அளவில் மிகவும் ஆபத்தான, மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
எனவே, வீட்டோடும் விடாமுயற்சியோடும் ஊர்ந்து திரியும் நத்தைகளை அவதானத்தோடு கையாளுங்கள். நத்தைகளிடம் மட்டுமல்ல, நத்தை போன்ற மனிதர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்!