இதழ் 33

சிங்ககிரித்தலைவன் – 31

பள்ளத்தின் பதில் கிடைத்தது!

பொழுது புலர்ந்தது… சிங்ககிரியின் உச்சியில் இருந்து பறவைகளின் இனிய ஓசை எழுந்தது…சுற்றிலும் இருந்த பெருங்காடு தன் இரவுப் பொழுதின் அமைதியை விலக்கி ஆரவாரமடையத் தொடங்கிவிட்டது…

அனுராதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு யானைகள் சாத்தானின் வாய் என்று சொல்லப்பட்ட சிங்ககிரிக் குன்றில் இருந்து ஏறத்தாழ இரு காத தூரம் தொலைவில் அமைந்திருந்த வளாகத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாய் நகர்ந்து சென்றன… மீகாரன் எதிர்பார்த்தபடியே முன் சென்ற யானையில் காசியப்பன் கம்பீரமாக அமர்ந்திருந்தான்… எப்படியும் தன் ஓலையை படித்த காசியப்பன் அவ்விடத்திற்கு தானே நேரில் வருவான் என்பது மீகாரனுக்கு தெரியாமலும் இல்லை…

அதிகாலை சூரியன் வருவதற்கு முன்பதாகவே காசியப்பன் யானைகளோடு அவ்விடம் அடைந்து விட்டான்! இதைமுன்னரே எதிர்பார்த்த மீக்காரன் அதிகாலையிலேயே தன் கூடாரத்துக்கு முன்பதாகக் காத்திருந்தான்!

‘ஆஹா… காசியப்பரே நேரில் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லையே…”

‘மைத்துனரே… அது தான் அதிகாலையிலேயே எழுந்து காத் திருக்கின்றீர் போலும். ஹா …ஹா….”
யானையில் இருந்து இறங்கிய காசியப்பன் மீகாரனைத் தழுவிக்கொண்டான்!

‘இரண்டு யானைகள் கேட்டேன்… ஆனால் நான்கோடு வந்த போதே அது காசியப்பன் என்று தெரியாதா?”

‘மீகாரா… உன் புதிர் நிறைந்த ஓலையால் இரவு முழுவதும் தூக்கம் இல்லை… என்ன கண்டறிந்தாய் கூறு… இதோ யானைகள் பயன்படுத்திக்கொள்!”

மெல்ல எழுந்த ஆதவனின் கிரணங்கள் காசியப்பனின் முகத்தில் பட்டு மின்னின..

‘காசியப்பா… சாத்தானின் வாய் இன்றோடு இல்லை… “

என்றவன் அருகில் நின்ற வீரனுக்கு சைகை செய்தான்! அவன் தன் கையில் வைத்திருந்த சங்கை முழங்கினான்! சிறிது நேரத்தில் எல்லாம் வீரர்கள் அணிவகுத்து ஓரிடத்தில் வரிசையானார்கள். மீகாரன் காசியப்பனை அழைத்துக் கொண்டு அவன் அமைத்து வைத்திருந்த உயரமான பரணில் ஏறிக்கொண்டான்!
பரணில் ஏறிய பிறகு மீகாரன் வீரர்களுக்கு சைகை செய்தான்… ஒரு வீரன் இரண்டு தடவை சங்கை முழங்கினான். யானைகளை வீரர்கள் நடாத்தி சென்று மீகாரன் பள்ளம் தோண்டியிருந்த பகுதியை கடக்க வைத்தனர்… காசியப்பன் இவற்றை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான். மீகாரன் காசியப்பனின் முதுகில் தட்டி, வீரர்கள் புதைந்து போன இடத்தை சுட்டிக்காட்டினான்…

காசியப்பனின் விழிகள் அகலத் திறந்து கொண்டன… அந்த இடத்தில் ஒருவாய் திறந்தது… யானைகள் பாதையைக் கடந்ததும் அது மூடிக்கொண்டது!

‘மீகாரா … என்ன இது அதிசயம்? சாத்தானின் வாயா அது? யானைகள் கடக்கும் போது திறக்கிறதே…”

‘காசியப்பா… அது சாத்தானின் வாயும் அல்ல… மர்ம புதைகுழியும் அல்ல… இங்கே பல ஆண்டுகளுக்கு முன் வசித்தவர்கள் செய்த நுட்பம்… இந்த சிங்ககிரி இதற்கு முன்பும் பிரபலமான ஒரு நகரமாகவோ, கோட்டை வளாகமாகவோ இருந்தி ருக்க வேண்டும்… அதோ பார் யானைகள் கடந்த இடத்தில் கல்லடுக்குகள் தெரிகிறது… யானை களின் பாரத்தால் அவை சற்று கீழிறங்க உள்ளே இவ்வாறான பல கல்லடுக்குகள் செயற்பட்டு இந்த பள்ளம் தற்காலிகமாக உருவாகிறது. மீண்டும் யானைகள் கடந்த இடத்தில் பாரம் குறைய இந்த பள்ளத்தின் வாய் அதாவது இரண்டு கற்பலகைகளும் மூடிக்கொள்கின்றன…”
காசியப்பன் உறைந்து போய் நின்றான்!

‘என்ன… காசியப்பா… இப்போது புரிகிறதா? அன்றைக்கு எம்வீரர்கள் யானைகளை எதேற்சையாக அவ்வழியால் நடத்திவர பள்ளம் தோன்றிய இடத்தில் துப்பரவு செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அதற்குள் விழுந்தனர்!”

‘இப்படியொரு நுட்பத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் அறிந்ததே இல்லை! இந்த சிங்ககிரி இத்தனையாண்டுகளாய் ஏன் காடு மண்டிக்கிடக்க வேண்டும்? அபரவிதமான பாதுகாப்பு ஏற்பாடுக ளுடன் கூடிய இந்தக் குன்றத்தை யார் உருவாக்கியது? எனக்குள் ஆயிரம் கேள்விகள் உருவாகுகின்றன… இந்தக் குன்றத்தில் ஏறும் ஆவலும் பெருகுகின்றது!”

‘உண்மை தான் காசியப்பா… அதற்கு முன்னர் வீரர்களின் அச்சத்தை போக்க வேண்டும்!
இந்த செய்தியை வீரர்களுக்கு தெரிவித்து மிகப் பாதுகாப்பான இடத்தில் தான் நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையையும் தெளிவையும் ஏற்படுத்த வேண்டும்!”

‘இதோ கூடி நிற்கும் வீரர்களுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்தி மற்றய வீரர்களுக்கும் சொல்ல சொல். மீகாரா… இந்தக் குன்றத்தை என் கோட்டையாக நான் கனவு காணத் தொடங்கியதே நீ என் அருகில் இருக்கின்றாய் என்ற நம்பிக்கையில் தான்! இன்று அது இன்னும் வலுவாகி என் கனவின் கனி அருகில் தெரிகிறது!”

காசியப்பன் மீகாரனை அணைத்துக்கொண்டான்!

‘காசியப்பா… உனக்குள் எழுந்த கேள்விகள் எனக்குள்ளும் எழாமல் இல்லை… அவற்றுக்கு விடைகாண வேண்டும்… சில வேளை ….”

‘ஏன் தயங்குகிறாய் மீகார… மனதில் தோன்றியதை சொல்! என்னிடத்தில் முழு உரிமையும் கொண்டவனல்லவா நீ?”

மீகாரன் சற்று தயங்கிய குரலில்…

‘சில வேளை இக் குன்றம் குறித்த அறிதல் மகாநாமருக்கு இருக்க கூடும்… இந்த இலங்கையின் வரலாற்றை ஒரு நூலாக அவர் எழுதிக்கொண்டிருந்தார் என்று அறிந்தேன்!”

‘ஓ… மகாநாமரா… பாவம் முகலனோடு அங்கு என்ன கஷ்டப்படுகின்றாரோ… ஆனால் நாம் அவதானமாக இருக்க வேண்டிய ஒருவர்…

ஆரியசேனருக்கு ஆகாதவர் என்ற ஒரு காரணத்துக்காகவே கடல் வழியே முகலனோடு தப்பிச்செல்ல நான் சந்தர்ப்பம் வழங்கினேன்..!

உடனே வீரர்களை அனுப்பி அனுராதபுரத்து மகாபோதி சங்கத்தை சல்லடையிட்டு வரலாற்று ஏடுகளை எடுத்துவரச்சொல் மீகாரா… அந்தக்கிழவரின் அறிவுக்கு ஏதும் எட்டியதா என்று ஆராய்வோம்!”
என்றவாறு பரணில் இருந்து காசியப்பன் கீழே இறங்கி யானைகள் கடந்த இடத்தில் இருந்து பள்ளம் தோன்றிய இடம் வரை மீகாரனோடு நடக்கத்தொடங்கினான்!

அப்போது மீகாரன் சில வீரர்களை அழைத்து மகாபோதி சங்கத்திற்கு சென்று மகாநாமரின் பாவனையில் இருந்த எல்லா ஏடுகளையும் எடுத்து வர கட்டளை வழங்கினான்!

அனுராதாபுரத்தில் இருந்து செய்திகாவி ஒருவன் குதிரையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான்… காசியப்பன் குன்றத்து அடிவாரத்தில் உள்ள கூடாரத்தில் தங்கியிருப்பான் என்று அவன் நினைத்திருக்க வேண்டும்…

ஆனால் திடீரென முன்னரே பட் டத்து யானையை கண்ட அந்த செய்திகாவி மிக வேகமாக செலுத்தி வந்த தன் குதிரையின் கடிவாளத்தை சடுதியாக இழுத்து நிறுத்த முயன்றதால் குதிரை முன்னிருகால்களையும் மேலே உயர்த்தி சத்தமாக கனைத்தபடி நின்றது!

அந்த சிறு கலவரத்தால் காசியப்பன் கவனம் செய்திகாவியை நோக்கித் திரும்பவே தன் கைகளை அசைத்து அவனை அருகில் அழைத்தான்… அருகே வந்த செய்திகாவி முதுகு மடக்கி,

‘மன்னா… சற்று அதிர்ச்சியான செய்தியொன்று… அரண்மனையில் இருந்த புனித தந்த தாது திருடப்பட்டுள்ளது! அதைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பிக்குணி விஜயசீலி உள்ளிட்ட மூவரையும் காணவில்லை… இவர்கள் மகாநாமரின் இரகசிய பணியாளர்கள் என்று எம் ஒற்றர்கள் சந்தேகிக்கின்றனர்… “

காசியப்பனின் விழிகள் சிவத்தது… பற்கள் நெருமின… மீகாரன் அதிர்ச்சியும் கோவமும் கொண்டவனாய்,

‘காசியப்பா… கிழவனின் சாணக்கியத்தை பார்த்தாயா? கடல் தாண்டி இருந்தபடியே காரியம் சாதிக்கின்றான்! தப்பிக்க விட்டிருக்க கூடாது”

‘நடந்தது முடிந்தது… இந்தச்செய்தி இரகசியமாகவே இருக்கட்டும்…” செய்திகாவியை அனுப்பிவிட்டு மீகாரனிடம் சில வீரர்களின் பெயர்களைக் கூறி தன்னை உடனடியாக சந்திக்க சொல்லுமாறு பணித்து பின் மீகாரனிடத்தில் இரகசியமாக எதோ கூறிவிட்டு தன் யானையில் ஏறி கூடாரத்தை நோக்கிப் புறப்பட்டான்!

சிங்ககிரியும் மீகாரனைப்போலவே விறைத்துப்போய் நின்றது!

பயணம் தொடரும்…

Related posts

புதிர் 12 – தேடியது கிடைக்க தேனீக்களுக்கு உதவுங்கள்!

Thumi2021

இந்த பூமி என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?

Thumi2021

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 02

Thumi2021

Leave a Comment