2021 க்கான டி20 உலக கிண்ண போட்டிகள், கடந்த மாதம் 17ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமானது. இதன் இறுதி போட்டியில் முறையே இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளை அரையிறுதியில் வீழ்த்திய ட்ரான்ஸ்-தஸ்மான் நாடுகளான நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பங்கெடுத்தனர்; இதில் வென்ற ஆஸி, தனது முதலாவது டி20 உலக கிண்ணத்தை வெற்றி கொண்டது.
ஆஸ்திரேலியா
தொடர்ச்சியாக ஐந்து டி20 தொடர்களில் தோல்வி அடைந்த நிலையில் இம்முறை டி20 உலக கிண்ணத் தொடருக்கு வந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியாக இருக்கவில்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்த படியால் பேப்பரில் வலுவான அணியாக இருந்தது . இங்கிலாந்திடம் மட்டும் சூப்பர் 12 சுற்றில் தோற்ற இவ்வணி அரையிறுதியில் தொடர்ச்சியாக UAE இல் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்த பாகிஸ்தானினை வீழ்த்தி இறுதி போட்டியில் நியூஸிலாந்தினை வெற்றி கொண்டு முதல் முறையாக டி20 உலக சாம்பியனாகி இருக்கிறது. 2010இல் இறுதிக்கு முன்னேறிய ஆஸி, T20 உலக கிண்ணத்தினை ஆஷஸ் வைதிரிகளான இங்கிலாந்திடம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து
2015 மற்றும் 2019 உலக கிண்ணங்களில் இறுதி போட்டிக்கு முன்னேறியதோடு இவ்வாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று அசத்தியதோடு கடந்த T20 உலக கிண்ணத்தில் அரையிறுதிக்கு வந்த இவ்வணி இம்முறையும் இறுதிக்கு முன்னேறி மூன்று விதமான போர்மட்களிலும் தாம் சிறந்தவர்கள் என நிரூபித்துள்ளனர். இறுதி போட்டியில் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றி பெறக்கூடிய இலக்கினை ஆஸிக்கு நிர்ணயித்து இருந்தாலும் ஆஸியின் ஆரம்ப வீரரான டேவிட் வார்னர்க்கு சரியான matchup பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்ஐ தவிர்த்து வேறு ஒருவர் இல்லாமையால் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது அனைவரினதும் இரண்டாம் விருப்பத்திற்குரிய அணி.
இங்கிலாந்து
கிண்ணம் வெல்லும் எதிர்பார்க்கப்பட்ட முதல் நிலை அணி, சூப்பர் 12 இல் எல்லா போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும் அரையிறுதியில் நியூஸிலாந்திடம் இதில் தோற்றுப்போனது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோர்ல ஆர்ச்சர் ஆகியோரை தொடருக்கு முன்னரே இழந்ததோடு ஆரம்ப வீரரான ஜேசன் றோய் மற்றும் பந்துவீச்சாளர் மில்ஸ் ஆகியோரையும் தொடரின் நடுவிலே இழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான்
இங்கிலாந்து போல் சூப்பர் 12 போட்டிகள் அனைத்திலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய பாக்கிஸ்தான், க்நோக்கவுட் போட்டிகளில் இதுவரை தாம் வீழ்த்தியிராத ஆஸியினை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸி மறுபடியும் பாக்கிஸ்தான்க்கு தோல்வியை பரிசளித்தது. அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தியா
இம்முறை தொடரை நடத்திய நாடு. இங்கிலாந்து போல் அதிகம் கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் முதல் போட்டியிலே முதல் தடவையாக பாகிஸ்தானிடம் உலக கிண்ண ஆட்டத்தில் தோற்று போனது. பிறகு நியூஸிலாந்துக் கெதிராவும் தோற்று அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாமல் போனது. கடைசி மூன்று போட்டியிலும் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இத்தொடருடன் விராட் கோஹ்லி T20 அணித்தலைவர் பதவியில் இருந்து விலக ரவி சாத்திரி உம் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். புதிய தேர்வாளர் குழு தெரிவு செய்த அணியில் குறிப்பிடத்தக்க சில முன்னணி வீரர்கள் விலக்கப்பட்டு இருந்தமையும் தோல்விக்கு காரணமாகலாம்.
இலங்கை
நேரடியாக சூப்பர் 12 க்கு தகுதி பெறாமல் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கெடுத்த இலங்கை, முதல் சுற்றில் வென்று சூப்பர் 12 க்கு முன்னேறி இருந்தாலும் அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து, ஆஸி, மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனால் சரித் அசலாங்க, பதும் நிஸ்ஸங்க போன்ற துடுப்பாட்ட வீரர்களும் வணித்து ஹசரங்க, மகேஷ் தீக்சனா போன்ற சுழற் பந்துவீச்சாளர்களும் இலங்கைக்கு கிடைத்துள்ளனர். ஆனால் வரும் அடுத்த 2022 T20 உலக கிண்ணத்திலும் இலங்கை முதல் சுற்று ஆட்டங்களில் ஆடி தான் சூப்பர் 12 க்கு முன்னேறமுடியும்.
இத்தொடரின் ஆட்டநாயகனாக ஆஸியின் ஆரம்ப ஆட்டக்காரரான டேவிட் வார்னர் உம் இறுதி போட்டியின் நாயகனாக மிட்செல் மார்ஷ் உம் தேர்வாகி உள்ளனர்.
டி20 உலக கிண்ணம் 2022
அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் அடுத்த T20 உலக கிண்ண தொடர் நடைபெற உள்ளது. இதன் சூப்பர் 12 சுற்றுக்கு நடாத்தும் நாடு மற்றும் இம்முறை கிண்ணம் வென்ற அணியாக ஆஸ்திரேலியா, இரண்டாம் இடம் பிடித்த அணியாக நியூஸிலாந்து மற்றும் ICC T20 தரவரிசையில் நவம்பர் 15 ம் திகதியில் அடுத்த முதன்நிலை ஆறு இடங்களில் உள்ள இங்கிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேரடியாக முன்னேறியுள்ளனர். மற்றைய நான்கு அணிகளும் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தெரிவாகும். 2022 க்கான முதல் சுற்று ஆட்டங்களுக்கு இம்முறை சூப்பர் 12 க்கு முன்னேறிய இலங்கை, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து உடன் தரவரிசையில் பத்தாம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் தெரிவாகியுள்ளனர். அடுத்த நான்கு அணிகளும் qualifier (தகுதிகாண்) தொடர் மூலம் தெரிவாகும்.