வருகிற பெப்ரவரி 14, 2022 இல் 38 வயதாகும் டி வில்லியர்ஸ் கிரிக்கெட் உலகிற்கு விடை கொடுத்து இருக்கிறார். வெறுமனே 16 முதல் தர ஆட்டங்களில் விளையாடிய நிலையில், சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை 2004 இல் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டிருந்தார். அப்போட்டியில் ஆரம்ப மட்டையாளராக களமிறங்கி இருந்தாலும் பின்னர் மத்திய வரிசைக்கு கீழிறக்க பட்டதுடன் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டார். முதலாம் இலக்கத்தில் இருந்து எட்டாம் இலக்கம் வரை மட்டையாளராக களமிறங்கி அவற்றில் பெரும்பாலான இலக்கத்தில் சாதித்துக் காட்டினார்.
2006 மற்றும் 2007 சில சறுக்கல் ஏற்பட்டாலும், 2008 இல் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை 109 பந்துகளில் டர்பனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக எடுத்த வில்லியர்ஸ், அதே வருடத்தில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய முதல் தென்னாப்பிரிக்கா வீரர் ஆனார், அதுவும் இந்தியாவின் அகமதாபாத் மைதானத்தில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலும் ஆஸியிலும் சதம் கடந்து 2008 இல் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
2010 இல் அபுதாபியில் பாக்கிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 274 ஓட்டங்களை எடுத்தார். இது அப்போது தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவர் டெஸ்டில் எடுத்த அதிக ரன்கள் ஆகும் (ஹாசிம் அம்லா பின்னர் முச்சதம் பெற்றிருந்தார்).
மார்க் பவுச்சர் ஓய்வு பெற டெஸ்ட் போட்டியில் நிரந்தர விக்கெட் காப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் அணித்தலைவர் பதவியும் இவரை தேடி வந்தது. ரி20 அணித்தலைவர் பொறுப்பை டு பிளஸ்சிஸ் க்கு கொடுத்த வில்லியர்ஸ், 2014 இல் டெஸ்ட் விக்கெட் காப்பாளர் பொறுப்பை டி கோக் க்கு கொடுத்தார்.
2015 இல் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் வெறுமனே 44 பந்துகளில் 149 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆம், அதே வில்லியர்ஸ் தான் டெல்லி டெஸ்டில் 6 மணிநேரம் துடுப்பாட்டம் செய்து 297 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் மட்டும் எடுத்தார். அத்துடன் 2012ம் ஆண்டு அடிலெய்ட் இலும் டு பிளஸ்சிஸ் உடன் சேர்ந்து 4 மணிநேரம் துடுப்பாட்டம் செய்து 220 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்து வைத்தார்.
டெஸ்ட் ஒருநாள் ரி20 என அனைத்திலும் சிறப்பாக செயற்படக்கூடிய வீரர் இவர்.
2014 இல் கிரேம் சிமித் க்கு பின் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணித்தலைவர் ஆவார் என நினைத்த அம்லா தலைவரானார். 2016 இல் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரின் நடுவே அம்லா பதிவி விலக, டி வில்லியர்ஸ் நெடுநாள் ஆசையான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அணித் தலைவர் பதவி கிடைத்த அந்த டெஸ்ட் தொடரில் அதுவரை 78 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரன் எடுக்காது ஆட்டமிழக்காத வில்லியர்ஸ், தொடர்ச்சியாக மூன்று முறை ரன்கள் எதுவும் இன்றி ஆட்டமிழந்தார்.
2019 உலகக் கிண்ணம் மற்றும் 2021 ரி20 உலகக் கிண்ணம் என்பவற்றில் விளையாட விரும்பினாலும் அவை நடக்கவில்லை.
கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என மூன்று விதமான ஆட்டங்களிலும் 360 பாகை வீரராகவும் அதிரடி காட்டிய வில்லியர்ஸ், கிரிக்கெட் மட்டுமல்லாது ரக்பி, கோல்ஃப் மற்றும் டென்னிஸ் என அனைத்திலும் திறமையான ஒரு சகல துறை விளையாட்டு வீரன்.
அவரது வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸ்க்கு துமியின் வாழ்த்துகள்.