இதழ்-39

பனி போல படர்வாயோ

மார்கழி மகத்துவமான மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருப்பதாக பகவான் கிருஷ்ணர் சொல்வதாக கீதை சொல்கிறது. இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கும் மார்கழி முக்கியமானது. பாவிகளை இரட்சிக்க வந்த இறை மீட்பரான யேசுபாலன் அவதரித்ததும் இந்த புண்ணிய மாதத்தில்த்தான். மார்கழி மதங்களுக்கு அப்பாற்பட்ட மாதம்! அதனால்த்தான் எல்லோருமே கொண்டாடித் தீர்க்கிறார்கள். பரிசுகளோடு நத்தார்ப்பாப்பா இல்லாதவர்களுக்கும் இன்பம் அளித்து எங்குமே கொண்டாட்டத்தை கொண்டுவருகிறார். ஆனால் ஒரு சந்தேகம்!

ஒரு வருடத்தின் இறுதி ஏன் இவ்வளவு கொண்டாடப்பட வேண்டும்?

ஒரு இறுதித் தீக்குச்சி கவனமாகப் பற்ற வைக்கப்படுவது போன்ற அக்கறையை இந்த மாதம் பெற்றிருக்கிறதா? ஒரு இறுதிச் சந்திப்பு கண்ணீரால் நனைக்கப்படுவது போல இந்த மாதம் அன்பால் தாலாட்டப்படுகிறதா? இறுதிச் சொட்டுத் தேநீர் தரும் தித்திப்பைத்தான் இந்த மாதம் தருகிறதா?

இல்லை! இல்லவே இல்லை! இறுதிக்கான மரியாதையையே கெடுத்துவிட்டுப் போகிறதே இந்த டிசம்பர்! மதங்களுக்கெல்லாம் பிடித்த மாதம் என்பதால் மதம் பிடித்து விட்டதோ என்னவோ? மதத்தையும் மாதத்தையும் தாண்டிய ஒன்றுதான் அந்த இறுதிக்கான மரியாதையை மார்கழிக்கு மறுத்திருக்கிறது. எது அது? மனம்!

இந்த டிசம்பரை இந்த வருடத்தின் இறுதி என்று காலம் சொல்லலாம். ஆனால் அடுத்த டிசம்பரும் வரும் என்று மனம் சொல்கிறது. அடுத்த டிசம்பர் வரை என் உயிர் இருக்கும், இந்த உலகம் இருக்கும் என்று இந்த மனம் நம்புகின்றது. அதனால் இந்த டிசம்பர் எனக்கு இறுதி இல்லை என்று எல்லோருமே நம்புகிறோம். நாளைய விடியலே நம் கையில் இல்லாத பிரபஞ்ச உண்மையை உணர்ந்திருந்தும் வெள்ளை மனம் நம்மை நம்ப வைக்கிறது.

மனதுக்கும் நிறமுண்டா? அது என்ன வெள்ளை மனம்?

வெள்ளை நிறம் என்றால் தூய்மை. வெள்ளை மனம் என்றால் நல்லமனம்.
மற்றும் பூமியில் உள்ள யாவிலும் வெண்மை என்பது மேலானது தான்.

வெண்மைக்குள் பல நிறங்கள் அடக்கம். அதுபோல் அதற்குள் பலபொருளும் அடக்கம். தூய்மை, மென்மை, இல்லாமை, பனி, பனிக்கட்டி, சொர்க்கம், அமைதி, வாழ்க்கை, சுத்தம், காற்று, ஒளி, மேகங்கள், வெறுமை, உறைபனி, நல்லவை, பருத்தி, தேவதைகள், குளிர்காலம், அப்பாவித்தனம் என்று வெண்மையின் விம்பங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இயற்கையில் நாம் காண்கின்ற அத்தனை நிறத்தையும் மூடி மறைத்து இந்த பூமியை மீண்டும் புனிதப்படுத்த வெண்மை நிறம் அமைதியாய் முன்னெடுக்கின்ற போராட்டம் ஒன்றையே அட்டையில் காண்கிறீர்கள்.

அன்பு என்ற மழையிலே அகிலம் முழுதும் நனையவே அவதரித்தார் இறைதூதர் யேசுபாலர் இம்மார்கழியில். அவர் பிறப்போடு இந்தப்பூமி புனிதப்பட்டுப்போனது என்பது சத்தியமே என்பதை அட்டைப்படம் அழகிய சாட்சியாய் நமக்கு நினைவுபடுத்துகிறது.

யேசுபாலன் பாவங்களை மன்னித்து மனங்களை வெள்ளையாக்கியது போல பனியும் தரையின் வண்ணங்கள் யாவையும் மறைத்து வெண்மையாக்குகிறது.

ஆனால் இந்த அட்டைப்பட சாட்சிப்படி நமக்கு புரியவேண்டிய உண்மை என்பது வெள்ளைப்பனியின் போராட்டத்திற்கு சற்றும் இடந்தராது இருப்பது நம் வேகம் மட்டுமே ஆகும். நம் பயணத்தின் வேகத்தால் எம் பாதைகள் தொடர்ந்தும் தெளிவாகவே தெரிகின்றன. ஆனால் பாதைகள் புனிதமாவதற்குத்தான் அவகாசம் அற்றுப்போகிறது. நமக்கு பாதை தெரிவதிலுள்ள அவசரத்தில் பலநேரங்களில் புனிதத்தை புரிந்து கொள்ள மறுத்துவிடுகிறோம்.

நின்று நிதானமாய் பார்த்தால் இறைதூதனால் இந்த கிறித்தவப்பெருநாளில் யாவும் புனிதப்படும். பொறுமை போதுமான அளவு இருந்தால் நம் பாதைகளும் புனிதப்படும்.

வண்ணத்தோடு எண்ணமும் வெண்மையாகட்டும். அனைவருக்கும் நத்தார் கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள்.

Related posts

பிரண்டையின் மருத்துவம்-02

Thumi202122

பழைய பாட்ஷாவாக வருவாரா…?

Thumi202122

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும்

Thumi202122

Leave a Comment