வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் சபதங்கள் எமது வாழ்க்கையை மேலும் சுவாரசியப்படுத்துவனவாகவும் உள்ளன.
பலரும் புத்தாண்டுகள் ஆரம்பிக்கும் போது தாம் கடந்த காலங்களில் பின்பற்றிய தவறான பழக்கங்களை நீக்குவதாகவும், மேலும் சிலர் புதிய சில பழக்கங்களை உருவாக்கி கொள்வதாகவும் சபதங்களை மேற்கொள்வதும் இயல்பான மனித நடத்தையாக உள்ளது. மறுவலத்தில் எடுத்த சபதங்களை கடைப்பிடிப்போராய் வெகுசிலரே காணப்படுவார்கள். பலரும் சபதம் மேற்கொண்ட அன்றைய தினமே அதனை முடித்து கொள்ளும் நிகழ்வுகளும் இயல்பான நிகழ்வுகளாகவே காணப்படுகிறது.
எடுத்தவுடனேயே பெரிய சபதங்களை எடுத்து விடாதீர்கள். படிப்படியான சிறிய சிறிய சபதங்களாக அவற்றை எளிமைப்படுத்துங்கள். எறும்பூர கல்லும் தேயும்.
சபதங்கள் எடுக்க முதல் இரண்டு கேள்விகளுக்கான விடைகளை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.
- ஏன் இது எனக்கு முக்கியமானது?
- எப்படி இந்த சபதத்தை நிறைவேற்றுவது? (படிநிலை ரீதியான தெளிவு)
இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடையை அறிந்த பின்னரே சபதம் எடுங்கள். விடை காண முடியவில்லையா? அந்த சபதங்கள் உங்களுக்கு சாத்தியமில்லாதவை. சத்தம் போடாமல் விட்டு விடுங்கள்.
மாற்றங்களை உள்வாங்கும் ஒரு சிலரிடம் எமது கோரிக்கையாய் அமைவது, உங்களுடன் இணைத்து மாதமொருமுறை இன்னுமொருவரை வாசிப்பு நேசனாக்க சபதம் எடுங்கள். எம் சமூகத்தின் போக்கை சீராய் அலசுவோர் பலரும் நம் மந்த நிலைமை தொடர்பில் ஆழமான கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்மந்த கதியை கலைவதாயின் ஆற்றல்மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அதற்கான முதற்படியாய் வாசிப்புமிக்க சமூகத்தை உருவாக்க நீங்கள் அடியெடுத்து வையுங்கள்.
இரண்டுகளின் சேர்க்கையாக பிறந்திருக்கும் ஆங்கிலப்புதுவருடம் இருட்டுகளை பிரிகையாக்கி எல்லோருக்கும் சம்பூரண சௌபாக்கியம் தர வேண்டுமென வாழ்த்துகிறோம்.