முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சிக்கு விசா மறுக்கப்பட்ட சர்ச்சை உடன், கடந்த சனவரி மாதம் 9ம் திகதி மெல்பேர்ண் நகரில் ஆரம்பமான டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபனின் 2022க்கான போட்டிகள், கடந்த சனவரி மாதம் 30ம் திகதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் 21 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை முதல் முறையாக பெற்ற ஆடவர் என்ற ரபேல் நடாலின் வரலாற்று சாதனையுடன் நிறைவுக்கு வந்திருக்கிறது.
அவுஸ்திரேலிய ஒபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி, ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் இடையே ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் நடால் தன் 21வது கிராண்ட் ஸ்லாம் வெற்றிக்கும் மெட்வெடேவ் தன் 2வது கிராண்ட் ஸ்லாம் வெற்றிக்கும் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் 35 வயதான நடால் தனது முதலிரு செட்களை இழந்து இருந்தாலும் மீண்டெழுந்து, 25 வயதான மெட்வெடேவ்வை 2-6 6-7 (5-7) 6-4 6-4 7-5 என்று வெற்றி கொண்டார்.
இதன் மூலம் 21 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை பெற்ற முதலாவது ஆடவர் என்ற வரலாற்றைப் படைத்தார். மற்றைய முன்னணி டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளுடன் உள்ளனர்.
ஜோகோவிச்: விசா மறுக்கப்பட்டத்தாலும் பெடரர்: காயத்தினாலும் இத் தொடரில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே மெட்வெடேவ் கடந்த ஆண்டு அமெரிக்கன் ஒபனில் ஜோகோவிச் இன் 21வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை தடுத்து தன் முதலாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை பெற்றிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற ஆஷ் பார்ட்டி, கடந்த 44 வருடங்களில் அவுஸ்திரேலிய ஓபன் வென்ற முதல் அவுஸ்திரேலிய பெண் ஆனார். இதற்கு முதல் 1978 இல் கிறிஸ் ஓ’நைல் சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் நிலை வீராங்கனையான பார்ட்டி, இறுதி போட்டியில் அமெரிக்காவின் டேனியலின் கோலின் உடன் கடுமையாக போராடி 6-3 7-6 (7-2) என்று வெற்றி பெற்றிருந்தார். இது பார்ட்டி க்கு மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் 2019 இல் பிரெஞ்சு ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆரம்ப காலத்தில் பார்ட்டி ஒரு கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியாவின் பெண்கள் பிக்பாஸ் (BigBash) லீக் போட்டிகளில் விளையாடி இருந்தமையும் சிறப்பம்சமாகும்.
ஆடவர் இரட்டையர் பிரிவிலும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இருவர் 1997 ம் ஆண்டிற்கு பின் அவுஸ்திரேலிய ஒபன் பட்டம் வெல்லும் முதல் அவுஸ்திரேலிய இரட்டையர் ஆனார்கள் நிக் மற்றும் தனாசி ஜோடி. இவர்கள் 95 நிமிடங்கள் நீடித்த இறுதி போட்டியில் இன்னொரு அவுஸ்திரேலிய இரட்டையர் இணையான மேக்ஸ் பேர்செல் மற்றும் மேட் எப்டன் ஜோடியை 7-5 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இது தனாசி கோக்கினாகிஸ் – நிக் கிர்ஜியோஸ் ஜோடிக்கு கிடைத்த முதலாவது பட்டம் ஆகும். அத்துடன் இத்தொடரில் வைல்டு கார்ட் ஆக களமிறங்கி கோப்பையை வென்ற முதல் ஜோடி என்ற பெருமை கோக்கினாகிஸ் – கிர்ஜியோஸ் ஜோடிக்கு கிடைத்துள்ளது.
மகளிர் இரட்டையர் பிரிவில் வென்ற செக் குடியரசின் பார்போரோ கிரெஜிகோவா மற்றும் கேத்தரினா சினியாகோவா ஜோடி, இரண்டு மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்த இறுதி போட்டியில் கஜகஸ்தானின் அன்னா டனிலியா மற்றும் பிரேசிலின் ஹட்டட் மய்யா ஜோடியை 6-7(3) 6-4 6-4 என்று வெற்றி கொண்டு; தங்கள் நான்காவது கிராண்ட் ஸ்லாம் தொடர் வெற்றியை பதிவு செய்தனர். ஆனால் இது இவர்களுக்கு முதலாவது அவுஸ்திரேலிய ஒபன் பட்டம் ஆகும். கடந்த ஆண்டு இறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு விம்பிள்டன் மற்றும் ஒரு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டங்களை முன்னதாக வென்றிந்தனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை சாம்பியன் பட்டம் வென்றது.