இதழ் 42

ஈழச்சூழலியல் 28

கடலுடன் இணைந்துள்ள உவர் நீரைக் கொண்ட ஆழமற்ற நீர்நிலைகள் கடனீரேரிகள் எனப்படும். வருடமொன்றில் பல்வேறு காலப்பகுதிகளில்கடல் நீர், கடனீரேரியை அடையும். அதேவேளை இது மறுபக்கமாகவும் இடம்பெறும். கடனீரேரி சுற்றாடற் தொகுதிகள் அடிப்படையில் தாவரப் பாசிகள், விலங்குப் பாசிகள், மீன்கள், இறால்கள், உவர் நீரிற்கு இசைவாக்கமுடைய ஏனைய உயிரினங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. புந்தல தேசிய பூங்காவனத்தில் பல கடனீரேரிகள் உள்ளன. இவை பறவைகளிற்கு அடைக்கலம் வழங்கும் பூங்காவாக சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்றனவாகும். இக்கடனீரேரிகள் ஐம்பதிற்கும் அதிகமான பறவையினங்களிற்கு அடைக்கலம் வழங்குகின்றன. இப்பறவைகளில் பெரும்பாலானவை இடம்பெயர்ந்தவை ஆகும். தமது தாய்நாட்டில் குளிர் காலம் நிலவும் போது இங்கு இடம்பெயர்ந்து வந்தனவாகும்.

இந்தோற்றப்பாட்டை நாமும் குடாநாட்டில் சிறப்பாக தீவகப்பாதையின் இருபுறமும் அல்லைப்பிட்டி,வேலணை இடையிடப்பட்ட பகுதிகளில் பரவலாக காணமுடியும். அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறான பறவையினங்கள் உவர்நீர் கூனிறால்கள் உட்பட கடனீரேரிகளில் உள்ள உணவுகளை இப்பறவைகள் விரும்புகின்றன. எனினும் புந்தலவிலுள்ள மாலல, எம்பிலிகல என்னும் பெயர்களைக் கொண்ட இரண்டு கடனீரேரிகள் லுனுகம்வெஹர, கிரிந்தி ஓயா ஆகிய நீர்ப்பாசன திட்டங்களிலிருந்து வெளியேறும் நீர்ப்பாசன நீரினால், அவற்றின் உவர் தன்மையை இழந்துள்ளன. உண்மையில் இவற்றின் மின்கடத்துந்திறன் 2 ms/cm ஆகும். இதேவைளை அப்பிரதேசத்திலுள்ள ஏனைய கடனீரேரிகளுடன் ஒப்பிடும் போது அவை 30 ms/cm என்னும் பெறுமானத்தைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக காலம் செல்ல மாலல, எம்பிலிகல ஆகிய கடனீரேரிகளில் கூனிறால்களின் குடித்தொகை வீழ்ச்சியடையலாம்.முன்னர் குறிப்பிட்ட வரைவிலக்கணத்திற்கு அமைய உண்மையில் இங்கு நன்னீர், கடனீரேரியை மாசடையச் செய்கின்றது. கடனீரேரிகளில் உப்பின் அளவு சடுதியாக விழ்ச்சியடையும் போது எதிர்காலத்தில் புந்தலவிற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்படலாம்.இத்தோற்றப்பாடு சகல கடனீரேரிகளுக்கும் பொருந்தும்.

அடுத்ததாக கைத்தொழில் சார்ந்து நீரியல் தாக்கத்தை நோக்குவோமாக இருந்தால் கைத்தொழில் அபிவிருத்தியின் காரணமாக சமூகம் அபிவிருத்தியடைந்துள்ளது என்பது உண்மையாகும். எனினும், இதன் விளைவாக ஏற்படும் சுற்றாடல் சீரழிவிற்கான விலையை நாம் செலுத்த வேண்டும் என்பதும் மறுபுறம் உண்மையாகும். பெரும்பாலான திண்ம, திரவ கழிவுகளினால் நீர் மாசடைவதோடு, உயிரினங்களிற்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்றன.அதுமட்டுமன்றி வெப்பத்தின் ஊடாகவும் மாசடையச் செய்யும் கைத்தொழிற்சாலைகளும்உள்ளன. உணவு பதனிடும் தொழிற்துறை, உலர்த்தப்பட்ட தேங்காய், வடிசாலை, பாற் தொழில், விலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் இடங்கள், தோல் கைத்தொழில், புடைவைக் கைத்தொழில், பற்றரி கைத்தொழில், தீந்தைகள் தயாரித்தல், மின்முலாமிடல் ஆகியன உட்பட சில தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகள் இலங்கையில் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் பிரதான கழிவுகளாக நாம் அடையாளம் காணக்கூடியன: அமிலங்கள், காரங்கள், அமோனியா, குளோரின், ஐதரசன் சல்பைட், கந்தகவீரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு, ஈயம், நிக்கல், கட்மியம், நாகம், செப்பு, பாதரசம், குரோமியம், சயனைட், புளொரைட், சல்பைட், சல்பேற், பீனோல்கள், ஐதரோகாபன்கள், ஏனைய சேதன பொருட்கள் என்பனவாகும்.

ஒரு விலங்கின் தோலை அடிப்படையாக வைத்தே தோல் கைத்தொழில் ஆரம்பமாகின்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இரசாயனங்கள், இயந்திரங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி பதனிடப்பட்டு, ஆடைகள், சப்பாத்துகள், பைகள், இடைப்பட்டிகள் போன்ற பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பல வகையான தோல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தோற் பொருட்களிற்கு சிறந்த கிராக்கி நிலவுகின்றது.
தோல் கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் பிரதான இரசாயனங்களும், அவற்றின் தொழிற்பாடுகளும் பின்வருமாறு:
• சோடியம் சல்பைட், சோடியம் சல்பைரேற், ஆசனிக் சல்பைட், சோடியம் சயனைட், சோடியம் ஹைட்ரோசல்பேற், டைமீதலமின் சல்பேற், சோடியம் ஹைட்ரொக்சைட், கல்சியம் ஒக்சைட் என்பன மயிர்களையும், கொழுப்பினையும் அகற்றுவதற்கு.
• ஈய அசற்றேட், பெரிக் சல்பேற், கொப்பர் சல்பேற்று, சோடியம் டை குரோமேற்று, பொட்டாசியம் டைட்டேனியம் ஒக்சலேட் என்பன நிறச்சாயங்களைத் தயாரிப்பதற்கு
• பக்றீரியா தாக்கத்தினை எதிர்பதற்கும், உயர் வெப்பத்தினை தாங்கிக் கொள்ளவும், நிறச்சாயம் நிலைத்திருப்பதற்கும் குரோமியம் சல்பேற்று பயன்படுத்தப்படுகின்றது.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளில் காணப்படும் மேற்குறிப்பிட்ட இரசாயனங்களும், தோலில் உள்ள சேதனப்பொருட்களும் நீரை மாசடையச் செய்யும் பொருட்களாக செயற்படுகின்றன. சல்பைற்றுக்கள் உயிரினங்களிற்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தலாம். பராமரிக்கும் போது தொழிற்சாலைகளில் இவற்றினால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உருவாகும் அமோனியா பெரும்பாலான உயிரினங்களிற்குத் தீங்கானதாக அமையும். அத்துடன் இது உயர்ந்தளவான உயிரியல் ஒட்சிசன் தேவையையும்(BOD) கொண்டுள்ளது. குரோமியம் மிகவும் நச்சுத்தன்மையானதொரு உலோகமாகும். தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளில் கட்மியம், செப்பு என்பன ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய செறிவில் காணப்படுகின்றன.

கடதாசி ஆலைகள் பெருமளவான நீரைப் பயன்படுத்துகின்றன. ஒரு தொன் கடதாசிக்கு சுமார் 80 கன மீற்றர் நீர் அவசியமாகும். ஆனால் இதேயளவான டிசு தாளை உற்பத்தி செய்வதற்கு 270 கன மீற்றர் நீர் அவசியமாகும். கொதிகலன்களிற்கு உள்ளீடாக வழங்கல், குளிரூட்டல், பம்பிகளில் முத்திரையிடல், வெளிற்றல், கழுவுதல், ஐதாக்கல் செயற்பாடுகளுக்கு நீர் அவசியமாகும். கடதாசி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சில இரசாயனங்களாவன சோடியம் ஜதரொக்சைட், சோடியம் சிலிக்கேற்று, மக்னீசியம் சல்பேற்று என்பனவாகும். நச்சுப்பொருட்கள், உலோகங்கள், சாயமூட்டப்பட்டப் பொருட்கள், உயர்ந்தளவில் உயிரியல் ஒட்சிசன், இரசாயன ஒட்சிசன் என்பன தேவைப்படும் பொருட்கள், மிக அதிகளவான pH ஐக் கொண்ட திரவங்கள் என்பனவற்றை உயர்ந்தளவில் கடதாசி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகள் கொண்டிருக்கும்.கடதாசி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளில் சுண்ணாம்புக் களி, கயோலின், நிறப்பொருட்கள், நிரப்பிகள், நீரிற் கரையாத மரப்பிசின் என்பனவும் காணப்படும்.

ஆராய்வோம்…

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 38

Thumi202122

வினோத உலகம் – 08

Thumi202122

ஒளித்து வைத்த இரகசியம்…!!!

Thumi202122

Leave a Comment