இலங்கையில் தரம் ஒன்றில் மூன்றாம் தவணையின் போது எழுத்துச் சொல்லிக் கொடுக்கப்படுவதே கல்விக் கொள்கையாகும். இதனால் முன்பள்ளிப் பிள்ளைக்கு எழுத்தைப் பழக்குவது என்பது கட்டாயமானதாக இல்லை எனினும் தற்போது தரம் ஒன்றில் சேரும் பிள்ளை பாடப்புத்தகங்களை வாசிப்பதற்கும் ஓரளவு எழுதுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொழிவிருத்தியின் மூலம்;தான் அப்பிள்ளையால் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிறந்த அடைவு மட்டங்களைப் பெற முடியும் என்பதோடு புலமைப்பரீட்சைக்கு பிள்ளையை சித்தியடைய வைப்பதற்கு தயார் ப்படுத்தும் நோக்கில் தரம் ஒன்றிற்குச் செல்லும் போது எல்லா விடயங்களும் தெரிந்திருப்பதற்கு மொழிரீதியான திறன்களில் தேர்ச்சி பெற வேண்டும் என எண்ணி முன்பள்ளிகளில் மொழித்திறன்களை வளர்த்தெடுப்பதற்கு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் அழுத்தம் கொடுக் கின்றனர். இதனால் இவ்விடயங்களில் அதிகம் தனியார் முன்பள்ளிகள் முன்னின்று செயற்படுவதால் இங்கு அதிகமாகப் பெற்றோர்கள் பிள்ளைகளை முன்னின்று சேர்க்கின்றதைக் காண முடிகிறது.
இங்கு மொழிப்பயன்பாட்டில் பெற்றோர், ஆசிரியர், வளர்ந்தோர், ஒத்தவயதினர் போன்றவர்களது பங்களிப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்ற போதிலும் மாணவர்களது மொழித்திறன்களது வெளிப்பாட்டில் போதுமான அளவு அறிவை ஏற்படுத்த முடியாமல் உள்ளது. அதாவது முன்பள்ளி மாணவர்களுக்கு மொழித் திறன்களை வெளிப்படுத்துவதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்தவகையில் சில மாணவருக்கு திக்குவாய் மூலம் பேச்சை சரியாக உச்சரிக்க முடியவில்லை. மேலும் அரைவாசிப் பேருக்கு வாசித்தல் பிரச்சனை உள்ளது. எழுத்துக்களை எழுதுதல், ஒலி உச்சரிப்பு போன்றவற்றிலும் பின்னடைவாக உள்ளனர். காரணம் தற்போது கொரோனா பரவலின் காரணமாக முன்பள்ளிகளினைத் தொடர்ந்து நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில் சில மாதங்கள் முன்பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மொழி விருத்தியை அளிப்பதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
சில பெற்றோர்கள் வேலைக்குச் செல்வோராக இருக்கையில் அவர்களது பிள்ளை முன்பள்ளிக்கு சென்று, அதன் பின் வீட்டில் தொலைக்காட்சியோடு நீண்ட நேரம் இருக்கின்றனர். இதனால் அப்பிள்ளை தொடர்பாடலை மேற்கொள்வதற்கு யாரும் இல்லாததால் பேசும் திறன் குறைக்கப்படுகிறது. முன் பள்ளியிலும் தொடர்பாடலை மேற்கொள்வது குறைவாக உள்ளது. மேலும் தற்போது பிள்ளைகளை வெளியே சென்று விளையாட, சக மாணவர்களுடன் பழக பெற்றோர்கள் விரும்புவதில்லை. இதனால் சொற் பெருக்கத்திற்கான வாய்ப்பும் குறைக்கப்படுகிறது. ஆகவே மொழித் திறன்களை வளர்ப்பதற்குரிய சூழ்நிலை இல்லாததால் மொழிவிருத்தியில் சிக்கலை அடைகின்றனர்.
வலிகாமத்தில் முன்பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய எண்ணக்கருக்கள் மொழித் தேட்டத்தில் பங்களிக்கின்ற அளவு வீதங்கள் ஊடாக அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான முன்பள்ளிகள் பெருந்தெருக்களுக்கு அருகில் உள்ளன. அத்தோடு கடைகள், சந்தை, பாடசாலை என்பவை அருகில் உள்ளதால் மாணவர்களது செவிமெடுத்தலானது திசை திரும்புகிறது. கிராமப் புறங்களில் அமைதியான சூழலில் முன்பள்ளிகள் உள்ளமையால் மொழித்தேட்டமும் சீரான முறையில் உள்வாங்க ப்படுவதற்கு வழி வகுக்கின்றது. விளையாட்டு உபகரணங்கள் ஓரளவு இருக்கின்றன. வகுப்பறைகளில் மாணவர்கள் பார்வையிடக் கூடியளவிற்கு போதுமானளவு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவீன கற்பித்தல் சாதனங்களும் குறைந்தது ஒரு முன்பள்ளியில் ஒன்று என்ற ரீதியில் உள்ளது. எந்தவிதமான கற்பித்தல் சாதனங்களும் இல்லாத நிலையில் அரைவாசியளவில் முன்பள்ளிகள் உள்ளன.
இங்கு முழுமையாகப் பெண் ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். இவர்கள் ஓரளவு கல்வித்தகைமை உடையவர்களாகவும் பயிற்சி பெறாதவர்களில் சிலர் தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றவர்களாகவும் உள்ளனர்.
ஆராய்வோம்…