விரதம் எனப்படுவது யாதெனில் ‘மனமானது பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தே னும் அல்லது சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலாம்” என்பது நல்லைநகர் ஸ்ரீPலஸ்ரீP ஆறுமுகநாவலர் பெருமான்தன் வாக்கு. இங்ஙனம் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிசேர்க்கும் சாதனமான விரதங்களுள் அதிவிசேஷமும், அதிமுதன்மையும் உடையது பரப்ரம்மமான சிவபெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி விரதம் ஆகும். இவ்வுண்மையை சிவராத்திரி விரதங்குறித்து வரதராஜ பண்டிதரால் இயற்றப்பட்ட சிவராத்திரி புரணாத்தின் கண்ணுள்ள ‘மறைகளிற் சாமம்; மகங்களிற் புரவி மகம்” எனத்தொடங்கும் செய்யுளின் மூலம் அறியலாம்.
சிவராத்திரி என்பது சிவராத்ர என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்ப்படுத்திய வடிவமாகும். இச்சொல்லுக்கு சிவபெருமானுக்கு உகந்த நிசி என்று பொருள் கூறுவர்.
இச்சிவராத்திரி விரதங்குறித்து புராணங்கள் இரு வரலாறுகளைக் கூறுகின்றன.
முன்னொருக்கால் ஓர் கற்பவிறுதியில் ஹரிபிரமேந்திராதி தேவரனைவரும், எல்லையற்ற பிரபஞ்சமும் பரப்ரம்மான சிவத்தில் ஒடுங்கியது. அவ்விருள்சூழ் ஊழிக்காலத்தில் சக்தியான ஸ்ரீPமத் லலிதா திரிபுரசுந்தரி பரசிவத்தை வேதாகம சாஸ்திர விதிப்படி நான்கு சாமங்கள் அர்ச்சித்தும் பூசை புரிந்தும் பலவாறாகத் தொழுதும் சிவ சிந்நனையில் இருந்தார். ஊழியிருள் நீக்கி பரமசிவனானவர் பிரத்யட்சமானார். அச்சமயம் தேவியானவள் ‘யான் உம்மை வழிபட்ட இவ்விரவு சிவராத்ர என்று வழங்கப்படவும், இவ்விரவின் நான்கு சாமமும் சிவத்தைப் பூசித்தாலோ அன்றி சிவநாமம் ஜபித்தாலோ சிவகதியெய்தவும் ஆன்மாக்களுக்கு அருளிட வேண்டும்” என்று வேண்டி வரம்பெற்றார். இங்ஙனம், சிவராத்திரி விரதம் உற்பத்தியாயிற்று.
பின்னொரு கற்பவிறுதியில் பிரளய வெள்ளத்தில் தாழ்ந்த பூவுலகை காத்தற்றொழில் இயற்றும் விஷ்ணுவானவர் வராஹ ரூபம் கொண்டு தனது நாசியால் தூக்கி மேரு முதலிய அட்டபர்வதங்களை அதற்காதாரமாய் நாட்டினார். தொடர்ந்து, தன் நாபிக்கமலத்திலிருந்து உதித்த பிரமதேவரிடரம் படைத்தற்றொழிலை ஆற்றுமாறு பணித்து திருப்பாற்கடல் மீண்டு அறிதுயிலியற்றலானார். பிரமனும் மீண்டும் யாவற்றையும் முன்னிருந்தவாறே படைத்து ஈற்றில் திருப்பாற்கடலை அடைந்து அங்கு ஆயிரந்தலை ஆதிசேடன் மீது அறிதுயிலியற்றிய வண்ணம் இருந்த திருமாலை எழுப்பி நீ யாவனென வினவினார். நாரயணனோ தான் தான் பரப்ரம்மம் என்றும் தன்னிலிருந்தே நீர் உருவானீர் என்றும் கூறினார். இரு தேவர்களும் மும்மல மிகுதியால் மெய்ப்பொருள் சிவனென்பதை மறந்து தய்மிடையே பலப்பரீட்சை நடாத்தினார்கள். இங்ஙனம் பலப்பரீட்சை நிகழத்துங்கால் மெய்ப்பொருளான பரமசிவன் பெருஞ்சோதியாக, அச்சோதியின் அடிமுடி அறியாவண்ணம் விண்ணுக்கும் மண்ணுக்கும் வியாபித்து தோன்றினார். இவ்வாறு, மாசி மாத அபரபக்ஷ தேய்பிறைச் சதுர்த்தசித் திதியுடன் கூடிய இரவில் இறைவன் சோதிப் பிழம்பாக ஆவிர்பவித்து நின்றார். இருதேவரும் அச்சோதியின் அடிமுடி தேட முயன்று விஷ்ணு வராஹமாக பூமியைத் துளைத்தபடியும், பிரம்மன் அன்னப் பக்ஷியாக வானில் பறந்தும் பலகாலம் அலைந்து திரிந்தனர்.
இங்ஙனம் திரியுங்கால், வராஹரான விஷ்ணு மிக்க அயர்ச்சியுற்றவராக, மும்மலங்கள் மறைக்கப்பெற்றவராக சோதியாய் உள்ள சிவமே ப்ரமம் என்று ஒத்துக் கொண்டார். பிரமனோ சிவனின் சடையிலிருந்து பூமிநோக்கி விழுந்த தாழம்பூவை தனக்குச் சார்பாக பொய் சாட்சி கூறவைத்து, பரசிவத்திடமிருந்து சாபமும், மும்மலமும் மறைக்கப் பெற்றார். அச்சமயத்தில் அடிமுடி அறியவொண்ணாது எங்குமாய், எவரும் என்னவென அறியாது நின்ற சோதியில் தேவர்களுக்கும், ஆன்மாக்களுக்கும் அருளுங்கால் பரமசிவனானவர் தன்னை வெளிப்படுத்தி அருளினார். இவ்வாறு அடிமுடியறியாது தோன்றிய சிவமூர்த்தமே இலிங்கோத்பவர் ஆவார். (சிவாலய மூலஸ்தான கோஷ்டத்தில் மேற்குச் சுவரில் உள்ள மூர்த்தம்) இங்ஙனம், ஹரிபிரம தேவர்கள் சிவமே பரமம் என்று சிந்தம் தெளிந்து, சிவபூஜை இயற்றி சிவானுக்ரஹம் பெற்று தத்தம் சக்தியோடு, தத்தம் லோகங்கள் அடைந்து தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றலாயினர்.
ஸ்ரீPமத் லலிதா திரிபுரசுந்தரியும், ஹரிபிரமாதி தேவரும் பரம்பொருளான சிவரை வழிபட்ட மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசித் திதியுடன் கூடிய இரவே மகாசிவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிவராத்திரி வகைகள்
புண்ணியமான சிவராத்திரி விரதமானது மகாசிவராத்திரி, மாச சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, வார சிவராத்திரி மற்றும் நித்திய சிவராத்திரி என்று ஐவகைப்படும்.
மகாசிவராத்திரியாவது வருடந் தோறும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியுடன் கூடிய இரவாகும். மாதசிவராத்திரியாவது மாதந்தோறும் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரியாகும். அதாவது மாசியில் அபரபக்ஷ சதுர்த்தசியும், பங்குனியில் அபரபக்ஷ துதியையும், சித்திரையில் அபரபக்ஷ திரயோ தசியும், வைகாசியில் அபரபக்ஷ பஞ்சமியும், ஆனியில் பூர்வபக்ஷ திருதியையும், ஆடியில் பூர்வபக்ஷ அட்டமியும், ஆவணியில் பூர்வபக்ஷ துவாதசியும், புரட்டாசியில் பூர்வ பக்ஷ பஞ்சமியும், ஐப்பசியில் பூர்வபக்ஷ சப்தமியும், காரத்திகையில் பூர்வ மற்றும் அபரபகஷ அட்டமியும், மார்கழியில் பூர்வ மற்றும் அபரபக்ஷ துவாதசியும், தையில் பூர்வபக்ஷ அட்டமியுமாம். இங்ஙனம் ஓர் வருடத்தில் பதினான்கு மாதசிவராத்திரிகள் உள்ளன.
பக்ஷ சிவராத்திரியாவது தை மாசத்தில் அபரபகஷத்தின் பிரதமை முதல் பதின்மூன்று நாளும், ஒருநாளில் ஒவ்வொரு பொழுது மட்டும் போசனஞ்செய்து பதின்னான்காம் தினமாகிய சதுர்த்தசியில் விரதம் அனுஷ்டிப்பதாம்.
வாரசிவராத்திரியாவது சோம வாரத்து உதயம் முதல் விடியல் வரை அமாவாசை இருக்கப் பெறுவதாம். சோமவாரத்து இரவில் நான்கு சாமமும் அபரபக்ஷ சதுர்ததசி இருக்கப்பெறுவதும் வாரசிவராத்திரியாம். இது யோக சிவராத்திரி என்றும் வழங்கப்படும்.
நித்திய சிவராத்திரியாவது பன்னிரு சூரியமான மாதங்களின் பூர்வ மற்றும் அபரபக்ஷங்களிலும் வரும் சதர்த்தசி திதியுடன் கூடிய நிசியாம். அன்றி, நித்தமும் பரமேஷ்வரனை நிசியில் நான்கு சாமங்களும் பூசித்து அனுஷ்டிப்பதாம்.
மகாசிவராத்திரி விரத அனுஷ்டானம்
(இஃது ஸ_த மாமுனிவர் நைமிசாரண்ய வாசிகளுக்கு உபதேசித்ததாம்)
மகிமைமிக்க சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் மகாசிவராத்திரிக்கு முன்னைநாள் ஒருவேளை மட்டும் போசனஞ்செய்து, மங்கையர் சங்கமம் முதலியவற்றைப் பின்பற்றி ஆசாரந்தவறாது இருந்து சுத்தமான இடத்தில் படுத்துறங்கல் வேண்டும்.
மகாசிவராத்திரி விரத நாளான மறுநாட்காலையில் சூரியோதயத்திற்கு முன்பு நித்திரை விட்டெழுந்து ஸ்நானாதி நித்திய கர்மானுஷ்டானங்களை விதிப்படி செய்து முடித்து, ஆத்மார்த்த சிவபூஜை இயற்றி சிவாலயஞ்சென்று பார்வதி பரமேஸ்வரனை முறைப்படி தரிசித்து வீடு திரும்பல் வேண்டும்.
பின்பு வீட்டில் அன்றைய தினம் பரசிவமூர்த்தியை எழுந்தருளச் செய்து பூசிக்கவுள்ள இடத்தை சுத்தமான கோமயத்தால் மெழுகி சுத்தி செய்ய வேண்டும். பின்பு, அவ்விடத்தை பொற்பட்டு வஸ்திரத்தால் வேய்ந்து வாழை, கரும்பு முதலியவற்றை நாட்டியும், தோரணங்கள், வாசமிகு மலர்மாலைகள் என்பவற்றால் அலங்கரிக்கவும் வேண்டும். இங்ஙனம் தயாரித்த சதுரவடிவ பூஜை மண்டபத்தின் மத்தியில் சர்வேஸ்வரன் எழுந்தருளுங்கால் உயர்ந்த பீடம் அமைத்து, அதனை அலங்கரிக்க வேண்டும்.
பின்பு மதியநேர ஸ்நானாதி அனுஷ்டானங்கள் செய்து, மகா சிவராத்திரிக்குரிய பொருட்களைச் சேகரித்து அருகிலுள்ள சிவாலயத்துக்கு சூரியாஸ்தமன வேளையில் கொண்டு சென்று சமர்ப்பித்து வரவேண்டும்.
இங்ஙனம் சிவாலயத்தில் ஏற்பாடுகள் செய்துவிட்டு வீடு திரும்பி சாயங்கால ஸ்நானாதி கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மகாசிவராத்திரி விரத பூஜைக்கு ஆயத்தமாக வேண்டும்.
மகாசிவராத்திரி விரதாரம்ப காலத்தில் பட்டு வஸ்திரம் கொண்டு கூரை வேய்ந்த பூஜா மண்டபத்தில் ஆத்மார்த்த சிவ மூர்த்தியை எழந்தருளப்பண்ணி வேதாகம சாஸ்திரவிதி ஒழுகி அபிஷேக, தூபதீப உபச்சாரங்களை சாமத்திற்கு ஒன்றென நான்கு தடவைகள் இயற்ற வேண்டும்.
ஆத்மாரத்த சிவமூர்த்தியை ஸ்நபன வேதிகையில் எழுந்தருளச் செய்து சுத்தஜலம், பால், தயிர், தேர், சர்க்கரை, இளநீர், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, சுத்தசந்தனம் முதலியவற்றுள் அனைத்தையுமே இயலுமானவரை சேகரித்து அபிஷேகிக்க வேண்டும். இவற்றோடு முதலாஞ்சாமத்தில் பஞ்சகௌவியத்தாலும், இரண்டாம் சாமத்தில் பஞ்சாமிர்தத்தாலும், மூன்றாம் சாமத்தில் தேனாலும், நான்காம் சாமத்தில் கருப்பஞ்சாற்றாலும் கட்டாயமாக அபிஷேகிக்க வேண்டும்.
இங்ஙனம் சிவலிங்க மூர்த்தியை அல்லது மற்றைய ஆத்மார்த்த மூர்த்தியை அபிஷேகிக்கும் போது சதுர்வேத நடுநாயகமாகத் திகழும் ஸ்ரீருத்ரத்தை (இது குருமுகமாக கேட்டு பொருளுணர்ந்ததாக அமைய வேண்டும்) பாராயணஞ் செய்வதோ அல்லது அதன் சாரமாக மாணிக்கவாசகர் அருளிய திருத்தாண்டகத்தை பாராயணஞ் செய்வது அதியுத்தம பலனைத் தரவல்லதாகும்.
விதிப்படி சிவமூர்த்தத்தை அபிஷேகித்த பிற்பாடு பட்டுவஸ்திரங்கொண்டு திருமேனியை ஒற்றி, ஸ்நபன வேதிகையிலிருந்து பக்குவமாய் எடுத்து, சிவாகம விதிப்படி தயாரிக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தில் ஏற்றி அலங்காராதி உபச்சாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
(அலங்காரம் செய்யும் போது எந்த இறையுருவத்திற்கும் பின்பு திருவாசி என்ற அமைப்பை வைக்க வேண்டும்)
மஹாஸிம்ஹாஸனத்தில் ஏற்றி வைக்கப்பட்ட சிவமூர்த்திக்கு முதற்சாமத்தில் முறைப்படி அரைத்த அகிற்குழம்புடன் வில்வமும், இரண்டாஞ்சாமத்தில் முறைப்படி அரைத்தெடுத்த சந்தனச் சாந்துடன் தாமரைப் பூவும், மூன்றாஞ்சாமத்தில் அரைத்தெடுத்த பச்சைக் கற்பூரப் பொடியுடன் சாதிமுல்லை மலரும், நான்காஞ்சாமத்தில் அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியவர்த்தன புஷ்பமும் சாற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
அலங்காரத்தின் பின்பு முதற்சாமத்தில் தாமரை மலராலும், இரண்டாம் சாமத்தில் துளசி பத்திரத்தாலும், மூன்றாம் சாமத்தில் முக்கிளையுடைய வில்வ தளத்தாலும், நான்காம் சாமத்தில் நீலோத்பல மலராலும் பரமனின் திருநாமாக்களைக் கூறி மனமுருக அர்ச்சிக்க வேண்டும். இவற்றுடன் நான்கு சாமங்களிலும் பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட்கிளுவை மற்றும் விளா ஆகிய விருட்சங்களின் பத்திரத்தை அர்ச்சனைக்கு கட்டாயமாக சேர்க்க வேண்டும்.
சிவ நாமார்ச்சனை முடிந்த பிற்பாடு முதற்சாமத்தில் பயற்றம் பருப்பு சேர்த்த பொங்கலும், இரண்டாம் சாமத்தில் பாயாசமும், மூன்றாம் சாமத்தில் எள்ளன்னமும், நான்காம் சாமத்தில் சுத்தான்னமும் நிவேதித்து பரமேஸ்வரனைத் தொழ வேண்டும். அங்ஙனம் செய்ய இயலாதோர், நான்கு சமாத்திற்கும் சுத்தான்னம் நிவேதித்து வழிபடலாம்.
இவ்வாறாக நைவேத்தியத்தை நிவேதித்த பிறகு, ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட தூப பாத்திரத்தில் தூய தணலை நிரப்பி மஹா மகேஸ்வரனுக்கு தூபத்தை சமர்ப்பித்தல் வேண்டும். முதல் சாமத்தில் சாம்பிராணியுடன் சந்தனக் கட்டையும், இரண்டாம் சாமத்தில் சாம்பிராணியுடன் குங்குமப் பூவும், மூன்றாம் சாமத்தில் சாம்பிராணியும் கருங்குங்கிலியமும், நான்காம் சாமத்தில் பச்சைக் கற்பூரம், இலவங்கப் பட்டை மற்றும் இலவங்க பத்திரம் என்பவற்றையும் பயன்படுத்தி தூபோசாரம் செய்ய வேண்டும்.
தூபோசாரம் முடிந்த பின்பு, இருள் நீக்கி ஒளி நல்கும் தீபத்தை சிவமூர்த்திக்கு சமர்ப்பிக்க வேண்டும். தீபோசாரம் முடிந்த பிற்பாடு, வேதநாயகனை வேதத்தால் துதிக்க வேண்டும். அதாவது, வேத விற்பன்னர்கள் மூலம் முதலாம் சாமத்தில் ரிக் வேத பாராயணமும், இரண்டாம் சாமத்தில் யஜுர் வேத பாராயணமும், மூன்றாம் சாமத்தில் சாமவேத பாராயணமும், நான்காம் சாமத்தில் அதர்வண வேத பாராயணம் செய்வித்திட வேண்டும். வேதபாராயணத்தைத் தொடர்ந்து திருமுறைகளை பண் சுத்தமாக ஓதி இறைவனைத் தொழுதேத்தி கற்பூர தீபம் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்பு, அர்க்கியம் சமர்ப்பித்து ஆணாயின் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்ணாயின் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து ‘அடியேன் புரிந்த பூசையில் உள்ள குற்றங்குறைகளை மன்னித்தருளி சிவானுக்ரஹம் தந்திட வேண்டும்” என்று பரமேஸ்வரனைப் பிரார்த்திக்க வேண்டும்.
இறைவனை முதலாம் சாமப் பூஜையின் போது சோமாஸ்கந்த மூர்த்தியாயும், இரண்டாம் சாமப் பூஜையின் போது தக்ஷிணா மூர்த்தியாயும், மூன்றாம் சாமப் பூஜையின் போது அடிமுடியறியாது ஹரிபிரம தேவர்க்கு காட்சி கொடுத்தருளிய ஸ்ரீ இலிங்கோத்பவ மூர்த்தியாயும், நான்காம் சாமப் பூஜையின் போது இடபாரூடர்ஃவிருஷபாரூடராயும் தியானித்து வழிபடுதல் வேண்டும்.
வழிபாடு முடித்த பிற்பாடு ஒவ்வொரு சாமத்திலும் மிஞ்சியுள்ள நேரத்தை திருமுறை பாராயணத்தில் செலவிடுதல் மகாபுண்ணியமாகும்.
நான்கு சாமப் பூஜைகளும் முடிந்து பொழுது புலர்ந்த பின்பு விடியற்காலை மற்றும் உச்சிக்கால ஸ்நானாதி நித்திய கர்மானுஷ்டானங்களை இயற்றியவனாய் தனது தீக்ஷா குருவைப் பூசித்து, பிராமண லக்ஷணங்கள் வாய்க்கப்பெற்ற உத்தமசீலர்க்கு ஆடையும், உணவிற்குரிய பண்டங்களையும் வழங்கி ஆசிபெற வேண்டும்.
சூரியன் உதித்து ஆறு நாழிகைகளுக்குள் (2 மணித்தி யாலங்கள் 24 நிமிடங்கள்) மாகேஸ்வர பூசை ( சிவனடியாருக்கும், ஏழை எளியோருக்கும் முறைப்படி தமது இல்லத்தில் அமுது செய்வித்தல்) செய்து பாரணஞ் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்துவிட வேண்டும்.
விதிப்படியாக மகாசிவராத்திரி விரதத்தை இருபத்து நான்கு வருடங்கள் இடைவிடாது தொடர்ந்து நோற்று, இருபத்து நான்காம் வருடத்தில் அந்தண சிரேஷ்டருக்கும், சிவனடியாருக்கும், ஏழை எளியோர்க்கும் கோதானம், வஸ்திரதானம், ஸ்வர்ணதானம் முதலிய தானங்களை வழங்கி அவர்களிடம் ஆசி பெற வேண்டும். இங்ஙனம் செய்வோர் மட்டுமின்றி. அவர்தம் முன்பின் மூவேழ் சந்ததியினரும் சிவலோக சித்தி பெற்றுய்வார்கள் என்பது சத்தியம்.
மகாசிவராத்திரி விரத காலத்தில் செய்ய வேண்டியவனவும் செய்யத் தகாதனவும்.
மனத்தை எந்தவொரு பொறிவழியிலும் செலுத்தாது, ஒருங்குபடுத்தி முத்தியின்பம் பெறச்செய்வதே விரதத்தின் நோக்கமாகும். அதிலும், மகாசிவராத்திரி விரதமானது விரதங்களுக்கு தலையாய விரதம் என்பதால் இவ்விரத காலத்தில் சிவசிந்தனையில் ஊறிக்கிடக்க வேண்டும். இங்ஙனம் இருப்பதற்கு சதுர்வேத சாரமாக தமிழில் உள்ள திருவாசகத் தேனை பாராயணம் செய்வது மிகச் சிறந்த வழியாகும். அங்ஙனமின்றி தொலைக்காட்சி என்பவற்றில் திரைப்படங்கள் பார்த்தல், சமூக வலைத்தளங்களில் சஞ்சரித்தல் என்பன சிவராத்திரி காலத்தில் முழித்திருந்த பலனைக் கூட பெறவிடாது.
வீட்டில் சிவபூஜை இயற்ற இயலாதோர் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கு விழித்திருந்து, சிவபூசைக்குரிய சகாயம் செய்து, அப்பூசையைத் தரிசித்து, அடியாரோடு கூடி திருமுறை பாராயணம் செய்து இருத்தல் வேண்டும். மேலும், ஆலயத்துக்கு வரும் அடியார்கள் களைப்புணராவண்ணம் இருக்க திருமுறை நாட்டிய நாடகங்களையோ அல்லது நாயன்மார் சரித்திர நாடகங்களையோ ஆலய வளாகத்தில் ஒழுங்குபடுத்தி அடியார்கள் சிவானுபூதி பெற வழிசமைக்க வேண்டும். இவைவிடுத்து, ஆலயத்தில் வீண்கதை பேசுதல் முதலிய சிற்றின்பச் செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியவனவாம்.
சிவராத்திரி புராணம்
சிவராத்திரி விரதத்தின் உற்பத்தி, அதன் வகைகள், நோற்கும் முறை, விரதத்தால் பலன் பெற்றோர் வரலாறு என்பவற்றை விளக்கி சிவராத்திரியை நடுநாயகமாகக் கொண்டு எழுந்ததே சிவராத்திரி புராணமாகும். இந்நூலானது யாழ்ப்பாணம் சுன்னாகத்து வரதராஜ பண்டிதரால் இயற்றப்பட்டது ஆகும்.
அடுத்த இதழில் சிவராத்திரி மகிமைகளை மேலும் அறிவோம்…
‘மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
திருச்சிற்றம்பலம்