ஜப்பானை சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான சோனியும், ஹோண்டாவும் இணைந்து புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த புதிய நிறுவனத்தில் ஹோண்டா நிறுவனம் வாகன பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவைகளை பார்த்துகொள்ளும். சோனி நிறுவனம், இமேஜிங், சென்சார், தொலைத்தொடர்பு, நெட்வொர்க், கேளிக்கை ஆகியவற்றில் தனது தொழிநுட்பத்தை வழங்கும். இந்த ஆண்டே நிறுவனம் தொடங்கப்பட்டாலும் புதிய நிறுவனத்தின் முதல் ஈ.வி மாடல் வாகனம் 2025-ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தில் திட்டமிடுதல், டிசைன், விற்பனை ஆகியவை நடைபெறும் என்றும், உற்பத்தி ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் தான் செய்யப்படும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் ‘ஸ்கின் இன்டர்ஃபேஸ்’ எனும் புதிய தொழில்நுட்பம் ஒன்றிற்க்கு காப்புரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் நமது சருமத்தை தொடுவதன் மூலம் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தும் பயனர்கள் வாட்சின் திரையை தொடாமல் வாட்ச் பக்கத்தில் உள்ள சருமத்தை தொடுவதன் மூலம் அழைப்புகளை அட்டெண்ட் செய்ய முடியும், அதேபோல காதின் அருகில் தொடுவதன் மூலம் இயர்பட்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.
இது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் காலமாகியுள்ளார்.