இதழ் 45

போர்களுக்கு காரணமாகும் பொய்மான்

மானும் வானும் சேர்ந்து அழுகின்றன. இரண்டு வேந்தர்களுக்கிடையில் போரைத் தொடக்கிய ஒரு பொய்மானே இன்று புலம்பி நிற்கிறது.

இரண்டு மன்னர்களுக்கிடையிலான போர் இரண்டு படைகளுக்கு இடையிலென்றாகி இரண்டு மக்களுக்கு இடையிலான போராக உருமாறும் என்று பொய்மான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு யானைகளின் மோதலில் நசுங்கிய புல்லாய் போனவர்களின் நிலையே வானின் கண்ணீராய் பொய்மானை நனைக்கிறது.

போரைத் தொடக்கியது பொய்மான் என்றறியாமல் ‘போரை நிறுத்துங்கள் புதீன்” என்று கோசமிடுவதால் பலனென்ன?

‘போரை நிறுத்து இராமா!” என்று அன்று இராவணன் கேடகவில்லையே. போராடித்தானே அழிந்து போனான். போரைத் தொடக்கியது இராமனல்ல என்று இராவணன் அறிந்திருந்தான். போர் என்பது ஒரு விளைவு. அதை நிறுத்துவதும் தவிர்ப்பதும் மூலகாரணத்தின் கைகளிலே இருக்கிறது. அந்த மூலகாரணமே ஒரு பொய்மான் உருவாய் புலப்படாமல் ஓடி ஒளிந்து கொள்கிறது.

இராமன் இறந்துவிட்டான். சீதையும் இறந்துவிட்டாள். இந்த பொய்மான் மட்டும் இறக்கவில்லை. அது இறக்காது.

காலங்காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதோ இன்றும் உங்கள் கண்முன்னால் நின்று உங்களை அழைப்பது தெரியவில்லையா? அதன் வசீகர வசிய வனப்பில் சீதைகள் மட்டுமல்ல இராமர்களும் மயங்குகிறார்கள். இலட்சுமணர்களும் மயங்குகிறார்கள். நாம் மயங்கக் கேட்பானேன்.

நம் மனதின் அலைவரிசைக்கேற்ப அந்தப் பொய்மான்கள் தங்களை அழகாய் உருமாற்றுகிறது. ஒரு பொய்மானை பார்த்தால் பாசம் பொங்குகிறது. ஒரு பொய் மான் கடமையே கண் போல் காட்சியளிக்கிறது. ஒரு பொய்மான் அக்கறையோடு பேசுகிறது. ஒரு பொய்மான் எம்மை சிரிக்க வைக்கிறது. இன்னொரு பொய்மான் எம்மை சிந்திக்க வைப்பதாய் கூறி முட்டாளாக்குகிறது. அநாதர வானவர்களை ஒரு பொய்மான் ‘வா” என்று அழைக்கிறது.

பொய்மான் விளம்பரங்கள் வீதியெங்கும் தெரிகின்றன. இருளில் வீதிக்கும் வீட்டிற்கும் கூட விளக்கு அநாவசியம். விளம்பரங்களிக்கு விளக்கு அவசியம். பொய்மான் நாளின் அத்தனை நேரமும் எம்மைக் கண்காணிக்கிறது.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொய்மானிடம் அடிமையாகிறோம். வில்லைப் பூட்டிக் கொண்டு அதனைத் துரத்திச் செல்கின்றோம். கண்களில் தெரியாத பொய்மானை வேட்டையாட துணிகையில் வேட்டை சிக்கலாகிறது. வேட்டைக்காரனே பல நேரங்களில் வேட்டையாடப்பட்டு விடுகிறான்.

அத்தோடு பொய்மான் உருவாக்கிய போராட்டங்கள் முற்றுப் பெறுவ தில்லை. அனைவருக்குமான உலகம் மீண்டும் அனைவரையும் போராட வைக்கும். தூண்டி விட மீண்டும் ஒரு பொய்மான் போதும். பொய்மான் போராட்டங்கள் மேலும் மேலும் தொடர்கதையாக வளர்கின்றன. வாழ்க்கையோடு போராடுபவர்களின் போராட்டத்தில் வாழ்க்கைக்காக போராடுபவர்கள் தோற்றுப் போகிறார்கள்.

அதோ அங்கே இன்னொரு பொய் மான் எம் எல்லோரையும் சைகையால் அழைக்கிறது. நம் வாழ்க்கை கடன்பட்டுக் கொண்டிருக்கிறதாம். அதை நாம் தான் மீட்டாக வேண்டுமாம். அதற்காக முடிந்தவரை போராடித்தான் ஆகவேண்டும் என்கிறது.

அரண்மனை ஒளியில் அது ஒளி வீசிக்கொண்டு எம் இருட்டைப்பார்த்து அனுதாப நாடகம் போடுகிறது. கூடத்தில் நிறுத்தி துகிலுரித்த பின்னும் நூதன போராட்டத்தை கடந்து செல்ல கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாய் சொல்கிறது.

‘சம்பாதித்துப் பெற்ற வடைகளை எல்லாம் நரிகளிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாய் திரும்புங்கள் காக்கைகளே..” என்று மக்களை அது உற்சாகப்படுத்துகிறது.

அரண்மனை வெளிச்சத்தில் அந்தப்பொய்மான் அத்தனை கவர்ச்சியாய் இருக்கிறது. ஒரு நாள் அரண்மனை இருளும் போது – அரண்மனையின் அடுப்பு அணையும் போது அந்தப் பொய்மானின் கவர்ச்சி காணாமல் போய்விடும். அப்படி இல்லையென்றானால் பொய்மானால் மீண்டும் போராட்டம் தொடர்கதையாகும்.

Related posts

கந்தர்வ கான வித்தகன்

Thumi202122

கிரிக்கெட்டில் புதிய விதிகள்

Thumi202122

சிவராத்திரி விரத மகிமை – 02

Thumi202122

Leave a Comment