இதழ் 19

IPL இலக்கு அடையப்பட்டதா?

சைவமும் தமிழும் தளைத்து ஓங்கும் இணுவையம்பதியின், துடுப்பாட்ட இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இணுவில் பிரிமியர் லீக் (IPL) தொடரின் முதலாவது பருவகாலம் இனிதே நிறைவேறியது. இந்தியாவின் இந்தியன் பிரிமியர் லீக் – IPL தொடருக்கு நிகராக இணுவில் வாழ் இளைஞர்கள் ஏழு அணியாக பிரிந்து, ஏலம் முறையிலே வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இத்தொடரில் 165 வீரர்கள் பதிவை மேற்கொண்டதுடன் 105 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு போட்டிகள் இனிதே ஆடப்பட்டன.

இப்போட்டி தொடர் தனது இலக்கை எட்டியதா? என்றால் ஆம்! என்றே பதில் அளிக்க வேண்டும். வெற்றி – தோல்விக்கு அப்பால் இப்போட்டித்தொடர் 105 வீரர்களை ஒரே களத்தில் இணைத்துள்ளது. இது பெரும் வெற்றியே. அத்துடன் 2015இற்கு முன்னைய காலப்பகுதியில் இணுவில் மத்திய கல்லூரி மைதானம் விடுமுறை காலங்களிலும் மாலை நேரங்களிலும் இளைஞர்களால் நிறைந்து காணப்படும். ஆனால் 2015இற்கு பிறகு அவ்வாறான காட்சியை பெரிதாக காண முடியாமல் போய் உள்ளது. மைதானம் ஓய்வின்றி ஆர்ப்பரித்தது முன்னைய காலங்களில். அதிகாலையில் 6.00மணிக்கு சென்று மைதானத்தில் ‘எமக்கு match இருக்கிறது” என அடையாளம் இட்ட காலம். அத்துடன் ஒரே நேரத்தில் மைதான கடையிலும் நடுவிலும் விளையாடிய காலம். இவை எல்லாம் காணாமல் போன நிலையில் இந்த இணுவில் பிரிமியர் லீக் தொடர் போட்டி இடம்பெற்று நான்கு நாட்களும் 2015ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னைய காலம் போல் மைதானம் காணப்பட்டது. இதுவும் இணுவில் பிரிமியர் லீக் கண்ட வெற்றியே ஆகும்.

அடுத்து, மகனின் விளையாட்டை காண தந்தை தம்பியின் விளையாட்டை காண அண்ணன் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மைதானத்தில் நிறைந்து இருந்தமை வெற்றியே!

அடுத்து 2015ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக குளக்கரை மைதானத்தில் ஆர்ப்பரித்த குரல்கள் பல மீண்டும் குளக்கரை மைதானத்தில் ஆர்ப்பரித்தன. ஒரு வீரன் தன்னுடைய அனுபவத்தை பகிரும் பொழுது கூறினார். ‘தான் எட்டு வருடங்களின் பின்னர் துடுப்பு மட்டையை பிடிக்கிறேன்” என்று இவ்வாறு பல வீரர்கள், பல நண்பர்களை இணுவில் குளக்கரை விளையாட்டு மைதானத்தோடு ஒன்றிணைத்து இணுவில் பிரிமியர் லீக் தொடர் கிண்ணம்.

போராடும் மனநிலை, தோல்வியை ஏற்கும் மனநிலை, தோல்விக்கு பின்னால் உள்ள காரணங்களை ஆராய்தல், புதிய திட்டங்களை வகுத்தல் என ஒரு மனிதனுக்க தேவையான சமூக அறிவு விளையாட்டின் மூலமே பெற்று கொள்ள முடியும். அத்துடன் இன்றைய சமூகத்தில் அந்தஸ்து, கல்வி மட்டம், பிரதேச வேறுபாடு என பல பிரிவுகளாக நாம் பிளவுபட்டு உள்ளோம் யாவற்றையும் விளையாட்டு களைந்து விடுகின்றது. இவ் அனுகூலங்களை இணுவில் பிரிமியர் லீக் தொடரும் செவ்வனவே நிறைவேற்றியுள்ளது. ஒரு கிண்ணத்திற்கு விரிவுரையாளர், ஆசிரியர், பொறியியலாளர், மாணவர்கள், சாதாரண நபர் என அனைவரும் முயற்சித்தது இத்தொடரின் வெற்றியாகவே அமைகிறது.

பலருக்கு களம் அமைத்து கொடுக்கப்பட்டது. பலருக்கு இலக்கம் உடைய சீருடை அணிந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. புதிய அத்திவாரம் இடப்பட்டது. இளைஞர் ஒற்றுமைகள் களத்தில் நிரூபணமாகியது. இதுவெல்லாம் விளையாட்டால் முடியும் என்பதை இணுவில் பிரிமியர் லீக் தொடரும் நிரூபித்துள்ளது.


அத்துடன் இன்று இளம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்ற முக்கிய விடையமாக காணொளி, இணைய விளையாட்டுக்கள் காணப்படுகிறது. இக்காணொளி, இணைய விளையாட்டானது இளம் சமூகத்தின் மத்தியிலே மனஅழுத்தம், பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற உளரீதியான பிரச்சினைகளுடன் நித்திரைக்குழப்பம், கண்வலி, வன்போக்கு நடத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாய் அமையும். ஆனால் மைதானத்தில் விளையாடுகின்ற பொழுது அது மனமகிழ்ச்சி ஆரோக்கியமான நித்திரை, பசி, உற்சாகம் என்பவற்றை ஏற்படுத்தும் ஆரோக்கியமான இனளயோர் சமூகத்தை உருவாக்க உதவும். இவ்வாறான பல்வேறு சமூக மாற்றத்திற்கு அடி எடுத்து வைத்தது இணுவில் கலையொளி மன்றத்தால் நடாத்தப்பட்ட இணுவில் பிரீமியர் லீக் தொடர் ஆகும்.

இவ்வாறு அனைத்து கிராமங்களிலும் ஆரோக்கியமான சிந்தனையை வளர்க்க கூடிய இவ்வாறான போட்டித் தொடரை நடத்துவதன் மூலம் உடல், உள ஆரோக்கியம் உள்ள சமூகத்தை உருவாக்க முடியும் பல்வேறு சமூக பிரச்சினைக்கும் இது தீர்வாக அமையும்.

Related posts

உயிரின் ஓலக்குரல்

Thumi2021

ஈழச் சூழலியல்

Thumi2021

தொடரும் பனிக்காலம்

Thumi2021

Leave a Comment