வருடந்தோறும் பெப்பிரவரி மாதம் 21 ஆந் திகதியில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனம் 1999.11.17 அன்று பெப்பிரவரி-21 ஆந் திகதியை உலக தாய்மொழி நாளாகப் பிரகனப்படுத்தியதுடன் முதன் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக தாய்மொழி நாள் கொண்டாடப்பப்பட்டது. 20 வருடங்களாக உலக தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தாய்மொழியைப் பற்றியும் பண்பாட்டுப் பல்வகைமையைப் பற்றியும் பன்மொழிகள் பற்றியும் ஒரு விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும். “கல்வியிலும் சமூகத்திலும் உள்வாங்கப்படும் வண்ணம் பன்மொழிக் கொள்கையை மேம்படுத்தல்” (Fostering multilingualism for inclusion in education and society) என்பதே இவ்வாண்டின் (2021) தாய்மொழி நாளுக்கான தொனிப்பொருளாகும்.
உலக தாய் மொழிநாள் உருவான பின்னணி யாதெனில், 1952 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 21 ஆந் திகதி வங்களா தேசத்தில் நடந்த போராட்டப் பேரணி ஒன்றில் வைத்து நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வங்காளி மொழிக்கும் உருது மொழிக்குமிடையே உண்டான சர்ச்சை குறித்தே அப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். படுமோசமான இச்சம்பவத்தினால் முழு உலகும் நெகிழ்வுற்றிருந்தது. இதனடியாகவே யுனெஸ்கோ நிறுவனம் 1999 ஆம் ஆண்டு இந்நாளைத் தாய்மொழி நாள் என்று பறைசாற்றியது. மேலும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2008 ஆம் ஆண்டினை “சர்வதேச மொழி ஆண்டு” (International year of languages) எனப் பிரகடனம் செய்ததோடு 2019 ஆம் ஆண்டினை “சுதேச மொழிகள் ஆண்டு” (The year of indigenous languages) எனவும் பிரகடனம் செய்தது.
உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதன் அவசியம்தான் என்ன என்று ஆராய்கையில், உலகமயமாதல் செயன்முறை மூலமாகப் பல்வேறு மொழிகள் இல்லாதொழியும் அபாயம் காணப்படுவதால், அத்தகைய மொழிகளையும் அவைதம் பண்பாடுகளையும் பேணிப் பாதுகாப்பது கடினமான ஒரு விடயமாக இருப்பது புலப்படுகின்றது. அவ்வாறு 6000 மொழிகள் அருகி வருகின்றன. இது உலகில் பேசப்படும் மொழிகளில் 43% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு ஒரு மொழி என்னும் வகையில் இம்மொழிகள் முற்றாக அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பண்பாடுகளும் புலமைகளும் கூட அவற்றுடன் சேர்ந்து மடிந்து விடுகின்றன. உலகில் 40% ஆனோர் தமது சொந்த மொழியில் கல்வியைப் பெற வாய்ப்பற்றோராகவே உள்ளனர். இருப்பினும் தாய்மொழி மூலம் அமைந்த கல்வியின் முக்கியத்துவத்தை விளங்கி அக் கல்வியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாடசாலைக் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை நோக்கியே இது அமைய வேண்டும். அதுவே பரந்துபட்ட சமூக வாழ்க்கையின் விருத்திக்கு அவர்களுக்குத் துணை நல்குகின்றது.
பன்மொழிகளும் பல்பண்பாடும் கொண்ட சமூகங்கள், தத்தம் மொழினூடாகவே வழி வழியாக தாம் பெற்றுவந்த அறிவையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்றன. அதுவே நின்று நிலைக்கும் தன்மை வாய்ந்தது.
எனவே, இத்தகைய மொழிகள் மறக்கடிக்கப்படாமல் இருக்கவும் அவைதம் பண்பாடு, பாரம்பரியம், தேசத்தின் திடமான வரலாறு போன்றனவற்றைப் பேணிக்காக்கவும் உலக தாய்மொழி நாள் உறுதுணை புரிகின்றது. நாம் நமது தாய்மொழியைப் பெருமையாகக் கருத வேண்டும் என்பதுடன் அம் மொழியைத் திறன்பட வாசிக்கவும், எழுதவும், பேசவும், செவிமடுக்கவும், அறியவும் முயற்சி எடுத்தல் வேண்டும்.
தென்னாபிரிக்காவின் புகழ் பெற்ற முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தாய்மொழி பற்றிப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
“ஒருவர் புரிந்துகொள்ளத்தக்க மொழியொன்றில் அவரிடம் கதைக்கும் பொழுது அக்கதை அவரின் தலையில் மாத்திரமே ஏறுகின்றது; மாறாக, அவரின் தாய்மொழியில் அவரிடம் கதைக்கும் பொழுது அக்கதை அவரின் மனதிலேயே ஏறுகின்றது”. என்னதான் வேற்று மொழியில் உரையாடினாலும் சொந்த மொழியில் உரையாடும் உணர்வுதான் தனிச்சிறப்புடையது என்பதனையே அவரின் கருத்து புலப்படுத்துகின்றது. அதுவே உண்மை. அதுவே கதைக்கின்ற கதைக்கு உள்ளபடி உயிரோட்டத்தைக் கொடுக்க வல்லது.
எமது தாய்மொழி தமிழ். இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மொழியாகும். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மொழிகளும் தமிழிலிருந்தே பிறந்தன. தமிழ் மொழி ஐயாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட, பழைமை வாய்ந்ததொரு தொன்மையான மொழி. இதனை வைத்துப் பெருமை கொள்வதா? அல்லது அப்பெருமையைக் கட்டிக்காப்பதா? என்பது இன்று தமிழ்கூறும் நல்லுலகில் மீள்பரிசீலனை செய்யத்தக்க ஒரு முக்கியமான விடயமாகும். அத்தகைய ஒரு கட்டத்தைத் தமிழ்கூறும் நல்லுலகு எதிர்நோக்கியும் உள்ளது வெளிப்படை. ஏனெனில் தமிழின் இயல்பான நடை அல்லது இயற்கையான பாணி மெல்ல மெல்லக் கதியற்றுச் செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது. தமிழைத் தாய்மொழியாகப் பேசுவோரே தமிழைக் கொல்லவும், பிறமொழி ஊடுருவல்களாலமைந்த செயற்கை மொழிக் கையாட்சியைப் புகுத்தவும் தலைப்பட்டுள்ளனர். உறுப்பமைந்த எழுத்துகளிலிருந்தும், இலக்கண முறைகளிலிருந்தும், இயற்கை நடையிலிருந்தும், நேரிய வழக்குகளிலிருந்தும் விடுபட்டு, எங்கெங்கோ இரவல் பெற்ற மாற்றான் தாய் வழக்குகளுக்குச் செயற்கைச் செழுமையூட்டி, புழக்கத்திலும் பழக்கத்திலும் தமிழ் கதியற்றுத் தவிக்கின்றது.
இதனையே பாரதியார்
“மெல்லத் தமிழினிச் சாகும்
அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்”
என்று கூறியிருப்பார் போலும் என்றெண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் தமிழரே தமிழ் வளர்க்க முன்வரமாட்டர் என்று தனது பட்டறிவின் மூலம் அவர் அன்றே கணித்துவிட்டார்.
எமது மூதாதையர் செய்த அரிய சாதனைகளான அறநூல்கள், காப்பியங்கள், காவியங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை இயற்றமுற்படாது போனாலும், அவர்களின் வழிவந்த மொழிப் பாவனையையாவது நாம் கட்டிக்காத்தல் அவசியமல்லவா? அவர்கள் இலக்கியம் படைத்து எமது மொழியின் வரலாற்று இருப்புக்குச் சான்று வழங்கினர். நாம் அதன் அழகையாவது கெடுக்காமல் இருப்பதுதானே தகுந்த கைமாறு.
இன்றைய சூழலில் தமிழை எழுதும்போது மேற்கொள்ளப்படும் குறைபாடுகள் அல்லது பிழைகள் ஒரு சிலவற்றைக் கீழே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகின்றேன். அப் பிழைகளின் சீரான தமிழ் வடிங்களும் காட்டப்படுகின்றன.
அனைவர்களும் (X)
அனைவரும் (✓)
கனமழை (X)
பலத்த மழை (✓)
சமூக இடைவெளி (X)
ஆளிடைவெளி (✓)
இனச் சுத்திகரிப்பு (X)
இனக் களைவு (✓)
மூளைச் சலவை (X)
கருத்துத் திணிப்பு (✓)
குரலற்றவர்களின் குரல் (X)
ஆதரவற்றோருக்கான குரல் (✓)
பல வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. (X)
….மேற்கொள்ளப்படுகின்றன. (✓)
ஒரு நிகழ்ச்சிக்கான தயாரிப்பு (X)
….. ஆயத்தப்படுத்தல் / ஒழுங்குபடுத்தல் (✓)
காட்டு விலங்குகளின் அச்சம் காரணமாக நாங்கள் வெளியேறினோம். (X)
நாங்கள் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி வெளியேறினோம். (✓)
கொவிட்-19 இற்குச் சாதகமாகப் பரிசோதனை செய்துள்ளார். (X)
கொவிட்-19 தொற்றியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. (✓)
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (X)
இந்தியா கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (✓)
மேற்குறிப்பிட்டவை சொற்களிலும் வசனங்களிலும் காணப்படும் குறைபாடுகளே. அதைவிடுத்து, இன்று பல்லூடகங்கள் வாயிலாகக் காணக்கிடைக்கின்ற எழுத்துப் பிழைகளோ எண்ணிலடங்காதவை. ஒவ்வொருவரும் தனித்தனியே தன்பாட்டில் தான் எழுதுவது எல்லாம் சரிதான் என்றெண்ணி எழுதுவதே இப்பிழைகள் வரக் காரணமாகின்றன. ஆங்கிலத்தில் பிழைவிட்டால் எங்கே மாட்டிக்கொள்வோமோ? என்ற எண்ணத்தில் கண்ணுங்கருத்துமாகப் பிழைகளேதும் இன்றி ஆங்கிலத்தை எழுதுவதில் கவனம் செலுத்தும் நாங்கள், அதே சிந்தனையுடன் தமிழை எழுத ஏனோ அலட்சியம் செய்கின்றோம். இதனால் பாதிப்படைவது தமிழ் மாத்திரமல்ல; தமிழ் மொழியை அரிச்சுவடி முதற்கொண்டு எழுத்துக் கூட்டி வாசிக்கப் பழகும் பருவத்திலுள்ள எமது எதிர்காலத் தமிழ் பேசும் குழந்தைகளும் தான். அவர்களே நாளைய தமிழறிஞர்கள், பண்டிதர்கள், எழுத்தாளர்கள். அவர்கள் ஒருபோதும் பிழையாக வழிநடத்தப்படலாகாது.
இத்தகைய பிழைகள் ஏற்படக் காரணங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான மூன்று விடயங்களாக ஊடகங்கள், நவீன தட்டச்சு முறைகள், ஆங்கில மொழிச் செல்வாக்கு என்பன காணப்படுகின்றன.
ஊடகங்கள் கல்வி கற்கும் பிள்ளைகள் முதல் சமூகத்தின் பல மட்டத்திலுள்ளோர் வரை அனைவரும் தொடர்புறும் ஒரு முக்கிய சாதனமாகும். அவை எழுத்து ஊடகமாக இருந்தாலும் ஒலி, ஒளி ஊடகமாக இருந்தாலும் அவற்றின் மூலம் பயன்படுத்தப்படும் சொற்கள், வசனங்கள், கருத்துகள் போன்றவை மூலம் மக்கள் கற்கின்றனர். இத்தகைய கற்பித்தலை எக்காலமும் எந்நேரமும் வழங்கும் ஊடகங்கள் மிகத் திறன்பட தமிழ் மொழியைப் பிரயோகிப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
ஆங்கில மொழியின் பல்கிப் பெருகிய செல்வாக்கும் புதிய நவீன கலைச்சொற்கள் ஆங்கில மொழி வழியாகவே எமக்குக் கிடைப்பதாலும், அச் சொற்களின் அல்லது சொற்றொடர்களின் அல்லது வசனங்களின் பொருள்களைச் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்த்துப் பொருள் கொள்வதை விடுத்து, தமிழின் இயல்பான நடையைக் கருத்திற் கொண்டு நேரிய பொருள் கொள்வதே ஏற்புடையது. மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளுள் சில ஆங்கில வழியமைந்த செயற்கைத் தமிழ் மொழியாகும்.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு வடிவிலான தமிழ் தட்டச்சுக் கருவிகள் கைப்பேசிகளிலும், கணினிகளிலும் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கையாளும் போது எழுத்துப் பிழைகள் அதிகமாக ஏற்படுவது இயல்பான ஒரு விடயம். எனவே அவற்றைப் பயன்படுத்தி எழுதும் வேளைகளில் எழுதப்படும் கருத்தில் கவனம் செலுத்தினாலும், எழுதி முடித்த பின்னர் எழுத்திலும் கவனம் செலுத்தி ஒருமுறை, இருமுறை மீள்வாசிப்பு செய்தே பதிவிட வேண்டும் அல்லது பதிப்பிக்க வேண்டும்.
வாழும் மொழி என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையாக, எம்மொழி புதுமைகளை ஏற்று தனது தனித்துவத்திலிருந்தும் நழுவாது திடமாக நடை போடுகிறதோ அதுவே வாழும் மொழியாகும் என்று கொள்ளப்படுகின்றது. இச்சிறப்பியல்பு தமிழுக்கு என்றென்றும் கைகூடி வருகின்றது. புதியன புகுதல் என்பது நவீன யுகத்தின் தொடக்கத்திலிருந்தே தமிழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தச் செயன்முறையில் பாரிய பங்கேற்பது மொழிபெயர்ப்புகள் எனலாம். பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புலமைகள் தமிழில் சொரிந்து கிடக்கின்றன. இது பாரதியாரின் பேரெதிர்பார்ப்புமாகும். தமிழின் தொன்மையான வரலாற்றினடியாகவும் புதியன ஏற்றல் பண்பின் காரணமாகவும் தமிழுக்கு “செம்மொழி” என்ற புகழ் சூட்டப்பட்டது.
இன்றைய சூழலில் தமிழ் மொழியின் தன்மையையும் அதன் நேரிய வழக்கையும் பேணிக் காப்பதே தமிழராகிய நாம் தமிழுக்குச் செய்ய வேண்டிய மிக முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. அத்தகைய “மொழிப் பிறழ்வு”தான் தற்போது தமிழ் மொழி சந்தித்துள்ள நெருக்கடியான நிலையாகவும் பார்க்கப்படுகின்றது. அதனைச் சீர் செய்வதற்கு மிக முக்கியமான கருவி வாசிப்புப் பழக்கமாகும். வாசிப்பு யாரிடம் ஒரு வழக்கமான செயற்பாடாக உள்ளதோ, அவர்தான் மொழியிலும் சிறந்து விளங்குவார். அவரால் தான் சரியான உபயோகம் எது பிழையான உபயோகம் எது என்பதைப் பிரித்தறிய முடியும். வெறுமனே கேட்பதையும் பார்ப்பதையும் வைத்துக் கொண்டு இதுதான் செம்மொழி என்று மார்தட்டிக் கொள்வதில் எவ்வித நலனும் தமிழுக்குக் கிடைக்கப் போவதில்லை; தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைக்கப்போவதில்லை. தமிழை அறிவதை விடுத்து தமிழைக் கற்கும் முயற்சியிலும் நாம் ஈடுபடவேண்டும். வாசிக்கும் போதோ எழுதும் போதோ பயன்படுத்தப்படுகின்ற உபயோகங்கள் சரியானவையா? பிழையானவையா? என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அச்சந்தர்ப்பங்களில் எழும் சந்தேகங்களை மொழியில் கைதேர்ந்தவர்களிடம் கேட்டறிந்து கற்க வேண்டும்.
தமிழ் மொழியைக் காக்கும் உணர்வின்றித் தமிழன் என்று நாம் பெருமை கொள்வதில் எவ்வித உண்மையும் இருக்கப்போவதில்லை. எம்மொழி செம்மொழி என்றால் எம் மொழி செம்மொழி என்று நெஞ்சை நிமிர்த்திப் பறைசாற்றும் உணர்வும் ஊக்கமும் நம் கைகளிலேயே உள்ளன. அத்தகைய ஒரு சீர்மையை மொழியில் பேணுவதே எம் தாய்மொழி தமிழ் மீது நாம் கொண்ட பற்றுறுதியும் அதனைக் காக்க நாம் செய்யும் முயற்சியும் ஆகும். இதனையே உலக தாய்மொழி நாள் வேண்டி நிற்கின்றது.
“உலகத்திலே அமைதியை ஏற்படுத்த இனி இல்லையென்ற உச்ச ஆயுதம் மொழியாகும்”.
-நொவாம் கொம்ஸ்கி-