இதழ் 20

ஒரு துண்டுப் பலாக்காய் – சிறுகதை

தேயிலைச் செடிகள் பனித்துளிகளில் குளித்து சூரியனின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தன. அருகிலிருந்த பலா மரங்களை அணைத்த வண்ணம் வெற்றிலைக் கொடிகள் குளிருக்கு சூடு தேடின. ரோஜா செடிகளும், துளசிச் செடிகளும் பனியில் குளித்து சில்லென்ற குளிர் காற்றை சுவாசித்து அடக்கத்துடன் புற்களை போர்வையாக்கி ஒழிந்திருந்தன. தேயிலை மலைகள் நான்கு திசைகளிலும் திரைகட்டி கருமையை எங்கும் படரவிட்டிருந்தன. மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிய அருவியின் சலசலப்பு மட்டும் அதிகாலையில் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது.

பசுமையான அந்த பகுதியில் அலங்கோலமாக சில வீடுகள் உடைந்த புகையிரதப் பெட்டிகள் போல உக்கிப்போயிருந்த தகரக் கூரைகளுடன் வளைந்து, உடைந்து, சரிந்து தங்களின் முதுமையை அனைவருக்கும் வெளிக்காட்டிக்கொண்டிருந்தன. அந்த லயங்களின் வாசலில் ஆறாக ஓடிய கழிவு நீர் ஓடை தாங்கமுடியாத நாற்றத்தை அள்ளி வழங்கியது. நீண்ட நேர்கோட்டு வரிசையில் காணப்பட்ட குடியிருப்புகளில் ஆங்காங்கு கறைபடிந்த தகரங்கள் பாதுகாப்பு அரண்களாக வாசல்களை மறைத்திருந்தன. மழைநீரை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த பீலியிலிருந்து பனித்துளிகள் அருகிலிருந்த கறுப்பு நிற பிளாஸ்டிக் பீப்பாய்களில் ‘ச்டக்…ச்டக்…” என மெல்லிய ஓசையில் விழுந்தன. மலைநாடுகளில் இவ்வாறான காட்சிகளுக்கு எப்பொழுதும் குறைவில்லை.

வழமைக்கு மாறாக கந்தசாமி அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி பெரட்டு மணியை அடிக்க ஆரம்பித்தான். இது தோட்டத்து வேலைக்காக அடிக்கப்பட்ட மணி அல்ல. அவனது மனைவியை எழுப்புவதற்கான நாத ஓசை.
‘ புள்ள தேத்தண்ணி ஊத்திட்டியா…? வெரசா கொண்டு வா…”
குழைந்து போயிருந்த தலைமுடியை அள்ளி செருகிய வண்ணம் அவன் மனைவி மீனா

‘ஏய்யா காலங்காத்தால எழும்பி இப்புடி தொணதொணக்குற.. உசுர வாங்குற… அப்புடி எங்கதா போகப் போற…? நாடு கெடக்குற கெடையில வெளியில தலை காட்ட முடியாம கெடக்குது. ஒரு நாளு இல்லாத திருநாளா இண்ணிக்கி என்னவா ஒனக்கு…”

என அதிகாலை சுப்பிரபாதத்துடன் தேனீரை தயாரித்து கந்தசாமியிடம் நீட்டினாள். தேனீர் குடித்து குடித்து கறைபடிந்திருந்த அந்த சில்வர் டம்ளர் அவனுடைய தூக்க களைப்பை நீக்கி உடம்பிற்கு புது உற்சாகத்தை அளித்தது.

அந்த நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இவர்களின் உரையாடல் மட்டும் குளிர் காற்றையும் கிழித்துக்கொண்டு முழங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டது நோர்வூட் போட்ரி தோட்டம். தென்னிந்தியாவிலிருந்து மலையகத் தோட்டப் பகுதிகளில்
இருநூறு வருடங்களை துன்பத்துடன் கழித்த இவ் வம்சாவழி மக்கள் இன்றும் ஒரு நாள் கூலிக்காக சீவியம் நடத்தி வருகின்றனர். இவர்களில் நாற்பது வீதமானவர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் இல்லை என்பது பெருங்குறையாகவே இருந்து வருகின்றது. சுமார் நூற்றி முப்பது குடும்பங்களை கொண்ட அந்த தோட்டத்தில் கந்தசாமியின் குடும்பமும் வறுமையை வரமாக வாங்கிய குடும்பங்களில் ஒன்றுதான். அவன் மனைவி மீனா மட்டுமே தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டுவருகின்றாள்.

கந்தசாமி அடிக்கடி குடித்துவிட்டு தோட்ட வேலைக்கு வருவதால் தோட்ட கம்பனிகள் அவனுக்கு வேலை கொடுக்க மறுத்தன. இதனால் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளையே செய்து பாதி குடிப்பதற்கும் மீதி குடும்பத்திற்கும் என உழைத்து வந்தான் கந்தசாமி. இரண்டு வாரங்களாக தோட்டங்கள் மூடப்பட்டிருந்தன. வீட்டிலிருந்த அரிசி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் அத்தியவசிய பொருட்கள் அனைத்தும் முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. அவனது மூன்று பெண் பிள்ளைகளும் நன்றாக சாப்பிடவில்லை என்ற ஏக்கம் நாடு முடங்கிய நிலையிலும் அவனை முடங்கவிடாது வேலைக்கு போகவே தூண்டியது. அதனால்தான் இன்று விடிந்தும் விடியாமலும் ஊர் அடங்கி ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் தருணத்திலும் எவற்றையும் பொருட்படுத்தாமல் கோடாரியுடனும் கவ்வாத்து கத்தியுடனும் புறப்படுகின்றான் கந்தசாமி.

வீட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி கந்தசாமி டோச் லைட்டுடன், குளிர் சட்டை அணிந்து, தலையில் ஒரு லேஞ்சுத் துண்டையும் கட்டிக் கொண்டு இறங்குகின்றான். அவன் வெளியில் இறங்கி பள்ளத்தில் கால் வைக்கும்போதே ‘அப்பா இண்ணிக்காவது மாவு வாங்கிட்டு வா… ரொட்டி சாப்புடனும் போல இருக்கு… அம்மா அவிச்சித் தாற பலாக்காயே சாப்புட்டு சாப்புட்டு வெறுத்து போவுது…!” என அவனின் இரண்டாவது மகள் ரேணு முணு முணுத்து அவனை வழியனுப்பி வைத்தாள். அந்த ஒற்றையடிப் பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்த புற்கள். பாதையை மூடி பனித்துளிகளால் நனைந்து இருந்தன. கந்தசாமியின் கால்களிலும் புற்களில் விழுந்திருந்த பனித்துளிகள் கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்திருந்தன. கால்கள் நனைந்திருந்ததால் அவன் அணிந்திருந்த செருப்பு ‘க்ரீச்…” ‘க்ரீச்…” என சப்தமிட்டு கால்களை விட்டு வெளியே வந்து வழுக்கிக் கொண்டுச் சென்றன. இருளில் பள்ளத்திற்குள் விழுந்து விடும் அளவிற்கு அவனை மீறி கால்கள் வேகமாக நகர்ந்தன. அது அவனைப் போல அங்கிருக்கும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் பழகி போன ஒரு விடயம். இதைவிட பெரிய துன்பங்களில் மூழ்கிய அவர்களுக்கு குளிர், பனி, இருள் – எந்த உணர்வுகளையும் தருவதில்லை.

மதியம் பன்னிரண்டு மணியைக் கடந்து விட்டது. பக்கத்து லயக் காம்பராக்களில் புகை மண்டி எங்கும் வியாபித்து சமையலுக்கு அனைவரும் தயாராகியதை அந்த புகை மண்டலம் குறிப்பால் உணர்த்தியது. பலாக்காய் அவியலுக்கான குறிப்பு. மீனாவும் அடுப்பில் சுடுநீரை கொதிக்க வைத்துவிட்டு கந்தசாமி ஏதும் கொண்டு வருவான் என்ற எண்ணத்தில் திண்ணையில் அமர்ந்து பள்ளத்திற்கு செல்லும் ஒற்றையடிப் பாதையை தரிசித்தாள். திடீரென ஒரு பதட்டக் குரல் மீனாவை நோக்கி வந்தது. ‘அடியேய் மீனா வெரசா பணிய ஓடியா…! ஓம் புருசன பொலிசுல புடிச்சுக்கிட்டு போயிட்டாங்களாம்டி…”. குரல் வந்த திசைக்கு மிக வேகமாக ஓடினாள், மீனா. பள்ளத்தில் கூட்டமாகத் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கூடி நின்று கந்தசாமியை பற்றி அலசினர். மூச்சுத் திணறலுடன் மீனா அதிர்ச்சியாகி கூட்டத்தையே வெறித்து பார்த்துக்கொண்டு வாயடைத்து மௌனச் சிலையாகினாள்.

‘என்னடி கந்தசாமிக்கு புத்தி கெட்டு போச்சா…? ஒனக்கும் வாய் அடைச்சு போச்சா…? ஊரடங்கு சட்டோ போட்டுறுக்ககுள்ள ஏன்டி வெளிய அனுப்புன…” என தொங்கல் லயக் காம்பராவில் இருக்கின்ற பு~;பா வெற்றிலை எச்சிலை கீழே துப்பிவிட்டு வார்த்தைகளை விதைத்தாள்.

‘அட நீ வேற அக்கா சும்மா கத்தாத…காலையில கந்தசாமி எங்கேயோ பொறப்படுறத பாத்துட்டு நானு சொன்னே… அவே கேக்கள…! ‘பலாக்காய சாப்புட்டு சாப்புட்டு மரத்துல இருந்த காயெல்லா முடிஞ்சிருச்சி. ஏதாச்சு வேலே கெடைக்குமானு பாத்துகிட்டு வாரேன்னு சொல்லிட்டு போனா கந்தசாமி. கொம்பனிகாரங்க நம்பள கணக்கெடுக்கறானுக இல்ல…மந்திரிமாருகளும் வோட்டு கேட்டுதா வாரானுக. புள்ளைங்க என்ன சாப்புடும்… இந்த கொரோனா வைரசு பெரச்சின வந்ததுல இருந்து வேலேயு இல்ல. சமூர்தி ஆளுகளுக்கு சாமான் குடுத்தாங்களாம். நமக்கு குடுக்க சொல்லி இருக்கா… இந்தா ஊரடங்கு சட்டொம் போட்டு ரெண்டு கெழமையாவுது வுண்ணு ஒண்ணத்தையு காணோ…” என ராசையா மூச்சு விடாது கதைத்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் நின்ற முனியாண்டி தாத்தா ராசையாவின் மூச்சுத் திணறலுக்கு விடுதலை கொடுத்து, அவனை பேசவிடாது இடையில் புகுந்து பதிலுக்கு ‘நேத்து கிராம சேவகர் வரசொல்லி போனே… என்னவே லிஸ்டுல பேரில்லனு அனுப்பிட்டானுக… டி.வியில சொல்லுறானுக நிவாரணொ குடுக்குறோ கிராம சேவகரு மூலியமா போயி வாங்குங்கன்னு… என்னவோ துண்டு நெறைச்சி கையெழுத்து போடனுமா… அத பாத்துட்டுதா ஐயாயிரோ காசு குடுப்பானுகளாம்… இவனுக போடுற ரூல்ஸ் எல்லாத்துக்கு தலையாட்டி காத்துக்குட்டு இருந்தா நம்ப பசியோட செத்துபோயிருவோ போல… அதுதா கந்தசாமி ஏதாச்சு தேடிட்டு வரலாம்னு வெளியில போயிட்டா போல…” என்று அங்கலாய்த்தார்.

‘நமக்கு வேலைய போட்டு தந்தா தோட்டத்துலயே ஏதாச்சு செஞ்சுக்கலாம்…ஆயிரம் ரூபா சம்பளத்த கூட்டி தற சொல்லி அதையு செய்யல… ஒரு நாள் கூலியில சந்தா பணம் அம்பது ரூவா படி ஒரு மாச காசையு மொத்தமா வெட்டிட்டானுக… இவனுக வந்து இனி நமக்கு தறப்போற நிவாரணொம் எத்தின நாளைக்கி தாக்கு புடிக்கபோவுதோ… அந்த முனியன் சாமிதா இவுங்கள கேக்கணு…” என்று மீண்டும் ராசையா ஒப்பாரி பாடினான்.

‘அட ஆளாலுக்கு இதை பத்தி கதைச்சுக்குட்டு இருக்கீங்களே கந்தசாமிய இப்போ எப்புடி கூட்டிக்கிட்டு வாறதுணு யோசிங்கப்பா… மீனா நீ என்ன இப்புடி மரம் மாதிரி நிக்கிற…எதுக்கு பயப்புடாத…ஏதாச்சு செய்யலா… அழுவாத…இதெல்லா நாம வாங்கி வந்த வரொம்… பொலிஸ்காரணுக எது சொன்னாலு கேக்கமாட்டனுக… கொரோனா வைரசு பரவுரதால வெளியில வரவே வேணாம்னு சொல்லிபுட்டானுக…காரணோ சொன்னாலு வுடமாட்டேனு அண்ணைக்கே மீட்டிங்ல சொன்னானுகதானே… இவே வேற வேலைக்கு கத்தி, கோடரியோட இல்லியா போயிருக்கா. கந்தசாமி கொஞ்சோ யோசிச்சு நடந்திருக்கலாம்… நாம ஒழைக்க பொறந்த சாதி. நிவாரணொ எத்தின நாளைக்கி வயித்தெ கழுவு? நாட்டுல நெலம நல்லா இருக்குற நேரத்துலயே சம்பள கூட்டி கேட்டு குடுக்கல. நாம அண்ணன்னைக்கி ஒழைச்சு சாப்புடுறோனு யோசிக்கிறானுகளும் இல்ல நம்ப தலைவருமாருக… மந்திரிமாருகளுட்டையு
தொரமாருகளுட்டையு போயி காத்துக்கிட்டு இருக்குற நேரத்துக்கு ஏதாச்சு ஒழைச்சு புள்ளைங்களுக்கு சாப்புட குடுக்கலா…”

என்று புஷ்பா கூறிவிட்டு மலைமேல் ஏறி ஒற்றையடி பாதை வழியாக தன்னுடைய காம்பிராவிற்கு சென்றாள். பக்கத்தில் நின்றவர்களும் தங்களின் வயிற்றுப் பசிக்குத் தீர்வு எப்பொழுது கிடைக்கும் என்ற வேதனையிலும் கொரோனா வைரசிலிருந்து விடுதலை பெற்று எப்போது உழைத்து சாப்பிட போகிறோம் என்;ற எதிர்பார்ப்பிலும் தவித்துக்கொண்டு களைந்தனர்.

ஊரடங்குச் சட்டம் என்பதாலும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாலும் இலங்கையின் பல பாகங்களிலும் வைரசின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அரசாங்கம் பல சட்ட நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் எடுத்திருந்தது. இதனால் சமூக இடைவெளி, வீட்டிற்குள் முடக்கம், ஊரடங்குச் சட்டம் என நாடு சட்டத்திற்குள் அமைதியடைந்து போயிருக்கின்ற அசாதாரண நிலையில் கந்தசாமி என்னும் தோட்டத் தொழிலாளி வயிற்று பசிக்காக சட்டத்தை மீறி செயற்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டான். மீனாவின் வறுமைக்கு ஆறுதல் கூற முடிந்ததே தவிர ஆதரவு வழங்க முடியாத வறுமை சுமையில் அந்த நோர்வூட் போட்ரி மக்களும் தங்களது காம்பராக்களுக்குள் சென்று முடங்கினர்.

சனக்கூட்டம் களைந்து சென்றும் ‘கணவனை மீட்டெடுக்கமுடியாதா…?” என்னும் ஏக்கத்துடன் கண்ணீருடன் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா. அவளுடைய எண்ணம் எல்லாம் கந்தசாமி வந்தால் போதும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்தது. ஏக்க பெருமூச்சுடன் அவள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது

‘அம்மா…! இந்தாம்மா… புஷ்பா மாமி கொடுத்துச்சு ஒருத் துண்டு பலாக்கா…”

என மீனாவின் சிறிய மகள் ரேணு வாடிய முகத்துடன் காலையில் குடித்த வெறும் தேநீருடன் பாலாக்காய் துண்டை ஏந்தி தன்னுடைய பசியை முக பாவத்தில் வெளிப்படுத்தினாள். மீனாவிற்கு அந்த ஒரு துண்டுப் பலாக்காய் ஆயிரம் அர்த்தங்களை சொன்னது.


(முற்றும்)

Related posts

பெண்கள் ( கண்ணம்மாக்கள் )

Thumi2021

திரைத்தமிழ் – 36 வயதினிலே

Thumi2021

ஈழச் சூழலியல் – 07

Thumi2021

Leave a Comment