இன்றும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறார்கள் சில கண்ணம்மாக்கள்
சிமிட்டும் கண்களின் ரசனையில்
சிரிப்பின் சத்தமும் சிறிதாக குழைத்து
சித்திரமாய் வண்ண நடை நடந்து
சிங்கார கிறுக்கல்களில் குழந்தையாக..
வரமான பேரின்புகளின் சாயல்களாய்
தரமான தென்றல்களின் கீதங்களாய்
நேசமான மொழிகளின் ஸ்பரிசங்களாய்
பாசமான தளிர்களில் நம் தாயாகவே..
கோபத்திலும் சலனமற்றவள் போல
சோகத்திலும் சிதறலற்றவள் போல
தாகத்திலும் பதற்றமற்றவள் போல
நாட்களை கடத்தும் உடன்பிறந்தவளாக..
எம் நோய்க்கு துடிக்கும் தருணங்களாயும்
நம் வாய்க்கு இனிய நல் உணவுகளாக
எம் வார்த்தைக்கு நல் வருகைகளாக
நம் மனதோடு இணைந்த நற் தாரமாக..
கண்ணம்மாக்களுக்கான காத்திரமான
பாத்திரமாய் பாரதிகளின் சாயல்கள் இருக்கும் வரையிலே – இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் கண்ணம்மாக்கள்..
வஞ்கசமில்லா பார்வைகளாய்
வலியில்லா நேசங்களாய்
வதைசெய்யா வார்த்தைகளாய்
வயதில் சிறிய தங்கைகளாய்
ஏராளமான இன்பங்களாய்
எதிர்பார்த்த இச்சைகளாய்
எல்லையில்லா இரக்கங்களாய்
என்தன்பு இம்சைகளாய்
கண்ணசைவின் காவியமாய்
கதை சொல்லும் கவிதைகளாய்
கனவுகளின் சொற்பதமாய்
கனக்கும் அழகு பெண்களாய்…
கவிக்கு கரு கொடுத்து – என்
கற்பனைக்கு உரு கொடுத்து
கனமான என் காதலாய் என்
கவி வரிகளிலும் உயிராய் நீயேயடி கண்ணம்மா…
ஆம்! இன்றும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
சில கண்ணம்மாக்கள்!!!
-ப்ரியா காசிநாதன்-
யாழ்ப்பாணம்