இதழ் 20

வழுக்கியாறு – 14

நெற் பயிர்ச்செய்கை (Oryza sativa )

நெல்லானது இப் பகுதியில் மாரிகாலத்தில் பெரும்போகப் பயிராக செய்கை பண்ணப்படுகின்றது. மாரிகாலங்களில் தாழ்நில வயல் பிரதேசமானது முழுமையாக வெள்ள நீரினால் மூடி உள்ள போதும் வெள்ள நீர்க்கதவுகளின் உதவியினால் வெள்ளமானது உயர்ந்தபட்சமாக 60-90cm  உயரம் வரையே காணப்படுவதனால் இந் நிலமை நெற் செய்கைக்கு பொருத்தமானதாக காணப்படுகின்றது. ஜப்பசி தொடக்கம் தை வரையான காலமானது வருடத்தின் 90%  மழை வீழ்ச்சியை வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றும் வங்கக்கடலில் நிகழும் தாழமுக்க சூறாவளியும் கொடுக்கின்றன. இம் மழை வெள்ளமானது நெற் செய்கைக்கு பெரும்பாலான நேரங்களில் போதியதாக இருப்பதுடன் சில வேளைகளில் மழை வீழ்ச்சி குறைவான வறண்ட நேரங்களில் குளங்கள், கிணறுகளில் இருந்து இயந்திரங்கள் மூலமாக நீர் பாச்சப்படுகின்றது.

விவசாயிகள் ஆட்டக்காரிஇ மொட்டைகறுப்பன் போன்ற சுதேச நெல் வர்க்கங்களையும் மேம்படுத்தப்பட்ட நெல் இனங்களான BG304, BG352, At402, BG406 போன்றவற்றையும் பொதுவாக விதைப்பிற்கு பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் அதிகளவில் விவசாய இரசாயனங்களான இரசாயனப் பசளைகள்இ கிருமிநாசினிகள்இ களைநாசினிகள் என்பவற்றை பயன் படுத்துவதுடன் அவ்வப்போது இயற்கை சேதனப் பசளைகளான மாட்டெரு, ஆட்டெரு, கோழிஎரு, கூட்டெரு மற்றும் பசுந்தாள் பசளை என்பவற்றையும் பயன் படுத்துகின்றனர். நெல் உமிகளும் வைக்கோலும் எரிக்கப்பட்டு நிலங்கள் தொற்று நீக்கப்படுவதுடன் சாம்பலானது பசளையாக பயன்படுகின்றது.

பெரும்பாலான நெற்செய்கையாளர்கள் அறுவடைக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நெல் அருவி வெட்டும் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைந்தளவிலான விவசாயிகள் இன்னமும் பாரம்பரியமான முறையில் நெல் அறுவடையை மேற் கொள்கின்றனர். இதற்காக கூலித்தொழிலாளர்கள் பயன் படுத்தப்படுவதுடன் சூடு மிதிப்பதற்காக காளை மாடுகள் அல்லது நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய முறையிலான நெல் அறுவடைக்கு செலவு அதிகம் என்பதனால் தாம் இயந்திர அறுவடையை பெரிதும் விரும்புவதாக விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர் ஒருங்கிணைக்கப்பட்ட நெல் அருவிவெட்டும் இயந்திரம் மூலமான அறுவடைக்கு ஏக்கர் ஒன்றிற்கு 12000 ரூபாய் வரை செலவாவதாகவும் அதேவேளை பாரம்பரிய முறையிலான நெல் அறுவடைக்கு ஏக்கர் ஓன்றிற்கு 24000 ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் போதும் அறுவடையின் போதும் விவசாயிகள் பல்வேறு வழிபாட்டு முறைகளை விளைநிலங்களில் மேற்கொள்கின்றனர். அத்துடன் நெல் அறுவடையின் பின் பெறப்பட்ட விளைச்சலின் ஒரு பகுதியை விவசாயிகள் தாம் பாரம்பரியமாக வழிபட்டு வரும் பிரதேச கோயில்களுக்கு ஒதுக்குவதுடன் அறுவடையின் பின் பொங்கலும் செய்கின்றனர் ஏனெனில் அவர்களது காணிகளில் விளையும் விளைச்சல் கடவுளின் ஆசியால் நடைபெறுவதாகவும் அதற்கான நன்றியாக அவ் விளைச்சலின் ஒரு பகுதியை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறுகின்றனர். அத்துடன் அதன் இன்னெரு பகுதியை தமது நிலங்களில் வேலை செய்த வேலையாட்களுக்கு அவர்களது நாட் கூலிக்கு மேலதிகமாக பகிர்ந்தளிக்கின்றனர். இது புராதன காலம் முதல் இப்பகுதி விவசாய குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “களத்துநெல்” வழங்கல் என்று அழைக்கப்படுகின்றது. இன்றைய காலங்களில் இயந்திரம் மூலமாக பெரும்பாலான விவசாய வேலைகள் இடம்பெறுவதனால் இவ் வழமை சிறிது சிறிதாக அருகி வருவது குறிப்பிடத்தக்கது.

வைக்கோலானது கால்நடை தீவனமாக பயன்படுகின்றது இதற்கென வைக்கோல் பட்டடை என்ற அமைப்பில் வைக்கோல் குவிக்கப்பட்டு கால்நடைகளின் எதிர்கால உணவுத் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

(ஆறு ஓடும்)

Related posts

ஈழச் சூழலியல் – 07

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 17

Thumi2021

அவளும் புதுமைதான்!!!

Thumi2021

Leave a Comment