இதழ் 21

இறையாண்மை – 02

இறையாண்மையின் வரலாறும் வரையறையும்

ஆங்கிலத்தில் ”Soveignity”என்று குறிப்பிடப்படும் சொல் ”Supreme Powers” உச்ச இறையாண்மை அதிகாரம் என்று பொருள் படும். ஒரு நாட்டின் அரசுக்கு அந்நாட்டின் மீதுள்ள முழுமுதல் அதிகாரம் என்பது இதன் பொருள். நாட்டின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான இறையாண்மை மிகவும் சிக்கலான ஒரு சொல் ஆகும்.

பிரெஞ்சு எழுத்தாளரான ஜீன் போதின் (Jean Bodin) தமது The Six Books of the Republic (1576) என்ற நூலில் இந்த சொல்லை முதன்முதல் பயன்படுத்தினார்.

தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக் போன்ற ஆங்கிலேய அரசியல் அறிவியலாளர்கள், ‘நாடு எவ்விதம் தோன்றியது?’, ‘அரசு வந்தவிதம் என்ன?’ என்பது குறித்துப் பேசும் போது ‘சமுதாய ஒப்பந்தம்’ (Social Contract) பற்றிப் பேசினார்கள்.

தொடக்க கால இயற்கை நிலையில் மக்களுக்குத் தோன்றிய பிரச்சினைகளும், அதைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை எட்டி, ஓர் அரசைப் படைத்துக் கொண்டமையும் பற்றிப் பேசினார்கள்.

மூன்றாவதாக சமுதாய ஒப்பந்தம் பேசியவர் பிரெஞ்சு சிந்தனையாளர் ரூசோ. ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஏனைய இருவரிடமிருந்து மாறுபட்டது.

முழுமையான இறையாண்மையை (Absolute Sovereignty) மன்னனுக்கு உரித்தானதாகக் காட்டிய தாமஸ் ஹாப்ஸிடமிருந்தும், ”அரசை சமூகமே உருவாக்கியது, ஆகவே அரசை எதிர்த்து மக்கள் புரட்சி செய்யலாம்” என்றுகூறி அரசையும், சமூகத்தையும் இறையாண்மை உடையவையாகக் காட்டிய ஜான் லாக்கிடமிருந்தும் மாறுபட்ட சிந்தனையை அளித்தார்.

ஆரம்ப காலத்தில் மக்கள் உன்னதக் காட்டுமிராண்டிகள் (Noble Savages) கால ஓட்டத்தில் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தான சூழல் உருவானது; ஆகவே மக்கள் சமூகம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது அதன்படி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை சமூகத்திடம் ஒப்படைத்தனர் ஓர் அரசியல் சமூகம் உருவானது.

அந்த சமூகத்தின் பொது விருப்பம் (Social Contract) இறையாண்மை உடையது. அந்த ‘பொது விருப்பம்’ என்பது தனிமனிதர்களின் விருப்பமும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் விருப்பமும் ஆகும். அது பெரும்பான்மையானவர் விருப்பம் அல்ல. அது பொது நலன் நாடும் விருப்பம் ஆகும். அதுவே ஒவ்வொருவரின் உண்மையான விருப்பம் என்று ரூசோ கூறினார்.

பொது விருப்பமே, ஒரு நிர்வாக எந்திரத்தை, அரசைப் படைத்தது. அரசு என்பது பொது விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நிர்வாகக் கருவிதான். அது இறையாண்மை உள்ள மக்களால் உருவாக்கப்படுகிறது. அரசு என்ற முகவரை (Agent) மக்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்று ரூசோ கூறினார்.

சட்டங்கள் என்பவை பொது விருப்பத்தின் வெளிப்பாடுகளே. ரூசோ இவ்விதம் மக்களின் இறையாண்மையயை (Popular Sovereignty) உயர்த்திப் பிடித்தார்.

ரூசோவின் சிந்தனைகள் பிரெஞ்சுப் புரட்சியையும், அமெரிக்க விடுதலைப் போரையும் உந்தி உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன.

பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பா முழுவதும் ‘தேசிய’ உணர்ச்சியை பல்வேறு மக்களிடம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து விடுபட்டு தேசங்கள் எழுந்தன. ரூசோ பேசிய மக்களின் இறையாண்மை தேசங்களுக்கான இறையாண்மையாகவே இருந்தது. ஒவ்வொரு மக்களும் பிரதிநிதிகள் மூலமாக அன்றி, நேரடியாகவே தங்களை ஆண்டுகொள்ள வேண்டும் என்று கருத்தறிவித்தார். மக்களுடைய இறையாண்மையை வேறொரு அமைப்பு பெறமுடியாது என்பது அவரது எண்ணம்.

ஐரோப்பாவில் ரூசோவின் சிந்தனைகள் ‘தேசிய இறையாண்மை’ (National Sovereignty) என்ற கோட்பாட்டு வடிவத்தைப் பெற்றது.

ஒவ்வொரு தேசிய இனமும் தன் இறையாண்மையைத் தானே கொண்டிருக்கிறது. ரூசோவின் ‘பொது விருப்பம்’ கோட்பாடு, ஒரே மொழி, ஒரே தேசிய இனம், குறுகிய பரப்பு, மக்களே நேரடியாக அரசில் பங்கு பெறுதல் ஆகியவற்றுக்குச் சார்பாக இருந்தமையால், அது தேசங்களின் இறையாண்மை கருத்தாக்கத்துக்கு ஆதரவாக இருந்தது.

தேசிய இறையாண்மை (National Sovereignty) என்பது ஒரு கூட்டு இறையாண்மை (Collective Sovereignty) ஆகும்.

ஒவ்வொரு மனிதனும் இறையாண்மை உள்ளவன் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மீது, தன் உடல் மீது முழு உரிமை இருக்கிறது. இது ஆள் உரிமை அல்லது ஆளுடைமை உரிமை (Personal Liberty) என்று கூறப்படுகிறது.

தான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதுவே மனிதனின் “Self determination” உரிமை ஆகும். இது தனிமனிதனின் இறையாண்மையைக் குறிக்கிறது.

ஒரு தேசிய இனம் என்பது ஒரு பெரிய விரிவாக்கப்பட்ட மனித உரு (Expanded Self) போன்றது. ஓரினத்தின் இறையாண்மை (National Sovereignty) என்பது ஒரு கூட்டு இறையாண்மை ஆகும். தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது என்பது அந்த இனத்தின் ஒவ்வொரு மனிதனின் இறையாண்மையை மறுப்பது ஆகும்.
இது ஜனநாயகத்தின் சாரத்தையே மறுப்பது ஆகும்.

ஒரு தனிமனிதனுக்கு தன் தீர்மானிக்கும் உரிமை அல்லது சுயநிர்ணய உரிமை ( Self-Determination) உண்டு என்றால், அதே உரிமை அந்த தேசிய இனத்துக்கும் உண்டு. இதை உலகப் பிரகடனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

தேசிய இறையாண்மை (National Sovereignty) என்ற சொல் முதன் முதலாக பிரெஞ்சுப் புரட்சியின் போது வெளியிடப்பட்ட ”மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனத்தில்” (Declaration of the Rights of Man and Citizen) தான் பயன்படுத்தப்பட்டது.

தேசிய இறையாண்மையும், மக்கள் இறையாண்மையும் (Popular sovereignty) ஒன்றல்ல.

தேசிய இன மக்களிடம் இறையாண்மை சிதறிப்பரவிக் கிடக்கிறது என்பது பொருள் அல்ல. அதற்கு மாறாக ‘ஒரு மக்கள்’ அனைவரையும் ஒட்டு மொத்தமாக உருவகிக்கிற தேசிய இனத்திடம் இறையாண்மை முழுமையாகத் தங்கியிருக்கிறது என்று பொருள்.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த இறையாண்மை என்றால் என்ன எனும் கட்டுரையினை தழுவி இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

திரைத்தமிழ் – காப்பான்

Thumi2021

வேர் சிகிச்சை [Root Canal Filling]

Thumi2021

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

Leave a Comment