இதழ் 21

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

நான் வைத்த பலா கன்றோ, மா மரமோ எனக்கு கனி தரப்போவதில்லை என்று தெரிந்தும் எம்முன்னோர்கள் பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்து விட்டுச் சென்றுள்ளார்கள். நாங்கள் என்ன செய்கின்றோம்? அடுத்த தலைமுறைக்கு எவற்றை விட்டுச்செல்லப்போகிறோம்? அவற்றுள் முக்கியமான ஒன்று போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்றால் என்ன? 15 வருடங்களுக்கு முதல் கேள்விப்படாத பெயர். 10 வருடங்களுக்கு முன் ஆடம்பரச்செலவு. இன்று அத்தியாவசியச்செலவு.

கிணறுகள் வற்றுகிறதென்று மேலும் ஊற்றுக்களை ஆழமாக்குகிறோம். கிணறுகள் வற்றுவது நிலத்தடி நீர் குறைந்து கொண்டு போவதன் குணங்குறி என்று சொல்லிக்கொடுங்கள். அடி மட்டும் உறிஞ்சி எடுத்துவிட்டால் அடுத்த தலைமுறை என்ன செய்யும் என்று யோசியுங்கள். மண்ணால், கற்களால் இயற்கையாகவே வடிக்கப்பட்டு நிலத்தடியில் கிடந்த தண்ணீர் சுத்தத்திலும் சுத்தம். அதை வீண்விரயமாக்கி விட்டு இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கத்தொடங்கிவிட்டோம்.

கடலில் இருந்து வானம் வாரி எடுத்து மண் நிறைய மழையாய் தந்ததை மண்ணுக்குள் அனுப்பாமல் கடலுக்குள் அனுப்பி விட்டு, கனரக இயந்திரங்கள் மூலம் கடல் நீரை சுத்திகரிக்கப்போகிறோம். மழை நீரை வீடுகள் தோறும், வீதிகள் தோறும் சேமித்திருந்தால் பயிர்களுக்கும், பிற தேவைகளுக்கும் போதுமென்றளவுக்கு பயன்படுத்தியிருக்கலாமே? ஒரு துளி மழைநீரையும் கடலோடு கலக்கவிடாத பராக்கிரம பாகு மன்னனின் வரலாற்றை சிறு வயதிலேயே சொல்லிக்கொடுப்பது மன்னனைப்பற்றி அறிய மட்டுமல்ல, முக்கியமாக மழை நீரின் மகத்துவத்தை அறிய வைப்பதற்கே என்பதை உணரத்தொடங்குங்கள். பூமிப்பந்தில் நீரின் அளவு கூட பனிக்கட்டி உருகுவது மட்டும் காரணமல்ல. நிலத்திற்குள் இருந்த நீர் நிலத்திற்கு மேல் வந்துவிட்டது. கழிவு நீராக, கடல்நீராக அது கலந்து விட்டது.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் 10 வருடங்களில் போத்தல்களில் அடைக்கப்பட்ட காற்றும் விற்பனைக்கு வரலாம். கவனமாக இருங்கள். இலவசமாக இலகுவாக இயற்கையாக கிடைத்தவற்றை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம். 20 வருடங்களுக்கு முதல் தண்ணீர்ப்போத்தலும் பால் போத்தலும் ஒரே விலைக்கு விற்கும் என்று சொல்லியிருந்தால் பைத்தியக்காரனாக பார்த்திருப்பார்கள். இன்று அதே விலைக்கு வாங்கிக்கொண்டு இருக்கிறோம்.

குடிநீரின் அருமை பெருமைகளை பேசுவதற்காகவும், எழுதுவதற்காகவும் தானா இந்த குடிநீர்தினம் மார்ச் 22 சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது? திண்டாட்டத்தில் உள்ள குடிநீரின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்து, காலம் உள்ள வரை கடைசித்தலைமுறைக்கும் அதை கிடைக்கச்செய்ய உறுதி கொள்ள வேண்டும்.

ஆக, தண்ணீர் விசயத்தில் வடிகட்டிய கஞ்சனாக இருங்கள்!

தப்பேயில்லை!

Related posts

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும்

Thumi2021

சத்தமில்லா ச(காப்)தம்

Thumi2021

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

Leave a Comment