அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட, திகட்ட காதலி.
காதலித்து கெட்டுப் போ.
- நா. முத்துக்குமார்-
கவிதை ஒரு தேடல்.
*
வாசிப்பு எப்போதும் சிந்தனையின் பல ஜன்னல்களை திறந்து விடும். இவன் வாசிப்பை ஆரம்பித்தது சுஜாதாவிடமிருந்து தான். அவரிடம் இருந்து தான் இவனுடைய வாசிப்பும் விரிவடைந்தது. குறிப்பாக கடவுள், அண்டம், குவாண்டம் இயற்பியல், சமூகநீதி, பொதுவுடமை , அரசியல் என்ற அனைத்திலும் இவன் சிந்தனையை கிளறி விட்டு தேட வைத்த பெருமை ரங்கராஜனுக்கே.
“நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”
நல்லூர்த்திருவிழாவில் வாங்கிய சுஜாதாவின் ‘கடவுள்’ என்ற புத்தகத்தில் அவர் எதையோ விளக்குவதற்காக ஸ்டீபன் ஹாங்கிங்ஸின் Black holes and baby universe and other essays , The brief history of time என்ற இரு புத்தகங்களின் பெயர்களை ஆதாரமாக குறிப்பிட்டிருந்தார். அந்த சிராய்ப்பிலிருந்து தான் ஸ்டீபன் மீதும் அண்டவியல், குவாண்டம் இயற்பியல் மீதும் காதலாகவும் கடவுள் இருக்கிறாரா? இருந்தால் எங்கே என்ற கேள்வியாகவும் மாறியது.
“கடவுள் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்”
தேடலின் தொடர்ச்சி செயற்பாடற்று கிடந்த நரம்பிணைப்புகளுக்கெல்லாம் இரசாயன மின்சாரம் பாய்ச்சி ஒவ்வொரு நரம்பிணைப்பு குமிழையும் ஒளிரச்செய்தது.
//இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே//
இங்கே ஒன்றுமே இருக்கவில்லை. இடம் இருக்கவில்லை. நேரம் இருக்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு ஒற்றை அடர் திணிவு இருந்ததாம். பௌதிக இரசாயன மாற்றங்களினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதுவாகவே வெடித்தது. பெருவெடிப்பு என்று பெயர். வெடிப்பின் போது வெளிவிடப்பட்ட சக்தியை கொண்டு அது விரைவாக விரிந்தது. பிரபஞ்சம் உருவானது. இடம் பிறந்தது. நேரம் பிறந்தது. இப்பொழுது இடமும் நேரமும் இருக்கிறது ஆனால் இல்லை. இல்லாததிலிருந்து வந்தது இல்லை தானே! பிரபஞ்சம் இன்னும் இன்னும் விரிகிறது. அந்த ஒற்றைப்புள்ளிக்கு முன்னால் என்ன இருந்தது என்று விஞ்ஞானம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது.
//தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே//
மூளையின் நரம்பு கலங்களில் மைனஸ் எழுபது மில்லி வோல்ட் ஓய்வு அழுத்தத்திலிருந்து பிளஸ் நாற்பது மில்லி வோல்ட் தாக்க அழுத்தம் பிறக்க பிறக்க மயலின் கணுக்கள் வழியே தாவிக்குதித்து ஓடிய கணத்தாக்கு, கடவுள் இல்லை – கடவுள் பொய் – உலகம் மாயை என்று சொன்னது.
“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது”
கடவுள் ஒரு தேடல்.
*
நான் என்பது என்னுடைய ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற இந்த வரையறைகளினால் தான் அடையாளப்படுத்தப்படும் என்றால், மன்னித்துவிடுங்கள். இவை அனைத்தும் என்னை கருவாக்கிய விந்தும் முட்டையும் பிறக்க முதலே உருவான கட்டமைப்புக்கள். இந்த சட்டகத்தினுள் சுருங்கிக்கொண்டவன் நான் இல்லை.
“நீ என்பது உடலா உயிரா பெயரா
நீ என்பது செயல்”
இது வைரமுத்து சொன்னது. இதில் தவறு இருக்கிறது. உண்மையில் நான் என்பது என் சிந்தனை. என்னை சூழ்ந்த செயல்கள் அனைத்துமே என் சிந்தனைக்கு கட்டுப்பட்டதல்ல. ஆனால் என் சிந்தனை எனக்கு தனித்துவமானது. அதன் விரிவுக்கு இங்கே ஏற்கனவே போட்டு வைத்த வேலிகள் முட்டுப்போட்டாலும், என் சிந்தனை எனக்கு மட்டுமே உரியது. இந்த பிரபஞ்சத்தின் ஒளி அது. என் உடலும் இந்த அண்டமும் ஒரே பதார்த்தங்களின் வேறுபட்ட சேர்க்கைகளினாலானவை. இந்த உடல் பிரபஞ்சத்தின் ஒரு துகள். சிந்தனை எனும் நான் இந்த பிரபஞ்சத்தின் அதிர்வு.
“அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே”
ஒற்றுமே இல்லாத இடத்தில் இருந்து பிறந்த அண்டத்தில் இயங்கும் ஒன்றுமே இல்லாதவன் நான். எங்குமே நிறைந்தவன். நான் என்ற என் சிந்தனைக்கு கட்டுத்தறி இல்லை. அது பிரபஞ்ச வெளியெங்கும் இன்னிசை படிக்கும்; மெல்லிசையாய் மிதக்கும். நான் கடவுள்.
//உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலைபாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே
நம் அவசியமானது//
“நான்” என்பது ஒரு தேடல்.
*
கம்பியூட்டரில் ஏதோ வேலையில் பிஸியாக இயங்கிக்கொண்டிருப்பீர்கள். ஹெட்செட்டில் பாடல் அதுவாக பாடிக்கொண்டிருக்கிறது. உங்கள் சிந்தனை எல்லாம் வேலையில் குவிந்திருக்கிறது. அந்த நிலையில்,
ஏதோ ஒரு பாடல். நீங்கள் முன்னர் கேட்டதாகவே இருக்கும். அப்பொழுது தான் நீங்கள் முதன்முறையாக கேட்பதாக தோன்றும். ஏற்கனவே கேட்டிருந்தாலும் அணு அணுவாக அதன் அங்கதச்சுவையை ரசித்திருக்க மாட்டீர்கள். இசையின் ஏற்ற இறக்கங்களில் மூழ்கி குளித்து ஆனந்த நடனம் ஆடியிருக்கமாட்டீர்கள்.வரிகளில் வார்த்தைகள் காட்டும் ஜாலத்தில் தொலைந்திருக்க மாட்டீர்கள். உள்ளங்காலில் இருந்து உச்சம் தலை வரை பரவும் ரசனை மின்சாரத்தில் சிலிர்த்திருக்க மாட்டீர்கள். திடீரென்று அது உங்களை ஆழ்ந்த துயிலில் இருந்து தட்டி எழுப்பும்.
//இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை//
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை!
வளியில் நெருக்கமும் ஐதாக்கமும் நடப்பதால் தான் ஒலியலை பயணம் செய்கின்றது. ஒலி நெட்டாங்கு அலை. பயணம் செய்ய ஊடகம் தேவை. வளி என்ற ஊடகம் இல்லை என்றால் இந்த பாட்டு கேட்காது. கவிஞன்! விண் வெளியில் பாடல் கேட்காது.
//கண்ணில்லை என்றாலோ
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது//
ஒலியை பற்றி எழுதிய கவிஞன் ஒளியை பற்றியும் எழுதியிருக்கிறான். அனைத்து பொருட்களிலும் பட்டு தெறித்து கண்வில்லையில் முறிவடைந்து விழித்திரையில் விம்பத்தை தருவிக்கும் ஒளி, கண்ணில் பட்டு தெறித்து அதேகண்வில்லையில் முறிவடையும் சாத்தியப்பாடுகள் இல்லை. தத்துவம்.
//ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே//
இதே போல, நீங்கள் எதார்த்தமாக இயங்கிக்கொண்டிருக்கும் போது, எந்த தேவையுமின்றி கண்கள் ஒரு பக்கமாக திரும்புகிறது. அது திருவிழாவோ மணவிழாவோ இல்லை தெருவோரமாக கூட இருக்கலாம். பார்த்து பழகிய பெண் தான். ஆனால் அன்று புதிதாக தெரிகிறாள். அழகாக தெரிகிறாள். கண்கள் விரியும். நெஞ்சத்தின் சாளரம் வழி சந்தோஷ சாரல் மனம் நனைக்கும். கவிதைகள் தளிர்க்கின்றன.
“பெயல் நீத்த வானம்
புனல் போர்த்த ஞாலம்
தையல் ஓர விழிப்பார்வை
மையல் கொள்ள வைக்கும் போதை
சாளர மேகம் தூவுது கவிச்சாரல்
தமிழ் சாஹரம் நீந்த நான் காதல் அரங்கில்”
ரசனை ஒரு தேடல்.
*
அவள் இவனை அடிக்கடி ஆச்சரியப்பட வைப்பாள். அழகிலும் அவள் மழலையிலும் கிறங்கிப்போயிருக்கும் இவனை தன் கருத்துக்களால் தாண்டி சிந்தனை வீச்சில், அட! இப்படி நான் சிந்திக்கவில்லையே என்று செல்லமாய் குட்டி தன்னை ரசிக்க வைப்பாள். அவள் அழகு தாண்டி, மனிதத்தின் நுண்ணறிவை அவள் கையாளும் நேர்த்தியில் இவன் சொக்கிப் போய் “தன்னவள்” என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறான். இது பொன்சங்கிலியாய் நீளும் வியப்புக்குறி!
//கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான்
கற்பனை வளர்ந்து விடும்//
அவள் அழகில் கிறங்கி கவியில் மயங்கி வீழ்ந்தவன் தான். அவள் அறிவியல் வீச்சு அறியாமல் அழகியல் கீச்சின் அழைப்பிலே தன்னை தொலைத்தவன் தான்.
“சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்”
இன்றோ அவள் செய்கைகளின் சேட்டைகளையும் தன்னை புலம்ப வைத்து மழலை மொழி பேசி கண்களால் வாள் வீசி இமைகளால் கவி எழுதி ஆட்சி செய்யும் சர்வாதிகாரத்தையும் அது கொடுக்கும் உம்மத்தமும் தாண்டி, அவள் சிந்திக்கும் அழகை ரசித்து ரசித்து காதலில் தொலைத்து போகிறான்.
மருவ மருவ பருவக்காதல் பெருக்கெடுக்கும். பெருக பெருக பருவக்காதல் மடை உடைக்கும்.
//குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா//
இப்படி அவளிடம் தேடி தேடி ரசித்து உருகிய இவனிடம் அவள் கோபம். காதல் போர் தான். இவன் மேல் அதிகாரம் செலுத்தும் சர்வாதிகாரி அவள். இப்பொழுது பேச மாட்டேன் என்கிறாள்.
“ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்”
தவிக்கிறான். தகிக்கிறான்.மனம் வெந்து உடல் வெம்பி விழி நீரும் அனலாகி ஆவியாகிறது.
“காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே”
காதல் ஒரு தேடல்.
*
நீ எதை தேடிக்கொண்டிருக்கிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது.
தேடலே வாழ்வின் தனிப்பெரும் துணை!