இதழ் 22

நான் ஒரு முட்டாளுங்க!

‘யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே’

பெரியாரின்ர இந்த கருத்தை பற்றி என்னண்ணை நினைக்கிறியள்?

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.”

எண்டொரு குறள் இருக்கு. அதை தான் அவரும் சொல்லுறார். உனக்கு விளங்குமாப்போல சொல்லோணு எண்டா,

“கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்”

இப்பிடி பாட்டு படிச்சு படிச்சே இந்தா வாறன் அந்தா வாறனெண்டு நல்லா பேக்காட்டினாரே உங்கட ஆள்! அதை சொல்லுறார்.

அண்ணை! சும்மா கொழுவலுக்கு கதைக்காதேங்கோ! இந்த கொரொனா வந்து குழப்பிவிட்டுட்டு.

இல்லாட்டி மட்டும் வந்து அறுத்து தள்ளியிருப்பராக்கும்! சும்மா கிடவடாப்பா பனிக்கதை கதைக்காம.

ஃபேஸ்புக்ல வாறதுகளை படிச்சிட்டு நீங்களும் கதைக்கிறியளே அண்ணை?

“ஒரு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்”

பிறகு,

“கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு”

பிறகு, பிரச்சாரமே செய்தார். ஒண்டிரண்டு வரியம் போக, பேப்பர்க்காரன் எப்ப வாறியளெண்டு கேட்டாலும், கைய மேல தூக்கிப்போட்டு நைசா கழண்டிடுவார்.

//எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே//

உங்களுக்கு தெரியும் தானே! கிட்னி ஒப்பரேசன் செய்தால் இமியுனோ சப்ரெஸிப் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பினம். அவங்கட இமியுனிட்டி நோர்மல் ஆட்களிலும் பார்க்க குறைவு. கொ….

இங்கன ஒரு பழமொழி இருக்கடா! கேட்கிறவன் கேனையனெண்டா கேப்பையில நெய் வடியுமெண்டு. அது தான் எனக்கு ஞாபகம் வருது.

அண்ணை….

தம்பி ராசா! முட்டாள் எண்டா என்னெண்டு தெரியுமோ?

ம்… ம்… ம்..

என்னடா மூஞ்சை சுருங்கிப்போச்சு! சும்மா சொல்லன்ரா!

ஓம்! சிந்திக்கிற ஆற்றல் குறைஞ்ச ஆட்கள்.

அந்த பேர் வந்ததுக்கு ஒரு காரணமிருக்கு தெரியுமோ?

இல்லையே!

ம். கேள். கோயில்ல தேர் இழுக்கேக்க,
வடத்தை பிடிச்சு தேரை இழுத்தா அது நேராத்தான் போகும். ஆனா அந்த தேரை சிலோ பண்ண, திருப்ப, நிப்பாட்ட எண்டு இரண்டு பேர் கையில பெரிய கட்டையோட தேருக்கு பக்கத்தில வருவினம் கண்டிருக்கிறியோ?

ஓம் அண்ணா! சறுக்கா கட்டை தானே அது.

ஓம் ஓம், அது தான். தேரை திருப்ப வேண்டிய நேரத்தில இல்லாட்டி சிலோ பண்ணோணுமெண்டா ரெண்டு பேரும் தேரின்ர ரண்டு முன் சில்லுக்கு முன்னால அந்த கட்டைய போட்டு தடுப்பினம் தானே!

ஓ.

அந்த சறுக்காகட்டை போடுற ஆட்களுக்கு பேர் தான் “முட்டாள்”.

ஓடி வாற தேருக்கு முட்டு கொடுக்கிற ஆள் எண்டதால முட்டாள் எண்டு வந்ததோ அண்ணை!

அட! பொயின்ரை பிடிச்சிட்டாய்? அதே தான். மரங்கள் சரிஞ்சால் அதை விழாமல் மிண்டு குடுப்பமே. அதே மாரித்தான், ஒண்டுமே சிந்திக்காம மூளைய பாவிக்காம யாருக்கும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிற ஆட்களும் முட்டாள்.

என்ன அண்ணே! இப்ப நான் தலைவருக்கு முட்டுக்கொடுக்கிறன் எண்டுறியளோ!

பின்ன! வேற என்னடாப்பா செய்யிறாய்? பொதுவாவே சினிமா ரசிகர்கள் இப்பிடித்தானே! இதில என்ன புதினம் கிடக்கு?

யாழ்ப்பாணத்தாருக்கு மற்றவனை மட்டும் தட்டியே பழகிட்டுது என்ன?

“ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.”

எடே தம்பி! என்ன உடன யாழ்ப்பாணமெண்டு பொத்தாம் பொதுவா சொல்லுறாய்? நீயும் அங்கயிருந்து வந்தவன் தானே!

ஹா ஹா ஓம் ஓம். முட்டாள் எண்ட ஒரு சொல்லுக்கு பைத்தியம், விசரன், பேயன், மறை கழண்டது, லூசு, ஈரவெங்காயம், மோடன், மொக்கன், நட்டு கழண்டது எண்டு எவ்வளவு ஒத்த சொல்லுகள்!

ஓம். நீ சொல்லுறதை ஏற்கிறன். மற்றவனில பிழை பிடிக்கிறதும் கிரந்த கதையளும் எங்கடையளுக்கு கூடத்தான்.

நீங்களும் தான் நல்லா தலைவரை வச்சு கிரந்தம் விடுகிறியள்!

அடே! சும்மா அந்தாளுக்கு காவாங்கு காவாத.

சரி. இப்ப சினிமா ரசிகனெல்லாம் விசரன் பேயனா? நீங்கள் படம் பாக்கிறேலயோ?

பாக்கிறனான். சினிமா எண்டது கலை, அரசியல் பிரச்சார ஊடகம் எண்ட ஆரம்ப காலங்கள் மாறி சினிமா எண்டது வெறும் வியாபாரம் எண்ட நிலை தான் இண்டைக்கு. எங்களுக்கு பொழுதுபோக்கு. அந்த வியாபார சண்டைக்கு இரண்டு பேரை மோத விட்டு கூத்துப்பார்க்கிறது ஒரு வியாபார உத்தி. அவங்களுக்கு காசு. பலியாடுகள் இந்த ரசிகர்கள். அதால வாறது அரசியல் ஆசை.

“எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா”

என்ன அண்ணை! படத்துக்கு பாலை ஊத்தினா என்ன பீரை ஊத்தினா என்ன அது அவன்ர காசு;அவன்ர கொண்டாட்டம்; அவன்ர சந்தோஷமெண்டு அண்டைக்கு சொன்னியள்! இப்ப இப்பிடி கதைக்கிறியள்.

ஓம். சொன்னான் தான். சந்தோஷத்தை கொண்டாடுறது வேற; நடிகன் தான் தலைவன், கடவுளெண்டு பின்னால திரியிறது வேற. தியேட்டர் போ. படம் பார். விசிலடி. ஆடு. பாடு கொண்டாடு.

“ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே”

ஒரு படம் இத்தின கோடி வசூல்! யூ டியூப்பில இவ்வளவு பேர் பாத்திருக்கிறாங்கள் எண்டதை எல்லாம் பெருமை எண்டு தூக்கிக்கொண்டு திரியிறதை சொல்லுறன். விளங்குதே?

ம் ம் ம். நடிக்கிறவன் அரசியலுக்கு வரக்கூடாதெண்டு ஏதும் சட்டமா என்ன?

ச்செ ச்சா. அப்பிடியில்லை. அந்தாள் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டா எனக்கு என்ன? அது பற்றி நான் கதைக்கேலயே. வாறனெண்டு சொல்லி இப்ப ஏமாத்தியிருக்கே! அதை சொல்லுறன். ஆனால் ஒண்டு, சாதி இல்லை கடவுள் இல்லை; எல்லாம் சமமெண்டு சாகிற வரை சமூகநீதி சமூகநீதியெண்டு கத்திக்கொண்டு திரிஞ்ச கிழவனிட்ட இருந்து ஆரம்பிச்ச கழகங்கள், அதே சாதியை வளர்த்து வளர்த்து சாதி ஓட்டுக்களால மாறி மாறி ஆட்சியை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறது முழுக்க கொள்ளை.

//சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்//

அதை தான் அண்ணை மாத்த வேணும். சிஷ்டத்தை சேன்ஞ் பண்ண வேணுமெண்டு சொன்னவர்.

டேய், திரும்பவும் பனிப்பேயன் கணக்கா ஆரம்பிக்காதை! சொன்னவர் சரி செய்தவரோ?

சரியண்ணை ரென்சனாகாதையுங்கோ!

எடே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத வெளியில படம் மாதிரி சிம்மாசனத்தில ஏறலாமெண்டு மனுசன் நினைச்சிட்டுது. ஆனா இங்கால தவண்டு தவண்டு காலை பிடிச்சு முதலமைச்சரானவங்கள் எப்பிடி கொள்ளையடிக்கலாமெண்டு தெரிஞ்ச உடன அலார்ட்டாகிட்டாங்கள்.

//எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்//

பிறகென்ன சிங்கன் எதிர்பார்த்த வெற்றிடம் மூடிட்டுது. அவசரப்பட்டு வாயை விட்டுட்டமே! என்னடா பண்ணுறதெண்டு முழியை பிதுக்கிக்கொண்டு திரிஞ்சுது மனுசன். சொல்லி வச்சாப்போல சூட்டிங்கில கொரோனா வர, இது தான் சாட்டெண்டு அரசியலுக்கு வராமலயே அரசியல்ல இருந்து ஓய்வு எடுத்திட்டார்.

//பேச்சினில் மட்டும் வீரம்
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம்
அதை மறப்பதும் இவரது பழக்கம்//

இஞ்சையே பாருங்கோவன், தீபாவளிக்கு தீர்வு! பொங்கலுக்கு கறியெண்டு ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அறிக்கையா விடுவாங்கள். தேர்தல் முடிஞ்சா ஆக்களை பிடிக்கேலாது.

//நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்//

உண்மை தான். இங்கேயே போன தேர்தலில வோட்டுக்கு காசு கொடுத்திருக்கிறார் ஒரு வெடிவீரன். அங்கையெல்லாம் காசை வை; ஓட்டுப்போடுறன் எண்ட நிலையில தான் சனமேயிருக்குது.

//பணத்தினை வாரியே கொடுப்பார்
கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்//

அரசியல்வாதிகள் மட்டுமா? காப்ரேட் சாமியாரெல்லாம் கடவுளை வச்சு ஏமாத்திக்கொண்டிருக்கிறாங்களே!

//பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி//

அது தான்! விஷயம் சிம்பிள். நித்திக்கும் ஜக்கிக்கும் நல்லாவே தெரியும் கடவுள் இல்லையெண்டு. பிறகென்ன ஒவ்வொரு மனுசனுக்கும் பிரச்சினை இருக்கு. அவங்கள் அடிச்சு விட இதுகளெல்லாம் ஏமாந்த சோனிக்கணக்கா சாமி! அருள்! வரமெண்டு காசை கொட்டீட்டு வருங்கள்.

“ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்திராட்சை பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையில் சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க”

அது தான் அண்ணை. இந்த கள்ளச்சாமியாருக்கெல்லாம் எவ்வளவு பக்தர்கள்? ஒவ்வொரு அரசியல் கட்சியிலையும் ஆயிரம் பிழைகள் இருக்கும். ஆனா அதை சுட்டி காட்டினால் கம்பு சுத்திற தொண்டர்கள். தலைவர்களோட பிழைய பூசி மொழுகுவாங்களே!

அப்பிடித்தான் ஒவ்வொரு நடிகனையும் திரைக்கு வெளிய கடவுளாக்கிற ரசிகர்கள், சாதிப்பெருமை பேசுற மக்களெண்டு எல்லாருமே எங்கேயோ சிந்தனையை கழட்டி வச்சிட்டு முட்டுபட்டுப்போய் அதுக்கே முட்டுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறாங்கள்.

இது ஓவரான அன்பில அறிவு மட்டுப்படுறதெண்டு சொல்லலாம் என்ன அண்ணை!

பாத்தியே! இப்ப தான் வழிக்கு வாறாய். அதே தான். அன்பு தான். சாதாரண காதலுக்கே கண்ணில்லையெண்டு சொல்லுவினம். அதோட இன்னொரு நிலை தான்டா இந்த சுயசிந்தனையை விட்டுட்டு முட்டுக்குடுக்கிறதுகள்.

“முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை”

சின்னன்ல கேள்விப்பட்டிருப்பம், பெரிய பட்டங்கள் பெற்றவர்கள் அறிவாளியெண்டு. அது உண்மையா இருந்தா, இங்க சாதி எண்டதே இருந்திருக்காது. பிறகு நிறைய வாசிக்கிறவன் அறிவாளி எண்டு கேள்விப்பட்டிருப்பம். அப்பிடியானவேன்ர லச்சணம் இங்க பேஸ்புக்கை பாத்தாலே விளங்கும்!

எனக்கு இப்ப விளங்குதண்ணை. எல்லாரும் ஏதோ ஒண்டை கண்மூடித்தனமா விரும்பி, அதை சுத்தியே அவங்கட சிந்தனையும் சுத்துது. அந்த வட்டத்தை விட்டு வெளியில வர யோசிக்கிறேல. இது தான் சும்மா குடும்ப சண்டையளில இருந்து உலக போர்கள் வரை காரணம்.

அதே தான். சிந்தனை வெளி தான் நாம்.

“மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா”

நீங்கள் எதில அண்ணை முட்டாள்?

ரஜினி அரசியலுக்கு வந்து நல்லது செய்வார். தமிழ்நாடு தலைகீழா மாறும். “தமிழகத்தின் லீ குவான் யூ” ரஜினினு நம்பினவன் நான் தான்டா!

“நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க”

Related posts

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021

சித்திராங்கதா – 22

Thumi2021

இறையாண்மை – 03

Thumi2021

Leave a Comment