இதழ் 22

வழுக்கியாறு – 16

இயற்கை விலங்குப்பல்வகைமை

வழுக்கியாறு வடிநிலப்பகுதியானது இயற்கை மிருகங்கள், பறவைகள் மற்றும் பூச்சி, புளுக்கள் என மிகப்பரந்த அங்கிப்பல்வகைமையை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. Corvus splendens and Corvus macrorhynchos (crow) காகம், Psittaciformes (parrot) கிளி, Columbidae (pigeon) புறா, Otus (owls) ஆந்தை, Centropus sinensis (Greater coucal); செண்பகம், Eudynamys scolopacea (Asian koel) குயில், Hieraaetus pennatus (eagles) பருந்து, Gracula indica (myna) மைனா, Turdoides striata (seven sisters)புளுனி, Ardea alba (crane) நாரை, Chrysocolaptes festivus (White-naped woodpecker) மரங்கொத்தி, Anastomus oscitans (stork) கொக்கு, Alcedinidae (kingfisher) மீன் கொத்தி என்பன மிகப்பொதுவாக இப்பகுதியில் அவதானிக்கக்கூடிய பறவைகளாகும். இவற்றை விட வெளிநாட்டு குடிபெயர்வுப் பறவைகளை தை, மாசி மாத பருவகாலங்களில் வழுக்கியாற்று வடிநிலப்பகுதிகளில் அவதானிக்க முடிவதுடன் வழுக்கியாறானது கடலுடன் கலக்கும் அராலி வெளி என அழைக்கப்படும் கழிமுகப்பகுதியானது இது பேண்ற வெளிநாட்டு குடிபெயர்வு பறவைகளை அதிகளவில் கண்டு களிக்கக்கூடிய பருவகால பறவைகள் சரணாலயமாக தொழிற்படுகின்றது.

Prionailurus viverrinus (fishing cat) காட்டுப்பூனை, Herpestidae (mongoose) கீரி, Serpentes (snakes) பாம்பு, Rattus (rats) அகிளான், Mus musculus (mouse) எலி, Oryctolagus (rabbits) முயல், Sciuridae squirrels அணில், Anura (frogs) தவளை, Chamaeleonidae (chameleons) ஒணான், Testudinidae (tortoise) ஆமை, Mustela (weasels)  மரநாய் என்பன மிகப்பொதுவாக வழுக்கியாற்று வடிநிலத்தில் வாழும் சில விலங்குகளாகும். சருகுப்புலி எனும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை விலங்கை இப்பகுதிவாழ் விவசாயிகள் தமது விவசாய நிலங்களிலும் பிரதேசத்தில் காணப்படும் பற்றைக்காடுகளிலும் மிக அரிதாக கண்டதாக கூறுகின்றனர்.

பூச்சிகள், பீடைகள், இதர முள்ளந் தண்டிலி விலங்குகளும் மிகப்பரந்த பல்வகைமையை இப்பகுதியில் காட்டும் அதேவேளை இப் பூச்சி வகைகள் பெரும்பாலும் விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பனவாக இருப்பதாக விவசாயிகள் கூறும் அதேவேளை பறவைகளும் விவசாய அறுவடையின் தரத்தையும் அளவையும் குறைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். ஆனாலும் இயற்கை விலங்குகள், பறவைகள், பூச்சி, புளுக்களும் இயற்கையின் ஒருபகுதி என்பதனை நாம் விளங்கிக்கொண்டு அவற்றுடன் சரியான உறவை பேணுதல் வேண்டும். இதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்கும் என்கின்றனர் இயற்கை விவசாய விஞ்ஞானிகள்.

நாகபாம்புகள் இந்து மக்களால் வணத்துக்கும் மரியாதைக்குமுரிய விலங்காக கொள்ளப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பெரும்பான்மையாக வாழும் இந்து மக்கள் நாக பாம்புகளை கொல்வது கிடையாது. வழுக்கியாற்று வடிநிலப் பகுதியானது நச்சுப்பாம்புகள் உள்ளடங்கலாக பாம்புகள் அதிகம் வாழும் பகுதியாக காணப்படுகின்றது. பாம்புகள் பொதுவாக விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் அகிளான், எலி மற்றும் சிறு பூச்சிகளை  இரையாகக் கொள்வதனால் அவை விவசாயத்திற்கு நன்மை செய்யும் அதேவேளை அவை கொண்டுள்ள கொடிய விஷமானது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் மரணம் வரை இட்டுச்செல்கின்றது.

இப் பகுதியில் வாழும் கீரி எனும் விலங்கானது பாம்புகளை உணவாகக் கொள்வதனால் இப்பகுதியில் பாம்புகளின் குடித்தொகையானது கட்டுப்படுத்தப்படுகின்றது. மரநாய், காட்டுப்பூனை, கீரி மற்றும் நாய்கள் கிராமத்தவர்களின் பண்ணை விலங்குகளை வேட்டையாடுவதனால் மேற்குறித்த விலங்குகளுடன் கிராமத்தவர்கள் அடிக்கடி முரண்படுவதுடன் சில வேளைகளில் இவ் விலங்குகளை மக்கள் கொல்லவும் செய்கின்றனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் என்பன கிராமத்தவர்களின் கட்டுப்பாட்டை மீறி பயிர் வேலிகளை உடைத்து பயிர்களை மேய்ந்து அழிக்கின்றன. அத்துடன் நாய்கள் முதலான வேட்டை விலங்குகளும் பயிர் நிலங்களையும் நாற்று மேடைகளையும் சேதப்படுத்துகின்றன. ஏனெனில் பயிர்செய் நிலங்கள் வேட்டை விலங்குகள் வேட்டையாடும் களமாக தொழிற்படுவதனால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பேற்படுகின்றது.

கிராமத்தவர்களால் இரசாயன கிருமிநாசினிகளும் பொறிகளும் விலங்குகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பெரும்பாலான இயற்கை விலங்குகள் கொல்லப்படுகின்றன இதனால் இயற்கை பல்வகைமையானது பாதிக்கப்படுவதுடன் இயற்கை அழகும் கெட வாய்ப்பேற்படுகின்றது. அத்துடன் இரசாயன சேர்மானத்தினால் உணவுச்சங்கிலி மற்றும் உணவு வலை என்பன பாதிப்பிற்குள்ளாகின்றன. இதனால் சூழற் சமநிலையில் குழப்பம் ஏற்படுகின்றது.

றோகு, கற்லா, திலாப்பியா முதலிய நன்னீர் மீன்களும் நன்னீர் நண்டுகளும் வழுக்கியாற்று வடிநிலத்தில் காணப்படும் குளங்கள் ஓடைகளில் அதிகமாக காணப்படுகின்றன. கிராமத்தவர்களில் சிலர் நீர் நிலைகளில் மீன்பிடித்தலை தமது பகுதிநேர வாழ்வாதாரமாகக் கொள்கின்றனர். குளங்களின் உட்பகுதியில் பல கிணறுகள் அமையப்பெற்றுள்ளன. இக்கிணறுகள் கோடைகாலங்களின் போது குளங்களில் நீர் வற்றும் போதும் வற்றுவதில்லை எனவே கோடைகாலங்களின் போது மீன்கள் இக் கிணறுகளில் உள்ள நீரில் வாழ்ந்து கோடைகாலத்தை கழிக்கின்றன. மீண்டும் மாரி கால மழையுடன் குளம் கால்வாய்களில் நீர் நிரம்ப அவை இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகுகின்றன.

வீட்டு வளர்ப்பு மிருகங்கள்

நாய், பூனை, அலங்கார மீன்கள், லவ் பேட், கிளி என்பன செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதுடன் ஆடு, மாடு, கோழிகள் மற்றும் வாத்து என்பன தீவிர அல்லது அரைத்தீவிர வளர்ப்பு முறைகளில் வளர்க்கப்படுகின்றன. பறவைகள் முட்டை மற்றும் இறைச்சித் தேவைக்கும் கால்நடைகள் பால் மற்றும் இறைச்சித் தேவைக்கும் மிகப்பரவலாக வளர்க்கப்படுகின்றன. தன்னிறைவடைந்த விலங்குணவுப் பொருட்கள் உள்ளுர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. உயிர் விலங்குகளும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் கிராமத்தவர்களிடையிலும் விற்றல் வாங்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்றுவரை சில இடங்களில் காளை மாடுகள் விவசாயம் சார் உழவு, போக்குவரத்துக்களுக்கு பயன் படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பண்னை விலங்குகளின் கழிவானது எருவாக பயன்படுகின்றது. எருவானது விவசாயத்தில் சேதனப்பசளையாக பயன் படுத்தப்பட்டு வருகின்றது. சேதன எருவானது கிராமத்தவரிடையே விற்க வாங்கப்படுகின்றது. விலங்கு வளர்ப்பானது கிராமிய பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாக விளங்குவதுடன் கிராம மக்களின் வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்பை காட்டுகின்றது.

(ஆறு ஓடும்) 

Related posts

ஆசிரியர் பதிவு – முட்டாள்களா நீங்கள்?

Thumi2021

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 02

Thumi2021

சித்திராங்கதா – 22

Thumi2021

Leave a Comment