இதழ் 22

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஏதுமறியாத அந்த இளம் சோடிகள் காதல்க்கடலில் கவிதை எனும் ஓடத்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஜெகபுன்னிசா மனதின் கவலைகளையும் அச்சங்களையும் அகில்கானின் காதல் மொழிகள் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தன.

காற்றிலும் வேகமாக அந்தப்புரத்தை நோக்கி ஒளரங்கசீப் விரைந்தான். அரசர் வருகிறார் என்ற தகவல் அரசர் வர முன்னதாகவே அந்தப்புரத்தை எழுப்பியது. ஜெகபுன்னிசாவை எழுப்பி வர அவளது அறைக்குள் நுழைந்தனர் அவள் உடன் பிறந்த இரு சகோதரிகள். அனைவருக்கும் அதிர்ச்சி! அரசரின் அந்தப்புர விஜயத்தின் நோக்கம் புரிந்து போனது. பேசிக்கொள்ள நேரமில்லை. ஜெகபுன்னிசாவுக்கு தந்தை வருவதற்குள் அகில்கான் தப்பிக்க வேண்டும். சகோதரிகளுக்கு ஜெகபுன்னிசா தப்பிக்க வேண்டும். ஆக, நால்வருக்குமே அகில்கான் தப்பிக்க வேண்டும். ஒளரங்க சீப் அரண்மனைக்குள் ஒருவனை ஒளிப்பதென்பது இயலாத காரியம். பிடிபட்டுவிடுவான். ஒளரங்க சீப்பின் புத்திரிகள் நால்வர். ஒருத்தி அப்போது அங்கே இல்லை. அவளானான் அகில்கான். இஸ்லாமிய பெண்களின் முழு உடை அப்போது அவர்களுக்கு வசதியாகிப்போனது.

வந்தான் ஒளரங்க சீப்! குறைக்கப்பட்ட விளக்கொளியில் தன் புத்திரிகளைக் கண்டான். வலப்பக்கம், இடம்பக்கம், மேலே, கீழே என நோட்டம் விட்டவன் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தான். மகள்களில் ஒருத்தியின் காலணிகள் ஆண்களுக்கானது. கோவத்தில் சிவந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை. கையும் களவுமாக பிடித்து விட்டான். ஆனால் காட்டிக்கொடுத்து விட்டால் தன் கௌரவமும் புகழும் காணாமல் போய்விடுமென்று அமைதி காத்தான். அந்தப்புரத்துக்குள் ஒருவன் வந்து போகுமளவிற்கு தன் காவல் பலவீனமாகியிருப்பதும் தன் மகளின் மனதுக்குள் ஒரு சாதாரணமானவன் குடிகொண்டிருப்பதும் அவனுக்கு அவமானமாகப்பட்டது. அதை அவனே ஊருக்கு காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. இந்தியாவே ஆச்சரியமாகப்பார்க்கும் தன்னை அலட்சியமாகப் பார்க்குமாறு வைத்துவிடக்கூடாதென்பதில் உறுதியாய் இருந்ததால் அமைதியாக அந்தப்புரத்தின் ஓய்வறைக்கு சென்றான்.

அந்தப்புரத்திலிருந்து எவரும் வெளியே செல்ல முடியாதவாறு வெளிக்காவலை பலப்படுத்த உத்தரவிட்டவாறே அந்தப்புரத்தின் விருந்தினர் அறைக்கு சென்றான். தன் மகள்களைத்தவிர அந்தப்புரத்தில் உள்ள அனைவரையும் அந்த அறைக்கு வரவைத்தான். அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவர்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு மீள மகள்கள் அறைக்கு சென்றான்.

தந்தையின் சந்தேகம் பலப்பட்டதை உணர்ந்த சகோதரிகள் அகில்கானை அந்தப்புரத்தின் குளியலறைக்குள் ஒளித்து வைத்தனர். தந்தை தம் மகள்களின் குளியலறைக்குள் செல்ல மாட்டாரென்ற நம்பிக்கை அவர்களுக்கு! ஆனால் ஒளரங்கசீப் அனைவரிலும் வித்தியாசமானவன். இவர்களின் திட்டத்தை உணர்ந்து கொண்டான். குளியலறையை மன்னன் நெருங்குவதை தெரிந்து கொண்ட அகில்கான் சுடுநீர் வைக்கும் அண்டாவுக்குள் சென்று ஒளிந்து கொண்டு, அண்டாவின் மூடிக் கொண்டான். அண்டாவின் மூடியினூடு அவனது மேலாடையின் நுனி வெளியே தெரிந்து, அவன் உள்ளே இருப்பதை காட்டிக்கொடுத்தது.

எந்த சலனமும் காட்டாமல் அண்டாவின் மூடிகளை உள்ளே இருந்து திறக்காதவாறு பூட்டுக்களால் பூட்டினான். குளிக்கப்போவதாகவும், வெந்நீரை தயார் செய்யுமாறும் மகள்களுக்கு உத்தரவிட்டான். சகோதரிகள் நால்வருமே அதிர்ந்து விட்டார்களென்றால் ஜெகபுன்னிசா மிரண்டு விட்டாள். அச்சத்தில் தந்தையின் முகத்தையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

தான் உத்தரவிட்டு நொடிகள் பல ஆன போதும், வெந்நீர் வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெறாததால் ஆத்திரம் கொண்டான். குரல் கனத்தது. கரைந்து விட்டாள் ஜெகபுன்னிசா. ஒளரங்க சீப்பிற்கு தேவையான வெந்நீரை அவள் கண்கள் கண்ணீராய் தரத்தொடங்கின. ஆனால் அவனுக்கு அண்டா கொதிக்க வேண்டும். அவனே தீ மூட்ட சென்றான். தாமதிக்கும் நொடி அனைத்தும் தன்னவனின் உயிருக்கு உலை வைக்குமென்றெண்ணிய ஜெகபுன்னிசா தன் தந்தையின் கால்களை பிடித்து கதறினாள்… குழறினாள்.. தன் காதலன் பற்றி தேம்பித்தேம்பி சொல்ல முனைந்தாள். ஆனால் அவன் காதுகளுக்கு எதுவுமே எட்டவில்லை.

தான் குளிக்கப்போவதாகவும் அனைவரையும் அறையை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டான். அசையவில்லை ஒருவரும். அழுது கொண்டே இருந்தாள் ஜெகபுன்னிசா. மகள்களை அறையை விட்டு அனுப்பியதாக வேண்டும். இனி இப்படி ஒரு தவறு தவறியும் நடந்து விடக்கூடாது. எனவே உக்கிரமான முடிவொன்றை கையிலெடுத்தான். இதுவரை எந்த தந்தையும் செய்யாத காரியம் அது. தன் மேலாடைகளை களைந்து மகள்களுக்கு முன்பே ஒளரங்க சீப் அரை நிர்வாணமானான். தந்தையின் கோவமும் நிலைமையும் எல்லை மீறி போவதை உணர்ந்த மற்ற சகோதரிகள் பலவந்தமாக ஜெகபுன்னிசாவை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினர். அண்டாவுக்கு, இல்லை! இல்லை! அகில்கானுக்கு ஒளரங்க சீப் தீ மூட்டினான்.

வெந்நீரில் அகில்கானும் கண்ணீரில் ஜெகபுன்னிசாவும் வெந்து போனார்கள். மொகலாயப்பேரரசின் கௌரவத்தீயில் அந்த இளசுகளின் காதல்த்தீபம் காணாமல் போனது.


என்னை வைத்து தன்னை எழுதியவன் அகில்கான். உடலால் மட்டுமல்ல, உள்ளத்தால் மட்டுமல்ல, உணர்வுகளாலும் காதலித்த ஒருவனால்த்தான் இப்படி கவிதை புனைய முடியுமென்று மன்னரையே சொல்ல வைத்த கெட்டிக்காரன். நாடே அவன் காதலிப்பதை அறிந்திருந்தது. அதை அவனும் மறுக்கவில்லை. காதல் ஒன்றும் குற்றமல்லவே! அதனால் அவனும் அதை மறைக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால் யாரைக்காதலிக்கிறேன் என்பதில் மட்டும் இரகசியம் காத்தான். அதற்கு காரணமும் இருந்தது. காதலையே ஏற்காத சமூகம் பெண் காதலிப்பதாய், அதுவும் அரச வம்சத்தவள் சாதாரணமானவனை காதலிப்பதை அறிந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ன? அதனால்தான் தன் காதலியை வெளிப்படுத்தாமல் இருந்தான் அகில்கான்.

காதலர்கள் சந்திப்பதை குறைத்திருந்தால், மன்னர் அகில்கானின் காதல் கவிதைகளில் நனைந்திருந்த வேளை ஒன்றில் தன் காதலை மெதுவாக மன்னனிடம் அகில்கான் வெளிப்படுத்தியிருந்தால் அவர்களின் காதலை வரலாறு வேறு விதமாக பதிவு செய்திருந்திருக்கும்.

காதலர்களே,
விதி வலியது தான். மதி அதனிலும் வலியது. எந்த சூழ்நிலையிலும் உங்கள் காதலை கைவிடாதீர்கள். அந்த காதலும் உங்களை கைவிடாது. பொறுமையின் அவசியத்தையும், காற்றுள்ள போது தூற்றுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து ஒருமித்து செயற்படுங்கள். சந்தோசமான காதல் கதைகளை வரலாறாக்க நான் காத்துக்கிடக்கின்றேன்.

எண்ணம் போல் வாழ்க்கை!
எண்ணம் போல்த்தான் வாழ்க்கை!

இப்படிக்கு,
அகில்கானின் எழுத்தாணி

Related posts

சித்திராங்கதா – 22

Thumi2021

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021

இறையாண்மை – 03

Thumi2021

Leave a Comment