இதழ்-23

ஏப்பிரல் 23 – ஆங்கில மொழியும் சேக்ஸ்பியரும்

வருடந்தோறும் ஏப்பிரல் மாதம் 23ஆந் திகதி ஆங்கில மொழி தினமாகவும் சேக்ஸ்பியர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான தொண்டாற்றிய சேக்ஸ்பியர் இத்தினத்திலேயே பிறந்தார் என்றும் மறைந்தார் என்றும் நம்பப்படுகின்றது. தமிழிலே வள்ளுவர் நாள், பாரதி நாள் என்று நாம் பிரத்தியேகமாக எமது பெருந்தகைகளை நினைவு கூர்வது போன்று ஆங்கிலம் கூறும் நல்லுலகில் சேக்ஸ்பியர் என்றென்றும் முடிசூடா மன்னனாக இருந்து வருபவர். அவரது இலக்கியத்தின் சிறு துளியையாவது பருகாமல் ஆங்கிலம் கற்பவர்கள் அரிது. எனவே தான் ஆங்கில மொழி தினம் அவரது நினைவு தினமாகவும்இ அவரது நினைவு தினம் ஆங்கில மொழி தினமாகவும் ஒருங்கே அமைந்துள்ளன.

முதன்முதலாக ஆங்கில மொழி தினம் 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் 23ஆந் திகதி கொண்டாடப்பட்டது. ஆங்கில மொழியின் வரலாறு, பண்பாடு, இலக்கியம், சாதனைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லும் நாளாகவே இது அமைகின்றது. தாய்மொழிக்கு அடுத்து உலகெங்கும் கற்கப்படும் முதன்மை மொழியாக ஆங்கிலம் காணப்படுவதாலும் உலக தொடர்பாடல் மொழியாக விளங்குவதாலும் இம்மொழி தற்கால உலகப் பொது மொழியாக (Lingua franca) கொள்ளப்படுகின்றது. உலகெங்குமுள்ள பல் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட அனைத்து மக்களையும் ஆங்கில மொழியே பெருமளவில் ஒன்றிணைக்கின்றது. எனவேதான், ஐ.நா சபை 2010இல் இத்தினத்தைப் பிரகடனப்படுத்தியது. மேலும் ஆங்கில மொழி எமது வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலேயே ஆங்கிலம் முதல் மொழியாக இருக்கின்ற போதிலும் உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்பாடல் மொழியாகவும் அமைந்துள்ளதுடன் உலகின் மிக முக்கிய வலையமைப்பாகவும் ஆங்கிலம் மாறியுள்ளது. சீனாவில் வழங்கும் மந்தரின் மொழி, ஸ்பானிய மொழி போன்றவற்றை அடுத்து ஆங்கிலம் உலகின் மூன்றாவது பெரும் பொது வழக்கு மொழியாக உள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பொது நலவாய நாடுகள் பலவற்றிலும் ஐ. நா விலும் உலகின் பல்வேறு அமைப்புகளிலும் ஆங்கிலம் உத்தியோகபூர்வ மொழியாக இருப்பதுடன் இரண்டாம் மொழியாகவும் பரந்தளவில் கற்கப்படுகின்றது.

ஆங்கில மொழியின் பின்புலம் :
1400 வருட காலம் பழைமை வாய்ந்த மொழியான ஆங்கிலம் அதே கால வரலாற்றைக் கொண்ட காத்திரமான இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஜெர்மனிய மொழியிலிருந்தே ஆங்கில மொழி பிறந்ததாக அறியப்படுகின்றது. பிரித்தானிய காலனித்துவம் உலகெங்கும் வேரூன்றும் வரையில் ஆங்கில மொழியின் செல்வாக்கு மிகக் குறைவாகவே இருந்து வந்தது. மேற்கு ஐரோப்பாவின் ஒரு சில தீவுகளிலும் அவற்றின் சிறு சிறு பகுதிகளிலுமே அது செல்வாக்குப் பெற்றிருந்தது. மத்தியகால இங்கிலாந்தில் ஆங்கில மொழியின் தோற்றுவாயாக இருந்தவர்கள் ஏங்கிள் எனப்படும் மேற்கு ஜெர்மனியக் குடிகள். பால்டிக் கடலின் ஒரு பகுதியாகிய ஏங்கிலிய தீபகற்பத்திலிருந்து இங்கிலாந்தை நோக்கிப் புலம் பெயர்ந்தவர்களே இவர்கள். அவர்கள் மூலமே ஆங்கிலம் தோற்றம் பெற்று அதன் இலக்கணம், ஒலியமைப்பு, சொற்கள் போன்றனவும் உருவாகின. மொத்தத்தில் ஆங்கிலம் என்னும் மொழி அதனுடன் தொடர்புபட்ட ஒவ்வொரு மொழியினடியாகவே எழுந்தது.

ஆங்கில மொழி காலனித்துவ மாற்றத்தின் பின்பே உலகத்தின் கல்வி மொழியாகவும் நிருவாக மொழியாகவும் பொருளியல் மொழியாகவும் மருத்துவ மொழியாகவும் மாற்றமுற்றது. மேலைத்தேய மருத்துவம் முதன்மை பெற்றதுடன் ஆங்கிலம் உச்சத்தை எட்டியது. இணைய வலைத் தளங்களின் தோற்றத்துடன் உருவான தொழிநுட்ப முன்னேற்றம், ஆங்கிலத்தின் செல்வாக்கு மேலோங்குவதற்கு மேலும் வலுச்சேர்த்தது.

சேக்ஸ்பியரின் தொண்டு :
ஆங்கில இலக்கியத்தில் மாபெரும் மேதாவியாகவும் உலகின் மிகப்பெரும் நாடகாசிரியர்களுள் ஒருவராகவும் வில்லியம் சேக்ஸ்பியர் போற்றப்படுகின்றார். ஸ்ராட்போர்டு ஆவன் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த அவர் ‘ஆவனூர் பாணன்’ (Bard of Avon) என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். இவரது பிறந்த தினம் எது என்பது சம்பந்தமாகக் கருத்து வேறுபாடு உண்டு. அவர் 1564 ஆம் ஆண்டு ஏப்பிரல் 26 அன்று திருமுழுக்குப் பெற்றுள்ளதாகவும் ஏப்பிரல் 23 ஆம் நாளில் பிறந்ததாகவும் அவரது இறப்பும் ஏப்பிரல் 23 ஆம் நாளிலேயே நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. உலகம் முழுவதிலுமுள்ள சேக்ஸ்பியரின் நேசர்களும் ஆர்வலர்களும் இவ்விலக்கிய மேதையைக் கெளரவிக்குமுகமாக ஒவ்வொரு வருடமும் ஏப்பிரல் மாதம் 23ஆந் திகதியை சேக்ஸ்பியர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

மொத்தமாக அவர் முப்பத்தாறு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஹம்லெற் (Hamlet), மக்பெத் (Macbeth), ரோமியோ யூலியற் (Romeo and Juliet), ஒதெல்லோ (Othello), யூலியஸ் சீசர் (Julius Caesar) போன்றவை மிகவும் பிரசித்தி வாய்ந்தன. யூலியஸ் சீசர் நாடகத்தில் வரும் ‘Et tu, Brute? – நீயுமா புரூட்டஸ்!?’ அல்லது ‘புரூட்டஸ்! நீயுமா?’ என்ற ஏக்கம் உலகம் முழுவதிலுமுள்ள அனைவரும் அறிந்த ஒன்று. துரோகிகளைக் குறிப்பதற்கு அனைவராலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கவிதைத் துறையிலும் சேக்ஸ்பியர் கைதேர்ந்த வல்லாளர். அவரது கவிதைகளுள் ‘வீனஸும் அடொனிஸும்’ (Venus and Adonis) என்ற கவிதை மிகவும் பிரசித்தி வாய்ந்தது. செய்யுள் இலக்கியத்திலும் சேக்ஸ்பியர் தடம்பதித்துள்ளார். அவரின் 154 செய்யுட்களைக் கொண்ட ஏடு ஒன்று 1609 இல் வெளியிடப்பட்டது.

சேக்ஸ்பியர் ஆங்கில மொழிக்கு சுமார் 3000 சொற்களை அறிமுகம் செய்துள்ளார். அவரது சொற்கையாட்சியை மதிப்பிடுகையில் 17,000 முதல் 29,000 வரை கணிக்க முடியும். 3000 சொற்களை ஆங்கில மொழிக்கு அறிமுகம் செய்துள்ளமை குறித்து ஒக்ஸ்போர்டு அகராதி அவரை ஏற்றிப்போற்றியுள்ளது.

சேக்ஸ்பியரின் நாடகங்களில் 13 தடவைகள் தற்கொலை இடம்பெறுகின்றது. 13 என்பது அவப்பேறுடைய இலக்கமாகக் கொள்ளப்படுகின்றது. அவரின் நாடகங்களில் தற்கொலையுண்டோரின் எண்ணிக்கையும் பதின்மூன்று. அதிலே ரோமியோ யூலியற் எல்லோராலும் அறியப்பட்டவர்கள்.

சேக்ஸ்பியரின் மிகக் குறுகிய நாடகம் ‘கொமடி ஒவ் எரர்ஸ் (The Comedy of Errors)’. இது 1787 வரிகளையும் 14,369 சொற்களையும் கொண்டது. அவரின் மிக நீண்ட நாடகம் ‘ஹம்லெற் (Hamlet)’. இது 4,042 வரிகளையும் 29,551 சொற்களையும் கொண்டது.

1613 ஆம் ஆண்டளவில், 49 ஆம் வயதில் தனது ஊரான ஸ்ராட்போர்டுக்குத் திரும்பிய சேக்ஸ்பியர் தனது பணிகளிலிருந்து இளைப்பாறினார். அங்கு மூன்று வருடங்கள் வாழ்ந்து 1616ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23ஆந் திகதி தனது 52ஆவது வயதில் காலஞ்சென்றார். சேக்ஸ்பியரின் தனிப்பட்ட வாழ்வு குறித்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

சேக்ஸ்பியரின் கல்லறையில் ஒரு சாபம் பொறிக்கப்பட்டுள்ளது. அது அவரின் பூதவுடலை அப்புறப்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கின்றது. அது குறிப்பிடுவது யாதெனில்,

‘அருமை நண்பரே! யேசுவுக்காகப் பொறுத்தருள்வீர்! இங்கு புதையுண்டிருக்கும் உடலை அகற்றாதீர் இக்கல்லறையை விட்டுவைப்போர் அருள் படைத்தோர் ஆகுக! என் உடலை நகர்த்துவோர் சபிக்கப்படுவோர் ஆகுக!’
‘Good friend for Jesus’ sake forbear, To dig the dust enclosed here: Blest be the man that spares these stones, And curst be he that moves my bones!’.

ஆங்கில மொழி கற்றலும் மொழிபெயர்ப்பும் :
இன்று உலகில் அதிகளவிலான மக்கள் கற்கும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதிலும் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்பவர்களே உலகெங்கும் உள்ளனர். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் (Teaching English as a Second Language), வேற்று மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் (Teaching English as a Foreign Language) என்று தனிப்பெரும் துறைகளே நிறுவப்பட்டும் உள்ளன. இதற்கென்று தனிக் கற்கைகளும் பட்டப் படிப்புகளும் கூட வழங்கப்படுகின்றன. இதற்கான பிரதான காரணம் இன்றைய நவீன கல்விக்கு ஆங்கில மொழி மூல மொழியாக உள்ளமையே. சிறுபராயத்தில் தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றாலும் உயர் கல்வியை ஆங்கில வழிக் கல்வியாகவே பெற வேண்டிய சூழலும் எதிர்கால தொழில் வாய்ப்புகளை ஆங்கில மொழியைக் கொண்டே அடையவேண்டிய நிலைமையும் இன்று உள்ளது. அதற்காக சிறுபராயம் முதற்கொண்டே ஆங்கில மொழியறிவை மாணவர்களுக்கு இலகு முறையில் ஊட்ட வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசான்கள் அம்மொழியைத் தேடியறிந்து கற்கும் ஆர்வம் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இன்று அறிவியல் சார்ந்த கருத்துகளும்இ நூல்களும், செய்திகளும், தகவல்களும் ஆங்கில மொழியிலேயே சொரிந்து கிடக்கின்றன. அன்றாடம் உலகில் நடைபெறும் நிகழ்வுகள், செய்திகள் போன்றவை உடனுக்குடன் இணைய வழியாக ஆங்கிலத்திலேயே நம்மை வந்தடைகின்றன. அவற்றை எல்லா மக்களும் அறியும் வண்ணம் கொண்டு சேர்ப்பது மொழிபெயர்ப்பு ஆகும். அத்தகைய பயனுள்ள விடயங்களைத் தேடியறிந்து எளிய நடையில் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டியது ஆங்கிலத்தை அறிந்தவர்கள் ஆற்றவேண்டிய தொண்டாகும். மிக முக்கியமாக கல்வி கற்போர் பயன் பெறத்தக்க நல்ல நூல்களையும் சமூக விழிப்புணர்வைத் தூண்டி மக்களை நல்வழிப்படுத்தும் அறக்கருத்துகளையும் நன்னெறிகளையும் மொழிபெயர்ப்புச் செய்வது மிகுந்த நன்மை பயக்கும் விடயமாகும்.

ஆங்கில மொழி தினத்தை எவ்வாறு கொண்டாடலாம் :
ஆங்கில மொழி தினத்தைக் கொண்டாடுவது உலகில் பல்வேறு விதமாக நடைபெறுகின்றது. நூல் வாசிப்புஇ கவிதை மன்றுகள்இ பாடசாலைப் போட்டிகள் என்றவாறெல்லாம் உலகெங்கும் ஒரு விழிப்புணர்வுக்காக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதே நேரம் சிலருக்கு இந்த நாள் அவர்களது இலக்கியப் பங்களிப்புகள் மூலம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நாளிலேயே உலக நூல் தினமும் பதிப்புரிமை தினமும் ஒருங்கே அமைந்திருப்பது மேலும் நயக்கத்தக்கது.

இருப்பினும், ஆங்கில மொழியின் தன்மையில் அது இயல்பாகவே கொண்டுள்ள சிக்கல்கள் பலரை அம்மொழியை அறிவதிலிருந்து தூரமாக்கியுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் உச்சரிப்பில் ஒன்றித்து இருக்கும் பல சொற்கள் பொருளில் வேறுபடும். ‘Their’, ‘There’, ‘They’re’ போன்ற சொற்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். ஒருமை, பன்மைச் சொற்களிலும் வேறுபட்ட தன்மை உண்டு. பல பெயர்ச் சொற்களுக்கு இறுதியில் ‘s’ என்ற எழுத்து வந்தால் பன்மை வடிவம் பெறப்படுகின்ற போதிலும் சில சொற்கள் வேறுபட்டு நிற்கின்றன. ‘Goose’ என்ற சொல்லின் பன்மை வடிவம் ‘Geese’ என்று வழங்கப்படுவதையும் ‘Moose’ என்ற சொல் பன்மையிலும் ‘Moose’ என்றே வழங்கப்படுவதையும் காணலாம். இவ்வாறான பேதங்கள் பல உள்ளன. ஆனால் முறையாக ஆங்கிலத்தைக் கற்பதுடன் வாசிப்பிலும் செவிமடுப்பிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அத்தகைய பேதங்களை இலகுவில் நுண்மையாக அறிந்து மொழியைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆங்கிலம் இலகுவாகக் கற்றறியக்கூடிய ஒரு மொழி. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கிலத்தை இரசனையுடன் கற்பவர்கள் அம்மொழியின் இயல்புக்கு இசைவடைந்து அதனை ஒரு இன்பமாகவே அனுபவிப்பர். காலப்போக்கில் ஆங்கிலத்தின் செல்வாக்கு அவர்களுக்குள் மேலோங்கி எந்த விடயத்தையும் குறித்து இலகுவான முறையில் ஆங்கிலத்தில் தொடர்பாடலாம் என்னும் மனோநிலைக்கு அவர்களை அது மாற்றிவிடுகின்றது. அத்தகையதொரு ஈர்ப்பை அம்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆங்கில மொழி தினம் அம்மொழியின் வரலாற்றையும் அம்மொழியின் வாழ்வையும் அம்மொழியின் தனித்துவமான தன்மையையுமே பறைசாற்றி நிற்கின்றது.

ஆங்கில மொழி தினத்தில் அதன் பல்வகைமையையும் அறிந்து கொள்வோம். ஆங்கில மொழியில் கூட வழக்கொழிந்த சொற்கள் என்றும் பிரயோகங்கள் என்றும் பல உள்ளன. அவற்றைப் பழைய ஆங்கில இலக்கியங்களில் காணலாம். அதே போல ஆங்கில மொழியிலும் கிளை மொழி வேறுபாடுண்டு. கனடிய ஆங்கிலம் என்றும் ஐக்கிய இராச்சிய ஆங்கிலம் என்றும் அமெரிக்க ஆங்கிலம் என்றும் ஸ்கொட் ஆங்கிலம் என்றும் அவற்றுக்கிடையே நுண்ணிய வழக்கு வேறுபாடுகள் உண்டுஇ உபயோக வேறுபாடுகளும் உண்டு. அவற்றை இன்று பல்லூடகங்கள் வழியாக நாம் காணலாம்.

ஆங்கில மொழியின் புதியன ஏற்றல் கொள்கையும் புதிய சொற்களை அறிமுகப்படுத்தும் அல்லது தழுவும் தன்மையும் வேறெந்த மொழியும் கொண்டிராத விசேட அம்சமாகும். இதுவே இன்று ஆங்கில மொழி பரந்து விரிந்து உலகெங்கும் நிலை கொள்ளக் காரணமாகவும் அமைந்துள்ளது. கொவிட்-19 கொள்ளை நோய் பரவியதை அடுத்து ஒக்ஸ்போர்டு அகராதி 110 இற்கும் மேற்பட்ட புதிய சொற்களைப் புதிதாகப் புகுத்தியுள்ளமையை இதற்குத் தக்க சான்றாகக் கொள்ளலாம். வாழும் மொழி ஒன்று என்னென்ன அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இன்று மிகுந்த முன்னுதாரணமாகத் திகழும் முதன்மை மொழி ஆங்கில மொழியே.

ஆங்கில மொழி இனிமேலும் தனது சுய அடையாளத்தில் நின்று நிலைக்காது என்று தர்க்கிப்போர்இ அம்மொழி எல்லா மொழிகளையும் தழுவக் கூடியது என்பதையும்இ அம்மொழியை எல்லா மொழிகளும் தழுவும் என்பதையும் இன்று ஆங்கிலம் தன்னகத்தே கொண்டுள்ள தொடர்புகளை வைத்து ஒரு கணம் ஏற்றுத்தான் ஆக வேண்டியுள்ளது.

‘நாம் சில சந்தர்ப்பங்களில் வெறுமனே (ஆங்கில மொழியில்) சொற்களை இரவல்பெறுவதில்லை; ஆங்கிலம் ஏனைய மொழிகளை இடைவிடாது அடியொற்றிச் சென்று அம்மொழிகளையே திணறடித்து புதிய சொல்வளத்தை அபகரித்து எமக்குக் கொடுத்துள்ளது’.
-ஜேம்ஸ் நிக்கொல்-

“We don’t just borrow words; on occasion, English has pursued other languages down alleyways to beat them unconscious and rifle their pockets for new vocabulary”.
-James Nicoll-

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள்

Thumi2021

ஈழச்சூழலியல் – 10

Thumi2021

Leave a Comment