இதழ்-24

ஈழச்சூழலியல் – 11

சுற்றலாத்துறை சார்ந்து தேசிய அளவில் மேற்கொள்ளப்படும வேலைத்திட்டங்கள் போன்று உள்ளூராட்சி அமைப்புகளிலும் நடைமுறைப்படுத்தப்படல் பாராட்டுக்குரியதாகும். இவ்வாறாக உள்ளூர் கட்டமைப்புகளிடையே சுற்றுலாத்துறை சார்ந்த போட்டித்தன்மையை உருவாக்கி பயணப்படல் மூலமாக ஒருமித்த நாடாக சுற்றுலாத்துறையில் முன்னோக்கிய அடைவுகளை எட்டமுடியும். இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன.   இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, உல்லாசப் பயணிகள் வந்து செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்களேயானால் வடக்கில் இன்று காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், தொழில்வாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பது உண்மை. வடஇலங்கையில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்யக்கூடிய மூன்று அம்சங்கள் காண கூறப்படுகின்றது..அவையாவன, முதலாவது, இயற்கை வளங்கள்; இரண்டு தொல்லியல் அம்சங்கள்; மூன்று தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்கள் என்பனவாகும்.

தென்னிலங்கையில் சுற்றுலா மேம்பாட்டில் இந்த இயற்கை வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், குடாநாட்டிலும்  இயற்கை வளம் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. இங்கும் பிற நாட்டவர்களும் தென்னிலங்கையில் இருந்து வருகின்றவர்களும் பார்க்கக் கூடிய, தரிசிக்கக் கூடிய பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்கரைகள் மிக உன்னதமான சுற்றுலாவுக்கு உகந்தவையாகக் காணப்படுகின்றன. முன்னரே குறிப்பிட்டவாறு கசூரினா கடற்கரை, கீரிமலை, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு, சாட்டி போன்ற இடங்களில் உள்ள கடற்கரைகள் பட்டுப்போன்ற வௌ்ளை மணற்பாங்கானவையாகவும் ஆழம்குறைந்த பரந்து விரிந்த அமைப்பைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.இந்தக் கடற்கரைகளைத் தவிர, பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பகுதிகள் முக்கிய அம்சங்களாகச் சுற்றுலாவிலே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 1965 ஆம் ஆண்டளவில் அரசாங்க அதிபராக இருந்த ஸ்ரீகாந்தா, சுண்டிக்குளத்தில் வெற்றிலைக்கேணிக்கு அண்மையில், உலகிலுள்ள பலநாடுகளில் இருந்து மிக அற்புதமான பறவைகள் வந்து செல்வதை அவதானித்து அதை ஒரு பறவைகள் சரணாலயமாக அங்கிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.  2009 இன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் முயற்சியால், இந்தச் சரணாலயம் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டு, வௌிநாட்டவர்கள், தென்னிலங்கை மற்றும் உள்ளூர் மக்கள், இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். மக்களுக்கு வசதியாக தங்குமிட வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அங்கே சேர்க்கப்பட்டு இப்போது ஒரு சர்வதேச தரத்துடனான சரணாலயமாகக் காணப்படுகின்றது இதைத் தவிர வங்காலையில் உள்ள சரணாலயம் பலரையும் கவர்ந்து வருகின்றது.  ஒரு பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்றது.அதேபோலத்தான், பூநகரி, ஆலடியிலிருந்து கல்முனை வரை செல்லக்கூடிய 10 கி. மீற்றர் நீளம் கொண்ட மணற்பாங்கான பிரதேசம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஓர் இடமாகக் காணப்படுகின்றது. மண்டித்தலை, கௌதாரிமுனை, வெட்டுக்காட்டை அண்டிய கடற்பரப்பு இதுவாகும்.  வடபகுதியில் ஏனைய இடங்களைக் காட்டிலும் பாறைகள் அற்ற மணற்பாங்கான ஆழம்குறைங்த கடல்களாக இவை இருப்பதனால் பலரும் அங்கு வந்து செல்கின்றார்கள். பூநகரி, மண்டித்தலை, கௌதாரி முனைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் இடைப்பட்ட ஆழம் குறைந்த பரவைக்கடல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்பொழுது காணப்படுகின்றது. இவ்வாறான ஓர் இடம் சுற்றுலாவுக்குரிய வகையில் மாற்றப்பட்டு, படகுச் சேவைகள் மேற்கொள்ளப்படுமானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த படகுப் போக்குவரத்தை இங்கு அறிமுகப்படுத்தி சுற்றுலாவை மேலும் அபிவிருத்தி செய்வதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.  இப்பிரதேசத்தில்தான் வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தைப்பற்றி, 15 ஆம் நூற்றாண்டில் எழுந்த கோகிலசந்தேசி என்ற இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்படுகின்றது.  

ஆனையிறவுப் பாதை திறப்பதற்கு முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான கடல், தரை வழிப்பாதை யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து பூநகரி, மண்டித்தலை ஊடாக மாதோட்டம் சென்று அங்கிருந்து அநுராதபுரம் ஊடாக தென்இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.   கோகில சந்தேசியத்தில் இந்தக் கடற்கரைப் பிரதேசம் மிக அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அது சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய ஓர் இடமாகக் காணப்படுகின்றது.   ‘கோகிலசந்தேசிய’ என்ற இலக்கியம், கோட்டை இராச்சியத்திலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் சப்புமல் குமரய்யா என்ற ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து வந்தான். அவனுடைய படை எந்தெந்த வழியூடாக நகர்ந்தது, அந்தந்த வழிகளில் எதிர்ப்பட்ட நகரங்கள், தரிசித்த ஆலயங்கள், எந்த ஊரில் படைகள் தங்கியிருந்தன போன்ற விவரங்கள் அனைத்தையும் விவரிக்கும் ஆவணமாகக் காணப்படுகிறது. இதில் மாதோட்டத்தை வந்தடைந்த படைகள், அங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கல்முனையில் தங்கியிருந்து, கொழும்புத்துறைக்கு வந்து, கொழும்புத்துறையில் யாழ்ப்பாண மன்னரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு, பின்னர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி, அங்கிருந்த இந்து ஆலயத்தை வழிபட்டதாக இந்த இலக்கியத்தில் கூறப்படுகின்றது. மாதோட்டம் வந்த படைகள் அங்கிருந்து பூநகரி ஊடாக கல்முனை வரும்போது அதன் மணற்பாங்கான தரையமைப்பையும் ஆளமற்ற கடற்கரையையும் வீசிய இதமான தென்றலையும் கவித்துவமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இன்றும் மண்டித்தலை, கல்முனை கடற்கரைக்குச் செல்வோர் அந்த அழகையும் இரம்மியத்தையும் உணர்வுபூர்வமாக உணரமுடியும்.  கல்முனையில் தங்கியிருந்த படைகள் பரவைக்கடலினூடாக கொழும்புத்துறையை அடைந்தபோது, பரவைக்கடலின் தன்மையும் ஆழமற்ற, அலைகள் இல்லாத, அமைதியான கடலின் ரம்மியமான அழகையும் இந்த இலக்கியம் வர்ணித்துச் செல்லுகின்றது. இதேநேரத்தில் குடாநாட்டிலும் வடபகுதியிலும் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள் காணப்படுகின்றன. இராமாயணம் ஓர் ஐதீகமான புராணமாகக் பார்க்கப்பட்டாலும் அந்த இடங்களினுடைய வரலாறும் அந்த வரலாற்று மையங்களில் பேணப்படுகின்ற மரபுகளும் சுற்றாடலில் வாழுகின்ற மக்களினுடைய வாழ்க்கையோடு இரண்டறக்கலந்திருப்பதனால், அவை இன்று வரலாற்றுப் பெருமையும் பழைமையும் வாய்ந்த அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரபல்யமான சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன.   குறிப்பாக, புத்தூரில் நிலாவரையிலுள்ள ஆழம் அறியமுடியாத நிலாவரைக் கிணறு இராமாயணத்துடன் தொடர்புடைய ஒரு சுற்றுலா மையமாக பேசப்படுகிறது. அதேபோல், யாழ்ப்பாணத்தில் வண்ணார் பண்ணையில் உள்ள வில்லூன்றி தீர்த்தக்கேணியும் இராமாயணத்துடன் தொடர்புடைய ஓர் இடமாகும்.

ஆராய்வோம்…….

Related posts

எனக்கு கொரோனாவா? -02

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

ஏகாதிபத்தியம் – 01

Thumi2021

Leave a Comment