இதழ்-25

சித்திராங்கதா – 25

கலாரசிகன்

‘மன்னர் தான் வந்திருக்கிறேன். கேள் மகளே, என்னிடம் என்ன கேட்கவென்று அரண்மனை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாய்? உனக்கு எதற்கு வீண் சிரமமென்றுதான் அன்னை வீரமாகாளி என்னை இங்கேயே வரவழைத்து விட்டாள். என்ன கேட்கவேண்டுமோ கேள் மகளே’

பெருவணிகர் எச்சதத்தர் பதறுகிறார். மன்னரிடம் மன்னிப்புக் கோருவது போல் மன்றாடினார். அரசர் அவரை கையமர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னார்.

பெருந்துயரத்தில் உழலும் எந்த ஜீவனும் அந்த சமயத்தில் ஒரு கம்பீரத்தைப் பெறுவது இயல்புதான். ஆனால் சித்திராங்கதாவின் கம்பீரம் அரசரை நேருக்கு நேரே கேள்வி கேட்கப் போதுமானதாக இருக்கவில்லை. வார்த்தைகளில் தடுமாறினாள்.

‘அது வந்து…. ஒன்றுமில்லை….’

‘ஏன் மகளே, அதுதான் நானே வந்துவிட்டேனே , கேட்கவேண்டியதுதானே, ஒருவேளை அச்சமோ?’

‘எனக்கென்ன அச்சம்? நீங்கள் இச்சிறுதீவின் ஒரு சிற்றரசர் என்றால் நான் நடன கலா லோகத்தின் ராணியாவேன். நான் ஏன் தங்களைப்பார்த்து அச்சப்பட வேண்டும்?’

மன்னர் பொறுமையாகவே பதிலளித்தார்.
‘அப்படியென்றால் இந்தச்சிற்றரசரிடம் கலாராணி கேட்ட வேண்டியதை நேரே கேட்கலாமே? இன்னும் ஏன் தயக்கம்?’

‘தாங்கள் தான் கலாராணியின நாட்டிய அரங்கேற்றத்தையே தடுத்து விட்டீர்களே’
கேட்டு விட்டாள்.

‘யார் அப்படிச் சொன்னது? அதே நாளில் இன்னொரு அவசர கடமை இருப்பதால் அப்போது வேண்டாமென்றேன். எப்போதுமே வேண்டாமென்றா தடுத்து நிறுத்தச் சொன்னேன்’

‘அப்படிச் சொல்ல உங்களால் ஒருபோதும் இயலாது. ஈழத்தில் வீசுகின்ற காற்றை தடுத்து நிறுத்த ஆணையிட்டுக் காட்டுங்கள். உங்கள் ஆணைக்கு காற்று கட்டுப்படுமாயின் இந்தக்கலாராணியின் அரங்கேற்றத்தையும் தாங்கள் தடுத்து நிறுத்தி விட்டதாய் நான் ஏற்கிறேன்.
ஆடுங்கால்களை அரங்கேற்ற விடாமல் தடுப்பதற்கு தாங்கள் சொல்லுங் காரணம் அவசரக்கடமை.
குறித்த நாளில் அளித்த வாக்குப்படி அரங்கேற்றத்தை நிகழ்த்தியாக வேண்டியதும் தங்களின் அவசியக் கடமையன்றோ? அதை மட்டும் மறந்து விடுதல் முறையாமோ?’

எச்சதத்தர் பொறுமையிழந்தார்.
‘மகளே போதும் நிறுத்து! மன்னர் முன் பேசுகிறோம் என்ற எண்ணத்தை மறந்துவிடாதே ‘
என்று சித்திராங்கதாவை அதட்டியபடியே மன்னரைப்பார்த்து
‘வேந்தே, என் மகள் அறியாப் பருவத்தினள். பிடிவாதக்காரி, கலையார்வம் கண்ணை மறைக்க ஏதேதோ பேசிவிட்டாள். தாங்கள் அதைப் பொருட்படுத்த வேண்டாம் அரசே’ என்றார் பணிவாக.

‘அப்பா , தாங்கள் இப்போது மட்டும் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? என் வார்த்தைகளின் உக்கிரத்தை மட்டும் காணும் உங்களால் என் உள்ளத்தின் வலியை உணர்ந்துகொள்ளமுடியவில்லையா?’
அவள் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்க தொடர்ந்தாள்.

‘முதற் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். என் அரங்கேற்றம் தடைப்படுவது என்னால் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளவே இயலாது அப்பா.
முகை அவிழும் மலரைப்பார்த்து ‘நாட்டில் அவசரப்பணிகள் ஆயிரம் இருக்கின்றன. அதனால் நீ இப்போது மலர வேண்டாம். மூடிக்கொள் உன் இதழ்களை’ என்று கட்டளையிடுவது போலல்லவா இருக்கிறது. இந்தக் கலாரசனை சிறிதும் இல்லாதவரையா இவ்வீழ தேசத்தில் நிகரில்லா தமிழ்வேந்தன் என்றீர்கள்’
என்று அவள் தந்தையை நோக்கி கூறுகையில் மன்னரை அவமதித்ததற்காய் கோபங்கொண்ட சேனாதிபதி மகிழாந்தகன்
‘பெண்ணே கோபத்தில் வார்த்தைகள் எல்லை மீறுவதை மறந்துவிடாதே. இதற்கு மேல் பொறுமை காக்க மாட்டேன்’ என்றான்.

மன்னர் அவனை நோக்கி கண்கள் மூலம் ‘அமைதி’ என்று கட்டளையிட்டார்.

‘மகளே சித்திராங்கதா, உன் சீற்றத்தை என்னால் உணரமுடிகிறது. நான் தமிழ் வேந்தன் தான். கலாரசனை மிக்கவன் தான். ஆடலரசி சித்திராங்கதாவின் நாட்டிய அரங்கேற்றத்திற்காய் எத்தனை ஆர்வமாய் காத்திருந்தேன் என நான் மட்டுமே அறிவேன். ஆயினும் கலைகளை நான் எந்த அளவிற்கு நேசிக்கிறோனோ அதை விட நூறுமடங்கு என் குடிமக்களின் வாழ்வு நலத்தை நேசிக்கிறேன். இந்த தேசத்தை அந்நியர்க்கு அடிமையாகாமல் காத்தருள எதை வேண்டுமானால் அர்ப்பணிக்க நான் தயாராய் இருக்கிறேன். அந்த வகையிலே இப்படி ஒரு முடிவினை எடுக்க நேரிட்டது. இதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அதை புரிந்துகொள்ள நீ பொறுமை காப்பதை விட வேறு உபாயமில்லை. பொறுமை கொள் மகளே. நான் விடைபெறுகிறேன்’
அரசர் விடைபெற்றார்.

சித்திராங்கதா ஓடிச்சென்று அன்னை வீரமாகாளியின் பாதங்களில் விழுந்து அழுதாள். அவளிற்கு அச்சமயம் அன்னையை விட யார் மீதும் நம்பிக்கை இருக்கவில்லை. இனியும் யாரையும் நம்புவதற்கும் அவள் தயாராக இல்லை.

அதேவேளை சங்கிலியனின் மனதிற்குள்ளும் சித்திராங்கதா கேட்ட கேள்விகளின் நியாயமே எதிரொலித்துக்கொண்டிருந்தன. அவள் உள்ளத்தின் வலி புரிந்தாலும் ஒரு கலாரசனையற்றவனாக – கொடுத்த வாக்கை காக்க மறந்த வேந்தனாக தன்னை அவள் எண்ணியதை எண்ணுகையில் சங்கிலியன் பெரிதும் மனமுடைந்து போனான் என்பதே உண்மையாகும்.

அன்றைய இரவு நிம்மதியற்றுத் தவித்த அவன் மனம் ஏகாந்தத்தைத் தேடி யமுனாஏரியை நோக்கிச் சென்றது.

ஒரு பெரிய தூணில் கைபதித்தபடி கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தான். அவன் உள்ளத்து வேதனையை அவ்விடம் அவனைத் தேடி வந்த மகாராணி மஞ்சரிதேவி அறிந்திருக்கவில்லை. தன் வீணையை எடுத்து வந்து வாசிக்கத் தொடங்கினாள்.

யாமுனா ஏரியில் தேங்கின நீர் கூட அந்த மோகன நாதத்தில் லயித்து அசைந்து கொண்டிருந்தன. ஆனால் நெடுநேரமாகியும் சங்கிலியன் எதையுங் கண்டுகொள்ளவில்லை.

பொறுமையிழந்து அழைத்தாள் மஞ்சரிதேவி.
‘பிரபு … பிரபு…’

தாமதமாகவே சங்கிலியன் தலைதிருப்பி ராணியைப் பார்த்தான்.

‘என்ன தேவி . ஏனழைத்தாய்?’

‘நல்லவேளை. நான் அழைத்ததாவது காதில் விழுந்ததே. நான் எத்தனையோ நேரமாய் இங்கு வீணை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் தங்களிற்குப் பிடித்த மோகன இராகத்தை உருகி உருகி வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தாங்கள் எதையுங் கண்டு கொள்ளாமல் மனத்தை எங்கோ சஞ்சரிக்க விட்டவராய் காணப்படுகிறீர்கள்’

‘ஆம் தேவி, காலாரசனையற்ற என்னிடம் போய் நீ வீணைநாதம் விளங்கவில்லையா என்று கேட்டால் எப்படி’

‘பிரபு, என்ன கூறுகிறீர்கள்? நான் தவறாக ஏதும் பேசி விட்டேனா? ஓயாப்பிரச்சனைகளில் உழலும் தங்கள் இதயத்துக்கு இதமாக இருக்கவேண்டுமென்றுதான் வீணையின் நரம்புகளில் என் விரல்களை நாட்டியமாடச்செய்தேன். அது தங்கள் சிந்தையைச் சேரவில்லை என்றால் என் இசையில் நளினமில்லை என்றல்லோ அர்த்தம். பரமகலாரசிகனான தங்கள் மனதைத் தொடும் சக்தியை இழந்து நிற்கிறது என் வீணைநாதம் என்றல்லவா பொருள்?’

‘அப்படிக்கூறாதே தேவி, தவறு உன் வீணை நாதத்தில் இல்லை. இசையில் மனதை லயிக்க விடாதபடி கலாரசனையற்றவனாகி விட்டேன் நானென்று ஒரு சிறுபெண்ணே இன்று தெளிவாய்க் கூறிவிட்டாள். அவள் கூறியதிலும் உண்மை இருக்கிறது தேவி..’

‘பிரபு.. யாரைப்பற்றிப் பேசுகிறீர்கள்? என்னைப்பற்றியா கூறுகிறீர்கள்?’

‘உன்னைச் சொல்லவில்லை தேவி, பெருவணிகர் எச்சதத்தர் புதல்வி சித்திராங்கதா’

‘சித்திராங்கதாவா.., அவளுடைய நாட்டியத்தைக் கண்டு தாங்களே எத்தனைமுறை என்னிடம் வியந்துரைத்திருக்கிறீர்கள் பிரபு, அவள் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?’

‘அவளது அரங்கேற்றத்திற்கு குறிக்கப்பட்ட நாளிலேதான் அவசரமாய் வன்னியர் விழா நிகழ்த்த முடிவாகிவிட்டது. அதற்கு அவளது அரங்கேற்ற விழாவையே நாங்கள் தடுத்து நிறுத்தியதாய் எண்ணிவிட்டாள். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாள். கலாரசனையற்ற தமிழ்வேந்தன் நான் என நேருக்கு நேரே கூறி விட்டாள்’

‘இப்படியெல்லாம் பேசுமளவு அவளை ஏன் அனுமதித்தீர்கள் பிரபு? நாணமற்று நாகரிகமற்று பேசிய நாவை அப்போதே கண்டித்திருக்க வேண்டாமா?’

‘இல்லை தேவி, நான் உணர்ச்சிவசப்படலாகாது. பாவம் அவள் ஒரு பேதைப் பெண். ஆடற்கலை மீது அவள் கொண்டுள்ளது ஒரு தீராத மோகம். அது அவள் நாட்டியத்தை பார்க்கும்போதே புரியும். அந்த மோகமே அவளை அப்படிப் பேச வைத்துவிட்டது.’

‘என்னதான் கலைமோகம் என்றாலும், தங்களை அவமதித்துப் பேசியவளை தண்டிக்காமல் விடுவதா?’

‘இல்லை தேவி, அவள் தமிழ்ப்பெண். ஆடற் கலையரசி. அவள் எம்மண்ணின் ஒரு கலைச்சொத்தாகும்.’

‘அதனால் அவளை மன்னித்து விட்டீர்களா?’

‘ஆம் தேவி, அவளை ஆடக்கூடாது என்று கூறி அரங்கேற்றத்தை நிறுத்தி விட்ட இந்தக் கலா ரசிகன் ஏரிக்கரையில் நின்று உன் வீணாகானத்தை இரசித்துக் கொண்டிருப்பது நியாயமாகுமா தேவி? நீயே சொல்’

‘வேண்டாம் பிரபு. தங்களை அது போன்ற அறத்துன்ப நிலைக்கு இனி நான் ஆட்படுத்தமாட்டேன். இந்த வீணையை இனி உங்கள் ஆணையின்றி கைகளினால் தொடவும் மாட்டேன்’

‘அவசரப்படாதே மஞ்சரி, நீயும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையா? உன்னை வீணையே வாசிக்கக்கூடாது என்றா கட்டளையிட்டேன். ஒருநாள் ஒருபொழுதாவது இந்த வீணையை வாசிக்காமல் உன்னால் இருக்கமுடியாது. நாதம் உன் மூச்சு என நானறிவேன். நீ விரும்பும் நேரம் தனிமையில் வாசித்துக்கொள் தேவி’

‘பிரபு., தனியே எனக்கென்று என்ன சந்தோசம் இருக்கிறது. தங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாகும்.’

சங்கிலியன் மஞ்சரி தேவியின் அன்பு மொழிகளினால் உள்ளம் குளிர்ந்தவராக தேவியை வாரித் தழுவினார்.

‘தேவி நாட்டு மக்களின் மகிழ்ச்சியை என் மகிழ்ச்சி என்று நான் கூறுகிறேன். என் மகிழ்ச்சியை உன் மகிழ்ச்சி என்று நீ கூறுகிறாய். உயர்ந்த தியாக உள்ளம் கொண்டவள் நீ. உன் உள்ளத்தின் மாண்பை நான் நன்கறிவேன். அதை இந்த நாடே அறியும் திருநாள் ஒன்று வரும். அப்போது நீ இந்த ஈழத்திருநாட்டின் ஈடில்லா அன்னையென போற்றப்படுவாய்’

மன்னரின் இதமான அணைப்பிலும், இனிமையான பேச்சிலும் மெய்மறந்து நின்றிருந்தாள் ராணி மஞ்சரி தேவி.

ரசனை நீளும்…

கலைக்கொரு தோல்வி கிடையாது!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டின் குறிஞ்சிச்சாரல் ஒரு மாத திட்டமிடலுடன் மட்டுமே அமர்க்களமாய் நடந்த நிலையில் அடுத்தவருட குறிஞ்சிச்சாரலுக்கான திட்டமிடல்கள் அப்போதே ஆரம்பிக்கப்பட்டது. கைகூடவில்லை. இருவருட தாகத்தோடு 2019 ஆம் ஆண்டு குறிஞ்சிச்சாரல் குறி வைக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் அரங்கேற ஆரம்பம் முதலே ஒத்திகை பார்க்கப்பட்டன. அதில் ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு ஈழத்து வரலாற்று நாடகம் தான் இந்த சித்திராங்கதா..

கடினமான தொடர் வசனங்களை மனப்பாடம் செய்து பாத்திரங்களுக்கு உயிரூட்டி இரவு பகலாய் மெருகேறியது இந்த நாடகம்.

தவிர்க்க வேண்டிய சில காரணிகள் தவிர்க்க முடியாததாய் தவித்தமையால் தவிர்க்கப்பட்டது அந்த வருட குறிஞ்சிச்சாரல். மேடை ஏறாமலே அவமானப்பட்டது ஒத்திகை பார்க்கப்பட்ட கலைகள் பல.

நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எண்ணிய நல்லன நடந்தே தீரும். கலைக்கு மரணம் இல்லை. அதன் ஒரு வடிவத்தை அழித்தால் மறு வடிவத்தில் வந்து நிற்கும் என்பதற்கு நிகழ்கால சாட்சி இந்த சித்திராங்கதா… நாடகம் நடாத்தப்பட முடியாமல் போன இடத்தில் காவியமாய் தொடர் நாவலாய் வருகிறாள் சித்திராங்கதா.. தோழர் காவ்யமோகனின் தேடலின் தெறிப்பு துமியின் மின்னிதழில் அவருக்கேயுரிய எழுத்துருவில் வருகிறது. எழுத்தை ஓவியமாக்கி தருகிறார் தோழர் திவாகரன்.

யாழ்ப்பாண வரலாற்றின் படி சங்கிலியன் காலத்தில் நடந்த கதை. வரலாறாய் இது நிலைப்பது உங்கள் கைகளில்…

நடக்க வேண்டியது நடந்தே தீரும்…
எண்ணம் போல் வாழ்க்கை…

Related posts

ஏகாதிபத்தியம் – 02

Thumi2021

வழுக்கியாறு – 19

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 25

Thumi2021

Leave a Comment