இதழ்-26

ஈழச்சூழலியல் 13

ஈழச்சூழலியல் எனும் பெரும் ஆய்வுப்பரப்பில் காலநிலை

மாற்றம், விவசாயச்செய்கை, சுற்றுலாத்துறை என்பனவற்றை தொடர்ந்து மண்ணியல் எனும் பெரும் உப பரப்பை ஆராய்ந்து அணுக வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தை பொறுத்தவரையில் புவிச்சரிதவியல் தொடர்பான ஆய்வுகள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலேயே மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. முதல் ஆய்வினை பேரரசு நிறுவனம் (Imperial Institute) எனும் அமைப்பே மேற்கொண்டது. மண் ஓர் உயிரமைப்பு ஆகும்.(Soil is alive). யாழ்ப்பாண குடாநாட்டில் வளங்குறைந்த மண்ணிலிருந்து வளம் கூடிய மண்வரையில் பல்வேறு மண்வகைகள் காணப்படுகின்றன. அனுபவ அறிவினைக்கொண்டு ஜந்து மண் வகைகளை பிரதானமாக குறிப்பிடலாம். அவையாவன சுண்ணாம்புக்கல், உவர்மண், வெண்மணல், செம்மண், நரைமண் என்பனவாகும்.

யாழ்குடாநாட்டின் வட கரையோரங்களிலும், வடமேற்கு கரையோரங்களிலும் சுண்ணாம்புக்கல் பிரதேசம் காணப்படுகின்றது. இப்பகுதிகளில் சுண்ணாம்புக்கல் வெளியரும்பிக் காணப்படுகின்றது. குடாநாட்டின் உட்புறத்தில் இருக்கும் உப்பாறு, தொண்டைமானாறு, வடமாராட்சி ஆகிய கடல்நீர் ஏரிகளை சூழ்ந்து உவர்மண் பிரதேசம் காணப்படுகின்றது. குடாநாட்டின் வடகீழ் பகுதியிலும் தென்மேல் கரையோரங்களிலும் வெண்மணல் காணப்படுகின்றது. குடாநாட்டின் மத்தியபகுதியில் சுன்னாகத்தை மையமாக கொண்ட நிலப்பகுதியில் செம்மண் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நரைமண் காணப்படுகின்றது. இம்மண் மணலும், களியும் கலந்துள்ள மண் வகையாகும்.

அந்த வகையில் ஈழப்பரப்பெங்கும் வியாபித்து காணப்படும் சில மண் வகைகள் பற்றி அறிவோமாயின்,

செங்கபில நிறமண்:- மழைவீழ்ச்சி மிகக் குறைவாகவுள்ள இலங்கையின் உலர்வலயப் பிரதேசங்களில் இது பரவிக் காணப்படுகின்றது. அதாவது வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது. இம் மண் நுண்ணிய இழையமைப்பையும், மிதமான அமிலத்தன்மையையும் உடையது. இது ஈரமாயிருக்கும்போது இளகி ஒட்டும் தன்மையுடனும், காய்ந்திருக்கும்போது இறுகிக் கடியமானதாகவும் காணப்படும். இங்கு சேனைப்பயிர்ச்செய்கை, நெற்செய்கை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

செம்மஞ்சள் பொட்சோலிக் மண் (செம்பூரன் ஈரக்களிமண்):- மத்திய மலைநாட்டின் பெரும்பகுதியையும், தென்மேல் தாழ்நிலத்தின் மேற்கயல் பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் செம்மஞ்சள் பொட்சோலிக் மண் பரந்துள்ளது. குறிப்பாக இம்மண்ணானது குருநாகல், கொழும்பு, கம்பகா, கழுத்துறை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மென்சாய்வான மலைசார்ந்த பகுதிகளிலே பூரண வடிதலுக்கட்பட்டும், சிவப்பு மஞ்சள் நிறத்தைக் கொண்டும் ஓரளவுக்கு நுண் இழைகளைக் கொண்டும் அடர்த்தியான திரவத்தைக் கொண்டும் விளங்கும் மண் இதுவாகும். இம்மண்ணில் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

செம்மஞ்சள் லற்றோசல் :- செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது புத்தளத்தின் வடகீழ் பகுதி, சில வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் என்பவற்றில் காணப்படுகின்றது. இம்மண்ணானது மிகவும் ஆழமாக பொதுவாக 6 மீற்றர் ஆழத்தில் காணப்படும். இடைநிலைத் தன்மை கொண்ட இழையமைப்பையும், நன்கு நீர்வடிந்து செல்லக்கூடிய தன்மையையும் உடையது. குழாய்கிகணறுகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யக்கூடிய தரைக்கீழ் நீர்வளத்தைக் கொண்டுள்ளமையால் நீர்ப்பாசனத்துடன் இடம்பெறுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும்.

கல்சியமற்ற கபிலநிறமண்:- வரண்ட பிரதேச மலைச்சரிவுகள், கிழக்குத் தாழ்நிலப் பகுதிகளில் கல்சியமற்ற கபில நிறமண் காணப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, பொலநறுவையின் கிழக்குப் பகுதி, அநுராதபுரம், வடக்கு குருநாகல், மொனராகலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மண்னானது செங்கபில நிறமண்ணுடன் இணைந்த வகையில் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இடைத்தரமான இழையமைப்புடனும்இ மட்டுப்படுத்தப்பட்ட நீரை வடியவிடும் இயல்பையும் கொண்டது. செங்கபில நிறமண் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை இம்மண்ணிலும் மேற்கொள்ளக்கூடியதாகவிருந்தாலும், இம்மண்ணானது கூடிய நீர்ப்பாசனம், மற்றும் உர உபயோகம் என்பவற்றை வேண்டி நிற்கின்றது.

செங்கபிலநிற லற்றோசோலிக் மண் (செங்கபில ஈரக்களிமண்):- செங்கபில ஈரக்களி மண்ணானது கண்டி மேட்டு நிலம், நுவரெலியா, கல்கெதர, மாவனெல்ல, மிட்டினியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. பூரணம் முதல் மத்திமம் வரையான வடிதலக்குட்பட்ட செங்கபில நிறமான மத்திம இழைகளைக் கொண்ட அமிலச் செறிவு கொண்ட மண்இதுவாகும். பள்ளத்தாக்கின் அடிமட்டம் முதல் குன்றுகள் நிலத்தோற்றம் வரை பரந்துள்ளது. இம் மண் பயிர்களில் பெருந்தோட்டப் பயிர்களான தேயிலைஇ இறப்பர் போன்றவற்றுடன் வேறுபல பயிர்வகைகளும் வளர்கின்றன.

ஆராய்வோம்……..

Related posts

அன்புடையோம்! நன்றி உடையோம்!

Thumi2021

வழுக்கியாறு – 20

Thumi2021

குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படும் போது செய்ய வேண்டியது என்ன ????

Thumi2021

Leave a Comment