இதழ்-26

நிலாந்தனின் மண் பட்டினங்கள் -வாசகர் பார்வை

1990களின் முற்பகுதிகளே எழுதிய கவிதைகளை ஒரு நாடக வடிவில் நவீன கவிதை நாடகமாக “மண் பட்டினங்கள்” ஆக படைத்துள்ளார் எழுத்தாளர் நிலாந்தன். எழுத்தாளர், நாடக நெறியாள்கையாளர், வரலாற்று ஆய்வாளர், ஓவியர் என பன்முகத்திறமையுள்ளவர். மண் பட்டினங்கள் தவிர அரசியல் சிந்தனை நூல் வரிசை 14: 2009 இற்குப் பின்னரான தமிழ் ராஜதந்திரம், அரசியல் சிந்தனை நூல் வரிசை 3: நினைவு கூர்தல் 2017, நவீன பஸ்மாசுரன், யாழ்ப்பாணமே ஓ… எனது யாழ்ப்பாணமே, யுகபுராணம், வன்னி மான்மியம் ஆகியன இவரது ஏனைய நூல்களாகும். இதிலிருந்து இவர் தேர்ந்த இலக்கிய அனுபவம் உள்ளவர் என்பது புலனாகிறது.

வரலாறு, சமூகம், நாடகம், கவிதை ஆகியன கலந்த அரசியல் இழையோடும் ஒரு வரலாற்று பதிவே நிலாந்தன் அவர்களின் “மண் பட்டினங்கள்” நூல். மு.பொன்னம்பலம், மு.திருநாவுக்கரசு ஆகிய இருவரின் அணிந்துரைகள் நூலின் இறுதியில் அமைந்துள்ளன. எஸ்.வி.ராஜதுரை அவர்களின் பதிப்புரை நூலின் முதற்பக்கத்தில் உள்ளது. நூலின் முகப்பு மண்ணினால் ஆக்கப்பட்ட இடிந்த பட்டினம் ஒன்றின் படத்தால் ஆக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நூலின் உள்ளடக்கம் தெளிவாகும் வகையில் உள்ளமை சிறப்பு .

இங்கு பதிப்புரையில் குறிப்பிடுவதைப் போல ‘எழுதியதை அச்சிட முடியாத ஈழத்து படைப்பாளிகள் ஏராளம்’ அப்படி அச்சிட்டாலும் அதை நுகர்வோர் அதனிலும் குறைவே. இங்கு நிலாந்தன் அவர்களின் இந்த நூல் அச்சிடப்படுவதற்கும் ஓராண்டு காலம் எடுத்துள்ளது. இருபது வருடங்கள் கழிந்தும் கூட நமது இலக்கியங்கள் இன்னும் எட்ட வேண்டிய உயரங்கள் எட்டாமல் இருப்பது வேதனைக்குரியதே.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு என ஊர் ஊராக அலையும் இடப்பெயர்வுகளை முன்னிறுத்தியே பட்டினம், பட்டினமாக அலையும் இடப்பெயர்வுகளை இவ்வாறு விளக்குகின்றார்.
‘ஒரு பட்டினத்துக்குப் பதிலாக
இன்னொரு பட்டினம்
பட்டினங்கள் மீது பட்டினங்கள்
தலைப் பட்டினங்கள்
சிறு பட்டினங்கள்
எல்லாமே பாழடைந்த பட்டினங்கள்”
எப்போதும் மனிதர்களை,
இயற்கையே வெல்கிறது என்பதை,
‘மனிதர்களை மனிதர்களே
கொன்றும் எரித்தும் விட்டார்கள் ஆனால் ,
மனிதர்களை விட மூத்ததும்
பெரியதுமான கடல் வங்கக்கடல்
எதனாலும் காயப்படாமல்
எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும் ஏக நிச்சயமாக’

எப்போதும் மனிதர்கள் யுத்தத்தினாலோ அல்லது சமாதானத்தினாலோ நிரந்தர அமைதியை பெற்றுவிடுவதில்லை என்பதை விளக்க பின்வருமாறு ,
‘இதோ மனிதர்கள்
மறுபடியும்
வருகிறார்கள்
இனி மண்ணால்
ஒரு பட்டினத்தைக்
கட்டுவார்கள்’
என்கிறார் கவிஞர் .

மேலும் எப்போதும் இராச்சியங்கள் நிலையாக ஒருவருக்கு சொந்தமாகவோ ,அழியா ஒளியுடையதாகவோ இருக்காது என்பதை ‘பதுங்கு குழிகளுக்கு” ஒப்பிட்டு இருண்ட காலத்தை பற்றி எடுத்துரைக்கிறார் . இயற்கையின் எழிலை ஆட்காட்டிப் பறவைகள், மழை, மண், காடு, பனைமரங்கள் போன்ற வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு மட்டும் உரிய சிறப்பம்சங்கள் ஊடாக உவமிக்கிறார் .

சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புக்களை எடுத்தியம்பும் வகையில் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிறப்பு பற்றியும் ,அவர்கள் எழுதிய அபூர்வ மொழி பற்றியும் அது இன்று வரை யாராலும் வாசித்தறிய முடியாமை பற்றியும் ,அங்கு நடைபெற்ற போரால் அந்த நதிக்கரை நாகரிகம் அழிந்தது பற்றியும் கூறி அந்த வரலாற்று நிகழ்வை கந்தரோடையில் இராச்சியம் தோல்வியுற்றதற்கு ஒப்பிடுகிறார். மேலும் பபிலோனில் யூதர்களுக்கு இடம்பெற்ற கொடுமையிலும் அவர்களின் மனவுறுதியை எண்ணி வியப்பதாக குறிப்பிடுகிறார். இதிலிருந்து உலகநடப்புகள் பலவும் இவ்வாறே நடந்துள்ளன என குறிப்பிட்டு அமைதியடைச்செய்கிறார்.

யூதர்களை வேரறுக்க முடியவில்லை என்பதையும், தஸ்யுக்கள் தப்பிச் சென்று விடுவதையும் குறிப்பால் உணர்த்துகிறார்.

துயிலும் இல்லத்து மாவீரர்களை இளம் தஸ்யுக்களுக்கு ஒப்பிட்டு அவர்கள் மீண்டெழுவதாக அரசியல் பேசுகின்றார். இடையிலே சிந்துசமவெளி பற்றி வரலாற்று நிகழ்வுகளை விளக்குகின்றார். முதல் படையெடுப்புடன் நாடகபாணியில் விளக்குவதன் ஊடாக நடந்த நிகழ்வுகளை ஊகிக்கவைக்கிறார். சிந்துவெளி மனிதர்கள் ‘சப்பை மூக்கர்கள்,கறுப்பர்கள்’ என்று வரலாற்று ஆய்வினை குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து கதிரமலை அரசு ஸ்தாபிக்கப்படுவதைக் கூறி, அதை சோழப்படை அழிப்பது என வ்ரலாற்றை மீட்கின்றார் .

மேலும் 1982ல் கண்டறியப்பட்ட ‘ஆனைக்கோட்டை மனிதனின் எலும்புரு’ போல இன்னும் எத்தனையோ அகழ்வுகள் புலப்படக்கூடும் என எதிரொலிக்கிறார்.மறுபடி கவிதையூடாக சோழப்படை யெடுப்பு, போர்த்துக்கீசப் படையெடுப்பு, ஒல்லாந்தப் படையெடுப்பு, இந்திய படையெடுப்பு இறுதியில் ராணுவப்படையெடுப்பு என நம் நாட்டில் நிகழ்ந்த போர்களை விவரிக்கையில் நாட்டுப்பற்றுள்ள கவிஞனை காணலாம்.

விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கருவாகக் கொண்டே ஏனைய வரிகள் அமைந்துள்ளன. நம் நாட்டின் வீரர்களான துட்டகைமுனு, பண்டார வன்னியன் போன்றோரின் வரலாற்றை மீட்டுகின்றார். விடுதலைப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தபடி விடைபெறுகிறார் கவிஞர் .

48 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல் பெரும்பாலான வரலாற்று உவமைகள் மூலமாக விடுதலைப்போரை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் குறையும் அதுவே. தனியே கவிதைகள் மூலமாக எழுதிவிட்டு பின்னர் அல்லது முன்னரே வரலாற்று நிகழ்வினை விளக்கி எழுதியிருப்பின் ஒரு தொடர்ச்சியை பேணியிருக்க முடியும். அதை விடுத்து கவிதைகளின் தொடர்ச்சியை வாசகனால் விளக்கிக் கொள்ள முடியாமல் நடுவில் விளக்கி இருப்பது வாசகனை அயர்ச்சி அடையச்செய்யும் செயல். மேலும் அணிந்துரைகள் நூலின் ஆரம்பத்தில் இருந்திருந்தால் வாசகனை புரிதலுக்கு இட்டுச்செல்வது இலகுவாக இருந்திருக்கும் .

மேலும் அடிக்கோடிட்டு காட்டியுள்ள சில சொற்களின் விளக்கங்கள் சிறப்பாக உள்ளன. சொற்கட்டு, எளிய நடை, தொடர்ச்சி, உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தியுள்ளார். இது காலத்தை தாண்டியும் படித்தறிய வேண்டிய ஒரு வரலாற்று கவிதை நூல் என்பதில் ஐயமில்லை. இக்காலத்தில் வெறுமனே சமூக ஊடகங்களில் கருத்து சொல்வதை விடுத்து இவ்வாறான ஆக்க இலக்கியங்களில் மாணவர்கள் ஈடுபட இவ்வாறான நம்மூர் இலக்கியங்களை வாசித்தறிதலும் தூண்டுகோலாக அமையும் .நமது நாட்டு இலக்கியங்களை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதில் நாம் நிச்சயம் பங்களிக்க வேண்டும் என்பதே என் அவா.

‘வேகத்தை விட மூத்த நாடொன்றின்
அழிவுகளிலிருந்தும்
அவர்கள் எழுந்து வருகின்றார்கள்.’

புத்தக இணைப்பு :

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Related posts

அவிழ்ப்பதற்கா முடிச்சுக்கள்?

Thumi2021

வழுக்கியாறு – 20

Thumi2021

மரணங்கள் மீதான பொறாமை

Thumi2021

Leave a Comment