கேப் டவுன் இல் நடந்த முதல் டெஸ்டில் 2வது (தென்னாப்பிரிக்கா) மற்றும் 3வது (அவுஸ்திரேலியா) இன்னிங்ஸ்களில் மழ மழவென விக்கெட்டுகள் வீழ்ந்து குறைந்த ரன்கள் பெறப்பட்டது. அதில் ஆஸி வெறுமனே 47 ரன்களை – 107 வருடங்களில் மூன்றாவது குறைவான ஸ்கோர் பெற்றது. முதல் டெஸ்டிலும் தோல்வியுற்ற அவுஸ்திரேலியா அணி, ஜோகன்ஸ்பேர்க் இரண்டாம் டெஸ்ட்டில் இறுதி நாளில் 8 விக்கெட் இழந்த நிலையில் 18 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. டெல் ஸ்ரேயின் – வேர்ன் பில்லாந்தர் கையில் புதிய பந்து வேறு. எதிர்கொள்ள தன் அறிமுக போட்டியில் 18 வயதான பட் கம்மின்ஸ் ஆடுகளம் நுழையும் போது தென்னாப்பிரிக்காவின் 2வது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் என மொத்தமாக ஏழு விக்கெட்களை வேகமும் ஸ்விங்க்கும் ஆன தன் பந்து வீச்சு மூலம் வீழ்த்தி இருந்தான். முதல் தர ஆட்டங்களில் தன் பந்து வீச்சை நிருபித்து டெஸ்ட் அரங்கில் அறிமுகம். அப்போது இந்த சிறுவன் ஒரு நாள் அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவனாவன் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது ஆஸியை தன் துடுப்பாட்டத்தினால் காப்பாற்ற வேண்டும். கம்மின்ஸ், ஒன்றை எட்ஜ் (Edged) ஆகி மூன்று ரன்களும் , இன்னொன்றை புல் (Pull shot) ஆட முயன்றார். சிலவற்றை தன் பேட்களில் இருந்து ஆடினார். ரைவ் (Drive) செய்ய முயற்சித்தபோது துடுப்பில் படவில்லை. பின்னர் இம்ரான் தாஹிர் பந்தில் எதிரான ஒரு எல்.பி.டபிள்யூ ரிவ்யூவில் இருந்து தப்பினார், பின் அடுத்த பந்தில் நம்பிக்கையுடனும் திறமையாகவும் மிட்விக்கெட் திசையில் ஆடி வெற்றி ரன்களைப் பெற்றத்தந்தார்.
அறிமுக ஆட்டத்திலே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டு உலக கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தாலும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தவொரு டெஸ்ட்டிலும் விளையாடவில்லை.
கம்மின்ஸ்க்கு நான்கு வயதாக இருந்தபோது வலது கை நடுவிரலின் நுனி பகுதி கதவில் நெரிபட்டு துண்டானது. பந்து வீசும் கையில் நடுவிரலும் ஆட்காட்டி விரலும் ஓரே அளவில் இருந்தாலும் பயிற்சியினால் முன்னேறி டெஸ்ட் அறிமுகத்தில் கலக்கிய பட் கம்மின்ஸ்க்கு, தொடர்ச்சியான காயங்கள், உபாதைகள் என்பன கம்மின்ஸின் கிரிக்கெட் பயணம் தொடராமல் தடுத்தது. இதன் போது வணிகத்தில் இளங்கலை பட்டத்தை சந்தைப்படுத்தலை major ஆகவும் முடித்தார். இது அவருக்கு கிரிக்கெட் விளையாட முடியாதமை பற்றி சிந்திப்பதை தடுத்தது.
சில குறிப்பிட்ட காயங்கள் வராமல் தடுக்க, ஆஸியின் முன்னாள் பந்து வீச்சு லெஜென்ட் ‘டெனிஸ் லில்லி’ யின் ஆலோசனைகளுடன் தனது பந்து வீச்சு பாணியை 2013/14 பருவகாலத்தில் மாற்றினார். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மட்டும் ஆடி வந்த கம்மின்ஸ், 2015 ஆண்டு சாம்பியனான அவுஸ்திரேலியாவின் உலக கிண்ண அணியிலும் இடம் பிடித்து உலக கிண்ணம் வென்ற வீரரானார்.
2017 மார்ச்சில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் முதலாவது முதல்தர நான்கு நாள் ஆட்டத்தில் மீண்டும் விளையாடினார். இதே காலகட்டத்தில் இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டெஸ்ட் ஆடிக்கொண்டிருந்த அவுஸ்திரேலியா அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலக பட் கம்மின்ஸ் மாற்று வீரராக சிட்னியில் இருந்து இந்தியா வந்தார்.
மூன்றாவது ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ரன்கள் எடுக்க, வெற்றி-தோல்வி இன்றி முடிந்த தனது இரண்டாவது டெஸ்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் 39 ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். நான்கு நாள் இடைவெளியில் தொடங்கிய அடுத்த போட்டியில் 38 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.
தொடர்ச்சியாக பிரகாசித்து வந்த பட் கம்மின்ஸ், பெப்ரவரி 2019 இல் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து தொடர்ச்சியாக இன்றுவரை தன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். காயங்கள் உபாதைகளால் பந்து வீச முடியாத போது கற்றுக் கொண்ட தன் துடுப்பாட்டம் மூலமும் அணிக்கு தேவையான நேரத்தில் கை கொடுத்து வருகிறார்.
2017இல் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் வருகைக்கு பின், அவுஸ்திரேலியா விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களில் இன்று வரை வெறுமனே இரு டெஸ்டில் தான் (2018இல் பாகிஸ்தான் தொடர்) கம்மின்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.