நம்பிக்கைகளும் வழக்கங்களும்
புராதன காலத்தில் இவ் வழுக்கியாற்று தொகுதியில் காணப்படும் குளங்கள் கால்வாய்கள் என்பன பூதங்களை கடவுளின் உதவிகொண்டு அரசர்கள் அடக்கி அவற்றின் மூலம் கட்டுவித்ததாக இன்று வரை இக்கிராம வாசிகள் நம்புகின்றனர். ஆற்றின் பிரதான வாய்க்காலின் இருபுறமும் கோயில்கள் பலவற்றை அவதானிக்க முடிவதுடன் இக்கோயில்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்தனவாகவும் காலத்தால் முற்பட்டவையாகவும் விளங்குகின்றன. புராதனமக்கள் வழுக்கியாற்றுத் தொகுதியை தாம் வணங்கும் தெய்வங்கள் பாதுகாப்பதாக நினைத்தமை காரணமாக அதிக கோயில்களை ஆற்று வடிநிலப்பகுதியில் நிர்மானித்திருக்கலாம். ஆற்று படுக்கையின் கரைகளிலே சுடுகாடுகளையும் அவதானிக்க முடிகின்றது.
சைவ மக்களின் அபரக்கிரியைகளுக்கு நீரானது முக்கியத்துவம் பெறுகின்றமையினால் சுடுகாடுகள் ஆற்றங்கரைகளில் அமையப்பெற்றிருக்கலாம்.
பண்டைய காலத்தில் இவ் வழுக்கியாற்றுத்தொகுதியானது கதிரமலை (கந்தரோடை) இராசதானியை பகைவரின் ஆக்கிரமிப்பில் இருந்து தடுப்பதற்கும், நீர்வழி போக்குவரத்திற்கும், இயற்கையில் தாழ்வான பகுதியான கந்தரோடையை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கவும். விவசாய நிலங்களில் இருந்து மேலதிக நீரை வெளியேற்றவும் பயன்பட்டது.
ஆதிமக்கள் இயற்கைக்கு எவ்வளவு மதிப்பளித்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக சுவாரசியமான கதை ஓன்றினை கிராமவாசிகள் கூறுகின்றனர். அதாவது கந்தரோடை இராசதானியின் மன்னனான உக்கிரசிங்கன் கந்தரோடை குளத்தின் மத்தியில் அழகிய மாளிகை ஒன்றை நிர்மானிக்க ஆசை கொண்டதாகவும் இயற்கைக்கு மாறாக தாம் செய்யும் காரியத்தால் இயற்கை சீற்றம் கொள்ளக்கூடாது எனக்கருதி பெருமளவு தங்கத்தை குளத்தில் போட்டு இயற்கைக்கு காணிக்கையளித்ததாக கூறுகின்றனர்.
கந்தரோடையை சூழ்ந்துள்ள கிராமங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக உருவாகின இக்கிராமங்கள் பண்டய கதிரமலை இராசதானியின் பகுதிகளாக இருந்தமைக்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. கந்தரோடையின் வடக்குப்பகுதியில் அளவெட்டி, மல்லாகம் போன்ற கிராமங்களும் கிழக்காக சுண்ணாகமும் (புராதன பெயர் மயிலணி என்பதாகும்) தென்கிழக்காக உடுவில் கிராமமும் தெற்கில் சங்குவேலி கிராமமும் மேற்கு எல்லையாக சண்டிலிப்பாய் கிராமமும் (புராதன பெயர் கல்வளை என்பதாகும்) மாசியப்பிட்டி கிராமமும் அமைந்துள்ளன.
அளவெட்டி பகுதியானது ஆதிகாலத்தில் சேற்று நிலமாக காணப்பட்டது இதனால் இப்பகுதியூடாக எதிரிகள் உட்புக முடியா புதை குழிகளாக தொழிற்பட்டன. நீர் வழிந்தோடும் சேற்றுப்பாங்கான நிலத்தை அளவெக்கை என கூறுவது வழமையாகும். சேற்று நிலமாக இருந்த பகுதியை பிற்கால மக்கள் ஒரு பகுதியை குளமாகவும் மறுபகுதியை மண்ணால் நிரவி குடியிருப்பு பகுதியாகவும் மாற்றினர். இதற்கு ஆதாரமாக அக்கிராமத்தில் அதிகமான வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் காணப்படுவதுடன், கிராமத்தவர்கள் இப்பிரதேசத்தில் மண்ணை தோண்டும் போது கறுப்பு நிற சேற்று களியை அவதானிப்பதாகவும் கூறுகின்றனர். இதுவே புராதன சேறு ஆகும்.
மல்லாகம் என்பது மல்லர் கமம் அல்லது மல்லர் அகம் என்பதில் இருந்து மருவியது ஆகும். அதாவது இப்பகுதியானது போர்க்குடிகளின் குடியிருப்புக்களாக விளங்கின. போரும் விவசாயமும் இப்பிரதேசவாசிகளின் தொழிலாக புராதன காலத்தில் காணப்பட்டது. இதனால் இப்பகுதியூடக எதிரிகள் தலைநகருக்குள் உள் நுளைய முடியாது பாதுகாப்பான பகுதியாக இருந்தது.
மயிலணி என்பது முள்கொண்ட மயிலமரங்கள் அணியாக(வேலி போண்று) அமைந்திருந்தத காரணத்தால் உருவாகியது அதேபோல் சுண்ணாம்புக்கற் பாறைகள் மலையாக இருந்த காரணத்தால் சுண்ணாகம் என்ற பெயர் உருவாகியது. உடுவில் எனப்படுவது நீர் தேங்கும் வில்லாகும் இதன் தொடர்ச்சியாக உடுவில் குளம் தோன்றியிருக்கக்கூடும், முள்கொண்ட இசங்கு செடிகள் வேலியாக அமைந்திருந்த பிரதேசம் சங்குவேலி எனப் பெயர்பெற்றது. கல்வளை எனும் பெயர் கற்களில் அமைந்த குழி எனப்பொருள்படும் அதாவது பொறிக்கிடங்குகள் பரவலாக அமைந்த பிரதேசம் என கொள்ளமுடியும். மாசியப்பிட்டி எனப்படுவது புதிய பிட்டி என்ற பொருள் பட மண்ணினால் அமைந்த மதிலைக் கொண்ட பகுதியாகும். கட்டுடை என்பது இன்று ஜந்து கண் மதகு அமைந்த பகுதியாகும். இது வழுக்கியாற்று தொகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் இப்பகுதியே முழுமையான வெள்ளநீரை கடத்தும் பகுதியாகும். நீரை தேக்கும் பொருட்டு அமைக்கப்படும் அணைக்கட்டானது நீர்மட்டம் தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் பொழுது கட்டினை உடைத்து நீர்மட்டத்தை குறைக்கும் பிரதேசம் என்ற காரணத்தால் கட்டுடை என அழைக்கப்பட்டது.
மேலும் அறிய S. சண்முகராஜாவின் காலத்தை வெண்று நிற்கும் கந்தரோடை எண்ற நூலை படிக்கவும்.
ஆதிகாலத்தில் அரசர்களும் கிராமத்தலைவர்களாக காணப்பட்ட முதலிமார்களும் தம் ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்களை கொண்டு குளங்களையும் கால்வாய்களையும் சுத்தப்படுத்தி புணரமைத்து பேணி பாதுகாத்து வந்தனர். இதற்கென ஒரு சில சமூக குழுவினரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டனர். அளவெட்டி பிரதேசத்தில் காணப்படும் பினாக்கை குளத்தை வருடாவருடம் சேரும் சேறு, படிவுகளை அகற்றி துப்பரவாக்கும் குழுவினர் வாழ்ந்த பகுதியான குளமண்கால் கிராமம் இதற்கு சிறந்த உதாரணமாகும். ஆங்கிலேயர் காணிப்பட்டயம் வழங்குவதற்கு குளத்தில் வேலை செய்த கிராம வாசிகளிடம் உங்களது ஊரின் பெயர் என்ன எனக் கேட்க ஆங்கில அறிவு அற்ற அவர்கள் தமது காலில் ஒட்டியுள்ள சேற்றைபற்றி துரை கேட்கிறார் என நினைத்து குளமண்கால் எனக்கூற அதுவே அவ்வூர் பெயரானது என ஊர்ப்பெரியவர்கள் காரணம் கூறுவர். கல்வி அறிவற்ற அவ்வூர்மக்கள் கல்வி கற்க என ஆங்கிலேயர் பாடசாலை ஒன்றை அவ்வூரில் நிறுவியதுடன் மக்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாற்றி அங்கு ஓர் தேவாலயத்தையும் நிர்மானித்தனர்.
ஆறு ஓடும்…
உசாத்துணை நூல்கள்
1. Sivashanmugarajah.S, 2013. Kaalaththi Ventru Nitkum Kantharodai.
2. Sitrampalam. S. K, 1993. Yalppanam Thonmai Varalaru.
3.Sanmugeswaran Pathmanesan, (2010). A Social anthropological analysis of a ‘Temple-Centered Community: Jaffna in Northern SriLanka.
4. Kunarasa. K, valu nee valukkiarae