“விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்”
திரும்பும் திசை எல்லாம் மரண ஓலம். கை வேறு தலை வேறு கண் வேறு குடல் வேறாக பிளந்து போய்க்கிடக்கும் பிணங்கள். இரத்தத்தில் தோய்ந்த நிலமும் குளித்த கடலும் மரத்துப் போய் இருக்கிறது. சிதறிக்கிடக்கும் தசை துண்டங்களுக்கு நடுவே உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம். காற்றை கிழிக்கும் மீயொலி விமானங்களும் வெடிச்சத்தங்களும் காதை பதம் பார்க்க, கந்தக புகையும் பொஸ்பரஸ் நாற்றமும் கண்களை எரித்து மூச்செடுக்க முடியாது செய்கிறது.
“எங்கள் சங்கீதம் பிள்ளையின்
அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு
புகையிலே புதைத்தோம்
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்”
வீரம் என்று போர்ப்பறை முழங்கிய நெஞ்செல்லாம் ஷெல் பட்டு சிதறிப்போய் கிடக்கிறது. வானிலிருந்து பொழியும் குண்டுமழைகளுக்கு நடுவே உயிரை பறிப்பவர்களிடமே அபயம் வேண்டி மண்டியிடுகிறார்கள். அத்தனை மக்களின் கனவும் கானலாகிப் போக நிழலாக காத்து நின்ற ஆலமரம் ஆணிவேருடன் சாய்க்கப்பட்டதோடு ஒரு சரித்திரம் முடிவுக்கு வந்தது.
“வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு”
அத்தனை பேரும் உயிரை கையில் பிடித்தபடி சரணடைந்தார்கள். சரணடைந்த பின்னரும் சுட்டுக்கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், பட்டினி, வறுமை என்று இன்னும் கொடூரங்கள் நீண்டன.
அவர்களை காக்க அங்கே எந்தக் கடவுளும் வரவில்லை.
*
கி.மு ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் லாடா நாடு எனப்படும் இன்றைய மேற்குவங்க பகுதியில் ஆட்சி செய்த, சிங்கபாகு சிங்கசீவிலியின் மூத்த மகன் விஜயன்.
ஒழுக்க சீர்கேடுகளும் வன்முறைகள் நிறைந்தவனுமான விஜயனின் தொல்லை தாங்காது விஜயனையும் அவனது 700 தோழர்களையும் மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான் மன்னன். கப்பலில் சென்று கொண்டிருந்தவர்கள் புயலில் சிக்கி இலங்கையின் தம்பபன்னியை வந்தடைந்தார்கள். அங்கே இயக்கர் தலைவி குவேனியை கண்டு அவளுடன் காதல் கொள்ள,
“தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேக்குது
வா என் வாழ்வே வா”
என்று குவேனியும் அணைக்க, இலங்கைக்கு மன்னன் ஆகிறான் விஜயன். காதல் பரிசாக இரு குழந்தைகளும் பிறந்தது. பின்னர் விஜயன் குவேனியை துரத்தி விட்டு பாண்டிநாட்டு மதுராபுரி அரசகுமாரியை மணந்து முடிசூடிக் கொண்டான்.
*
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் சக்கரவர்த்தி அசோகனின் போர்வெறியும் இந்தியா முழுவதையும் ஆள வேண்டும் என்ற ஆசையும் அவனை அண்டை இராச்சியங்கள் மீதெல்லாம் போர் தொடுக்கச் செய்தது. செய்த போர்கள் அனைத்திலும் வெற்றியும் பெற்றான் அசோகன்.
“வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
அடுத்ததாக அவனது படை இன்றைய ஒரிசா அன்றைய கலிங்க தேசத்தின் மீது போர் தொடுத்தது. கலிங்கத்து மக்களை கொன்று குவித்ததோடு நில்லாது அவர்களது சொத்துக்களையும் சூறையாடியது மௌரியப் படை. நாடெங்கும் பிணம் தின்னி கழுகுகள் வட்டமிடும் சடலக் காடாக மாறியது. இரத்தத்தில் தோய்ந்த தேசம் அசோகனின் காலடியில் கிடக்கிறது. வெற்றியின் சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய அசோகனோ உடைந்து போகிறான். கலிங்கத்தின் நிலை கண்டு குலைந்த மனதுடன் இருந்தவனை ஒரு பௌத்த பிக்கு சந்திக்கிறார். புத்தரின் போதனைகளை போதிக்கிறார்.
“செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம் நீயே நிரந்தரம்”
அசோகன் மனம் தெளிந்து பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு
‘புத்தன் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி’ என்றபடி பௌத்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தான்.
புத்தரின் அன்பு நெறியை தர்ம நெறியை இந்தியா முழுவதும் பரப்பியதோடு இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பி புத்தரின் தர்ம போதனைகளை வியாபிக்கச் செய்தான்.
அந்த தொடர்ச்சியில் அவனது மகன் மகிந்தனும் மகள் சங்கமித்தையும் அரசமர கிளையோடு வந்து இலங்கையில் பௌத்தத்தை வேர் கொள்ள செய்தார்கள். பின்னர் அது அரியணையில் பற்றிக் கொண்டது.
*
கி.மு ஆறாம் நூற்றாண்டில் நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து இராச்சியத்தில் லும்பினி என்னுமிடத்தில் சுத்தோதனர் – மாயா என்பவர்களுக்கு மகனாக மே மாதத்துப் பூரணை தினத்தில் சித்தார்த்தன் பிறந்தார். பின்னாளில் அரசவையை திறந்து அவன் துறவியாகலாம் என்று ஞானிகள் எதிர்வு கூறியதால், அவனை அரண்மனையினுள்ளேயே வைத்து அத்தனை செல்வ செழிப்புகளையும் வழங்கி வெளியுலகம் தெரியாது வளர்த்தார் அவரது தந்தை சுத்தோதனர்.
16வது வயதில் யசோதரை என்பவளை மணந்து ராகுலன் என்ற மகனுக்கு தந்தையான சித்தார்த்தன் மேலும் அரண்மனை இன்பங்களில் மூழ்க்கிக்கிடந்த பின்னர் தனது 29 ஆவது வயதில் அரண்மனையை விட்டு வெளியில் வருகிறார். முதன்முதலாக வெளியில் வந்தவர், முதலில் ஒரு வயதான தள்ளாடும் கிழவனை எதிர் கொள்கிறார்.
“துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை”
என்று சுக போகங்களில் மிதந்து இளமைத் துடிப்பில் முறுகியிருந்த சித்தார்த்தனுக்கு முதுமை பற்றிய அச்சம் பற்றிக்கொண்டது. அந்த சலனத்துடனேயே கிழவனை கடக்க, அடுத்ததாக ஒரு நோயாளியை கண்டார்.
நோயியின் பிடியில் அவன் உழல்வதை கண்டு வருந்தினார்.
“தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா”
நோயாளியை கடந்து வர ஒரு பிண ஊர்வலத்தை சந்தித்தான் கௌதமன். நான் இறந்து விடுவேனா? இந்த வாழ்க்கை நிலையில்லையா? குழப்பத்தின் உச்சத்துக்கு போனான் சித்தார்த்தன்.
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா”
பிண ஊர்வலத்தை கடந்து வர ஒரு துறவியை சந்தித்தான் சித்தார்த்தன். ஆசைகள் தான் பாவத்துக்கு காரணம். இங்கு எல்லாம் மாயை என்று தெளிய ஆரம்பித்தது.
“பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றது என்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்”
அப்படியே அரண்மனையை விட்டு நீங்கி காடு மலைகள் நதிகள் குளங்களென்று அலைந்து தான் யார்? இங்கு பிறந்த தேவை என்ன? இந்த வாழ்வின் இரகசியம் என்ன என்ற தேடலில் மூழ்குகிறான்.
“தேடினேன் தேவதேவா தாமரைப்பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்
வேதகானம் பாடினேன்
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா”
அரச மரத்தின் கீழே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தவன் ஞானம் பெற்று புத்தன் ஆகிறான். போதனைகளை இப்படி ஆரம்பித்தான்,
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே”
புத்தனின் சொல்லுக்கு வாலி இப்படி விளக்கவுரை எழுதினார்,
“உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா”
*
நாங்களும் பூர்வீகக்குடிகள் தான்! எங்களுக்கும் உரிமை வேண்டும்! என்று கேட்டவர்களை நசுக்க, அவர்களுக்கு உலக நாட்டவரெல்லாம் ஆயுதங்களையும் பணத்தையும் அள்ளி வழங்கினார்கள்; பதிலாக நாட்டிலே வியாபாரம் செய்ய அனுமதி கேட்டார்கள். மதத்தின் வழி சொந்தங்களானவர்களின் உதவிகள் அதிகமாக இருக்கவே, வியாபார பங்காக துறைமுகத்தோடு புதிய நகரம் அமைக்கப்பட்டது. கவிஞர்கள் இப்படி எழுத தொடங்கினார்கள்,
“சீனத்துப் பட்டுமேனி
இளம்சிட்டு மேனி
செஞ் சீனத்து பட்டுமேனி
என் சின்ன ராணி”