வெட்டப்பட்ட குழிக்குள் மெல்ல மெல்ல அந்த பெட்டி இறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த பெட்டியை ஒரு கொடி முழுமையாக போர்த்தியிருந்தது. அடையாளங்களோடு பொருத்திப் பார்த்தால் அது ஒரு கடற்படையின் கொடியாக இருக்க வேண்டும். அந்த கொடியின் மேலே கடற்படையின் உயர்பதவிக்கு உரியவரின் தொப்பி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் அரசர்களின் வாள் ஒன்றும் இருந்தது. அதற்கும் அப்பால் சில விலையுயர்ந்த மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
பாவிகளுக்காக தன்னை வருத்திக் கொண்ட இயேசு பிரானின் சிலைகளும் சிலுவைகளும் ஆங்காங்கே தெரிந்தன. அப்படியென்றால் அது ஒரு தேவாலயம். காட்சிகளின் படி அங்கு யாரோ ஒருவரின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. மிகப் பிரமாண்டமாக ஒரு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. இருக்கைகள் பல இருந்தாலும் இருந்தவர்கள் சொற்பம். பாரதியாரைப்போல நிகழ்காலத்திற்காக தன்னை சமரசம் செய்து கொள்ளாத கொள்கைவாதி ஒருவரது மரணச்சடங்காக இருக்குமோ? நிச்சயமாக இல்லை. இது ஒரு கிருமியின் வேலை. கொரோனா பேரிடர் காலத்தில் எந்த விழாவானாலும் மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு முடித்து விட வேண்டும். அழைக்கப்பட்ட விருந்தாளிகளுக்கே அங்கே இடமில்லாத போது அழையா விருந்தாளியாக நான். அளவில் சிறியவன் என்பதால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. என் எஜமானர் வந்ததால் நானும் வந்துவிட்டேன். ஆம் பிரித்தானிய இராணுவத்தளபதிகளில் ஒருவரான பீட்டரின் சாவித் துணை (key tag) பேசுகிறேன். பீட்டரின் காதலி பிரியமாய் அளித்த பரிசு நான். அதனால் இதயத்திற்கு அருகில் சட்டைப்பையில் என்னைப் பத்திரமாக வைத்திருப்பான். அவரது சட்டப்பைக்குள் இருந்து எட்டி எட்டி என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது கேட்ட தகவல்கள் ஆட்டம் காண வைத்து விட்டன என்னை.
பிரித்தானியாவின் அரச வம்சத்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் தான் அங்கே நடந்து கொண்டிருந்தன. மரணம் சோகம் நிறைந்தது. ஆனால் செல்வந்த மரணங்கள் கொண்டாட்டமாகத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தை சூழ்ந்திருந்த குதிரைப்படை வீரர்கள் முதல் இராணுவ வீரர்கள் வரை சகலரின் அணிவகுப்பு மரியாதைகளோடு இளவரசரால் விரும்பப்பட்டு மாற்றி வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் காரில் அவரது பூத உடல் வைக்கப்பட, ஜெருசலேம், எல்கரின் நிம்ரோத் பான்ட் வாத்திய குழுவினர் இசை முழங்க ஊர்வலம் சென்றதாக பேசிக்கொண்டார்கள்.
அப்போது இளவரசருக்குரிய இறுதி மரியாதை செலுத்தும் குழுவுக்கு பொறுப்பு வகித்த கார்டர் பிரின்சிபல் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் குழுவின் முதன்மை ஆலோசகர், எடின்பரோ கோமகன் அவரது வாழ்நாளில் வகித்த பதவிகளின் பட்டியலை வாசித்தார். மெரியோனெத் எர்ல், ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல், பிரிட்டன் விமானப்படையின் மார்ஷல் என தொடங்கிய அந்த பட்டியல், கடைசியாக எலிசபெத் மகாராணியின் கணவர் என்ற பதவியுடன் முடிந்தது. அந்த பட்டியலை அவர் வாசித்த போது அங்கே ஒரு மூதாட்டியை பல கண்களும் மொய்த்தன. அவர் ஒருவித இறுக்கத்தில் தனித்திருந்தார். அவர் யார் என்பதை அறிய எனக்கு அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. காலமாகி விட்டவரின் காதலி! ஆம்… பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் தான் தனிமையில் தன் கணவனின் இறுதி யாத்திரியை பார்த்துக்கொண்டிருந்தார்.
கலவையைக் குறைக்கும் வழிகளில் ஒன்று கண்ணீர். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். வாய்விட்டு அழுதால் கவலையும் விட்டுப் போகும். ஆனால் ராணி அழத்தயாரில்லை. அழுது தன் கவலையை அனுப்பிவிட அந்த அம்மையார் விரும்பவில்லை. அது கவலையல்ல. காதலின் இன்னொரு வடிவம் அது. எதுவுமே நிரந்தரமற்றதான இந்த உலகத்தில் துணையற்றுப்போகும் காலமும் வருமென்று தெரிந்தும் தானே காதல் செய்கிறோம். காதலின் நிலைகளில் இதுவும் ஒன்று என்பதை 74 வருடக்காதலி உணராவிட்டால் யார் உணர்வார்கள்? அந்த 74 வருட நினைவுகளுடனேயே அவரின் எஞ்சிய காலங்கள் கழிந்து போகும். அதனால்த்தான் அவர் அழவில்லை என்று நினைக்கிறேன்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழராகிய எமக்கே தனித்துவமான பண்பாடென்று பெருமை பாடிக்கொண்டுள்ள எம்மில் உடலாலும் உள்ளத்தாலும் களங்கப்பட்டவர்கள் பலர். மேலைத்தேய கலாசாரத்தை கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் எமக்கு அங்கே ஒரு தம்பதியர் தாம்பத்தியம் என்றால் என்ன என்பதை காட்டியிருக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அமையாத வரைதான் இராமனும் சீதையும் என்பார்கள். எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாத பிரித்தானிய அரச வம்சம். ஆனால் ஈருடலும் ஓருயிருமாக 74 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த காதலர்களின் கதையைத்தான் நான் சொல்லப்போகிறேன்.
ஆண்வழி பதவி என்றிருந்த அரச வம்ச ஆட்சி முறையில் எலிசபெத் மகாராணியானதும் காதலால்த்தான்! பிலிப் இளவரசர் ஆனதும் காதலால்த்தான்! கடைசிவரை அந்த சோடி இணை பிரியாமல் வாழ்ந்ததும் காதலால்த்தான்! மேலைத்தேய கலாசார நுரைகளுக்குள் மறைந்து கிடக்கும் இந்த சுவையான காதல் கப்பச்சினோவை பருகத்தயாராக இருங்கள்.
அடுத்த இதழில் சந்திப்போம்.
இப்படிக்கு,
சாவித்துணை (key tag)